நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கொள்கொம்பா? கொழுகொம்பா?

மண்ணிலிட்ட வித்து முளைத்து மூன்றிலை விட்டு மெல்ல வளர்ந்து கொடியாகிப் படரத் தொடங்குகையில் அது பற்றிக்கொள்வதற்கு ஆதரவாக ஒரு கொம்பினை நடுவதுண்டு. இதற்குச் "சுள்ளிக்கால்' என்று பெயர். நாட்டார்

News image
Updated On :27 அக்டோபர் 2018, 10:44 pm

மண்ணிலிட்ட வித்து முளைத்து மூன்றிலை விட்டு மெல்ல வளர்ந்து கொடியாகிப் படரத் தொடங்குகையில் அது பற்றிக்கொள்வதற்கு ஆதரவாக ஒரு கொம்பினை நடுவதுண்டு. இதற்குச் "சுள்ளிக்கால்' என்று பெயர். நாட்டார் வழக்கு இது. இலக்கியங்களில் இது கொள்கொம்பு என்றும்,  கொழுகொம்பு என்றும் வழங்குகிறது. 

"கொழுவுகோல்' என்று வரதராச பாகவதமும் "கொழுந்தின் கால்' என்று யாழ்ப்பாணம் நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழகராதியும் குறிப்பிடுகின்றன. இங்குக் கொம்பு, கோல் என வருவன யாவும் கொடிக்குச் சார்பாக ஊன்றப்பெறும் கழியினைக் குறிப்பனவே.

"கொள்கொம்பு' என்னும்போது தளர்நிலையில் உள்ள கொடி சார்ந்து பற்றிக் கொள்வதற்கு உதவும் கொம்பு என்பது பொருள். இதுவே உகரச் சாரியை பெற்றுக் கொளுகொம்பு (கதிரைவேற்பிள்ளை அகராதி, ப.528) எனவும் வழங்கும்.

இனிக் "கொழுகொம்பு' என்னும்போது, படரும் கொடியைக் கொழுவி விடுவதற்கு வாய்ப்பாக உள்ள கொம்பு என்பது பொருள். "கொழுவுகோல்' என்பதாலும் இப்பொருளே உணர்த்தப்படுதல் காண்க. இவை இரண்டனுக்குமான இலக்கிய ஆட்சி தமிழில் உண்டு. "வேதநறுங் கொடி படரும் கொழுகொம்பே' என்பது சைவ எல்லப்ப நாவலரின் "செவ்வந்திய புராணம்' (திருமலைச்சருக்கம், 9).

"தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல்
பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே' (99)
என்பது கந்தரலங்காரம்.
"ஆவிக்கோர் பற்றுக் கொம்பு
நின்னலால் அறிகின்றி லேன்யான்' (10-10-3)
என்பது நம்மாழ்வாரின் திருவாய்மொழி. இங்குப் 

பற்றுக் கொம்பு என்பதற்குக் கொள்கொம்பு என்றே பொருள் கொள்கிறார் ஈட்டின் உரையாசிரியர் நம்பிள்ளை. "கொடி, கொள்கொம்பை நீக்கி நிற்க 
வல்லதோ?' என்பது அவர் கூற்று.

திருப்பாவை ஆறாயிரப்படி உரையில் (ப.215, சுதர்சனர் பதிப்பு, 1991) "எங்களையும் கூட்டிக்கொண்டு உனக்குக் கொள்கொம்பான கிருஷ்ணனை அநுபவிக்கப் பாராய்' என்கிறார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.
கம்பருடைய இராம காதையிலும் கொள்கொம்புக்கு இடமுண்டு. இராவணன் சீதையைக் கவர்ந்து செல்கையில்,  சடாயு குறுக்கிட்டு அவனொடு போர் புரிகிறான். அப்போது இராவணன் எறிந்த ஆயுதத்தால் சடாயு வெட்டுண்டு வீழவும் சீதை துயரத்தில் ஆழ்கிறாள்.

"நல்லவன் தோற்பதே, நரகன் வெல்வதே' என்று சீதை புலம்பும் நிலையில், கவிக்கூற்றாக அவளின் அவல 
நிலையைப் பின்வருமாறு சித்திரிக்கிறார் கவிச்சக்கரவர்த்தி.

"... சோர்ந்து நைவாள்... ஒரு சார்பு காணாள்,
கொள்கொம்பு ஒடியக் கொடிவீழ்ந்தது போல்
குலைந்தாள்'         (3446)

என்பது பாடல். இங்கே சீதையின் ஆதரவற்ற நிலைக்கு ஓடிவந்த கொள்கொம்பே உவமையாகிறது. ஆழ்வார்களின் அருளிச்செயல் முழுமைக்கும் பொருள் விரித்த உரைச் சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை தம் உரைகளில் கொள்கொம்பு, கொழுகொம்பு என்னும் இரண்டையுமே எடுத்தாண்டிருக்கிறார்.

திருப்பாவை 11-ஆவது பாசுரத்தில் பெண்ணொருத்திக்குக் கணவனே பற்றுக் கோடாவான் என்பதனை, "பர்த்தாவாகிய கொழுகொம்பை ஒழிய வாழாமையும்' என்னும் தொடரால் விளக்குகிறார். கொம்பு கண்ணுக்குத் தெரியாதவாறு கொடி நன்கு தழைத்து அதனை மூடிக்கொண்டிருப்பதைக் "கொள் கொம்பு மூடுதல்' என்றும் குறிப்பிடுகிறார் அவர். தோட்டந்துரவுகளிலும் இயற்கைச் சூழலிலும் நம் கண்ணுக்குத் தென்படும் இக்காட்சியை ஆழ்வார் பாசுரக் கருத்தை விளக்கிப்பேசுதற்கு அவர் பயன்படுத்துகிறார்.
இலங்கையில் பகைவர்களாகிய அரக்கர்கள் இருக்குமிடம் எளிதில் கண்ணுக்குத் தோன்றாதபடி அரண்கள் மிகுந்திருந்தனவாம். அது, எதைப்போல எனில், "பற்றிப் படர்வதற்கு ஊன்றப்படும் கொள்கொம்பு வெளியில் தோன்றாதபடி கொடியானது அதனை மூடிப் படர்ந்து தழைத்து வளர்ந்திருப்பது போல' என்கிறார். இதனைக் "கொள்கொம்பு மூடிற்று' என்னும் செறிவுத் தொடரால் உணர்த்துகிறார்.
பெரிய திருமொழிப் பாசுர விளக்கத்திலும் (1-2-2), திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி உரை (2-2-5) விளக்கத்திலும் இத்
தொடர் இடம்பெற்றிருப்பதை அறியலாம். ஆக,  கொள்கொம்பு, கொழுகொம்பு என்னும் இரண்டுமே தமிழ் நூல்களில் ஏற்கப்பட்டவை என்பது தெளிவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.