கவிக்கூற்று

காப்பியப் புலவர்கள் தாம் பாடிவரும் செய்திகள் முடிந்த நிலையில், அடுத்ததாக இன்ன செய்தியைச் சொல்லத் தொடங்குகிறேன் என்று ஒரு பாடலில் குறிப்பிடுவர். அது "கவிக்கூற்று' எனப்படும்.
கவிக்கூற்று

காப்பியப் புலவர்கள் தாம் பாடிவரும் செய்திகள் முடிந்த நிலையில், அடுத்ததாக இன்ன செய்தியைச் சொல்லத் தொடங்குகிறேன் என்று ஒரு பாடலில் குறிப்பிடுவர். அது "கவிக்கூற்று' எனப்படும்.

துரியன் அவையில் விவாதம் முடிந்து, அரசர்கள் புறப்பட்டனர். அந்நிலையில், "விரவு பைந்துளப மாலையான் விதுரன் மனையில் உற்றது விளம்புவாம்' (கிருட்டிணன் தூதுச் சருக்கம்-140) என்பது கவிக்கூற்றாகும். அதாவது, புலவரது சொந்தக் கருத்தாகும். இது கதையை நடத்திச் செல்லும் ஓர் உத்தியாகும்.

எனினும், வில்லிபுத்தூராழ்வார் கவிக்கூற்றாக நான்கு பாடல்களைப் பாடியுள்ளார். பெரும்போர் செய்த வீர அபிமன்யு 13-ஆவது நாள் போரில் சூழ்ச்சியாகக் கொல்லப்பட்டான்.  அந்நிலையில் தருமர், வீமன் முதலியோர் அது கேட்டுக் பெருந்துயரம் அடையும் முன்பே, வில்லிபுத்தூராழ்வார் தம் மனக் கண்ணில் அப்பொழுதுதான் அபிமன்யு இறந்ததாகக் கருதிக் கலங்கிப் பாடுகிறார். அவரது பேதை மனம் இப்பொழுது அபிமனை யாராவது எழுப்பமாட்டார்களா? என எண்ணுகிறது. 

தாய் மாமன் கண்ணபிரான் தெய்வமாயிற்றே, அவர் எழுப்பக்கூடாதா? ஆனால், கண்ணன் மாயன். தேவர்க்கெல்லாம் தலைவனாகிய இந்திரன் பாட்டனாயிற்றே! அவன் எழுப்பக்கூடாதா? ஒரு கோடி அரசர் உறவாய் வந்துள்ளனரே, என்ன பயன்? இளங்குமரனாகிய அபிமன்யு செயத்திரதனது கையால் இறப்பானாம் எனக் கலங்கிய உள்ளத்துடன் பாடி வரும் நூலாசிரியர், இறுதியில் மனத்தெளிவடைந்து, செய்கைகள் வெவ்வேறாக நிகழ்ந்த காலத்தில் இவ்வுலகில் அவ்விதியை வெல்லவல்லவர் யாவர் உளர்? என ஒருவாறு முடிக்கிறார்.

"மாயனாம் திருமாமன் தனஞ்செயனாம் 
திருத்தாதை வானோர்க் கெல்லாம்
நாயனாம் பிதாமகன் மற்றொரு கோடி 
நராதிபராம் நண்பாய் வந்தோர்
சேயனாம் அபிமனுவாம் செயத்திரதன் 
கைப்படுவான் செயற்கை வெவ்வேறு 
ஆயநாள் அவனிதலத்து அவ்விதியை 
வெல்லும் விரகார் வல்லாரே'  (வி.பா. 13ஆம் போ.ச. 131)

அடுத்து மனத்தெளிவுற்ற நிலையில் இவனது தேர் அழியலாமோ? கேடகத்தையும் வாளையும் ஏந்திய கைகள் அறுபடலாமோ? வஞ்சனையான ஒரு கொடிய கதாயுதத்தால் சிந்து தேசத்தரசன் இவனைக் கொல்வது தகுதியோ? அந்தோ! அந்தோ!  இவன் செய்த போரில் அருகில் ஒருவரும் துணை வராதிருத்தல் தகுதியோ? அந்தோ! அந்தோ! என வருந்து
கிறார் (பா-132). அடுத்த பாடலில், 

"கன்னனையும் தேரழித்தான் கந்தனிலும்
வலியனே அந்தோ அந்தோ
மன்னவர் ஐவரும் இருக்க மைந்தன் உயிர்
அழிவதோ அந்தோ அந்தோ
பொன்னுலகுகோர் வியந்துருகிப் புந்தியினால்
மலர் பொழிந்தார் அந்தோ அந்தோ
அன்ன நெடுந்துவசன் இவற்காயுமிகக் 
கொடுத்திலனே அந்தோ அந்தோ'                         (பா-133)

எனப் புலம்புகிறார் வில்லியார். இன்று நடந்த போரில் முதலில் அபிமன்யுவுடன் போர் செய்த கர்ணன் இவனது அம்பைத் துணித்தான்; வில்லையும் தேரையும், கொடியையும் அறுத்தான்; இவ்வாறு இவன் வலிமையை அழித்தான்; இடையில் போர் செய்த வில்லாசிரியரான துரோணர் ஒரு கையைத் துணித்தான்; அதன் பின் இறுதியாகப் போர் செய்த செயத்திரதன் இவனைத் தலைதுணித்தான் (இங்ஙனம் பலரும் ஒருங்குகூடிப் பொருது அழிக்கப்பட்ட) இவ் அபிமன்யுவின் வீரம் சொல்ல முடியுமோ? (முடியாது என்பதாம்).

"சரமறுத்தான் வில்லறுத்தான் தேரறுத்தான்
கொடியறுத்தான் சமர பூமி
உரமறுத்தான் முதற்பொருத உதயதினகரன்
மைந்தன் உடன்று சீறிக்
கரமறுத்தான் நடுப்பொருத கார்முகத்தின்
குருவிசயன் காளை தன்னைச்
சிரமறுத்தான் பின்பொருத செயத்திரதன்
இவன் வீரம் செப்பலாமோ?                        (பா-134)

கவிக்கூற்றாக இப்பாடல்களைப் பாடி முதலில் வில்லியார் அழுது, ஒருவாறு மனம் தேறி, பின்பு அபிமன்யு இறந்தது கேட்ட பகைவர் செயலைக் கூறத் தொடங்குகிறார். "ஒட்ட உணர்தல்' என்னும் நிலையில் அழுது பாடிய புலவரின் பாடல்கள் நம்மையும் உருக்குகின்றனவே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com