
சங்ககால மகளிர் இல்லற மாண்பினை இனிதே காப்பதிலும் சிறந்து விளங்கி இருக்கிறார்கள். இக்கருத்தை, போதனார் இயற்றிய நற்றிணை 110-ஆவது பாடல் விளக்குகிறது. மீள் பார்வை பார்க்க வேண்டிய அற்புதப் பாடல் இது!
செல்வச் சிறுமி ஒருத்தி, செவிலித்தாய் தேன் கலந்த பாலை ஒரு கிண்ணத்தில் ஊற்றி எடுத்துக்கொண்டு அவளுக்கு உண்பிக்க முயற்சி செய்கிறார். சிறுமியை மிரட்டுவதற்கு அவர் கையில் ஒரு கோல். அது எப்படிப்பட்ட கோல்? அடித்தால் உடம்பில் சுற்றிக் கொள்ளும்படியான மெல்லிய கோல். நுனிபட்டு, குத்தி விடாதபடிக்கு நுனியில் பூவோடு கூடிய "புடைப்பச் சுற்றும் பூந்தலைச் சிறு கோல்'.
ஒரு கையில் கிண்ணத்தில் தேன் கலந்த பால், மறு கையில் புடைப்பச் சுற்றும்
பூந்தலைச் சிறு கோல். எவ்வாறாயினும் பாலை அந்தச் சிறுமிக்கு ஊட்டிவிட
முயற்சி செய்யும் செவிலித்தாய்; எல்லோரையும் ஏமாற்றிவிட்டு மல்லிகைப் பந்தலுக்குள் ஓடி ஒளிந்துகொண்டு உண்ண மறுக்கும் சிறு விளையாட்டு.
பொற்கிண்ணம், பூந்தலைச் சிறு கோல் இவற்றோடு காட்சிதரும் செவிலித் தாய். எல்லோரையும் ஓடிக் களைக்க வைத்துவிட்டு பந்தலில் மறைந்துகொண்டு பால் குடிக்க மறுக்கும் சின்னஞ்சிறு பெண். இவை எதைக் காட்டுகின்றன?அந்தப் பெண் வளமான குடும்பத்தில் வளர்ந்தவள் என்பதை அல்லவா காட்டுகின்றன!
அப்படிப்பட்ட அவள், ஒருவனைக் காதலித்தாள்; அவனோடு உடன்போக்கு சென்றுவிட்டாள். போனவள் எப்படி இருக்கிறாள் என்று பார்த்து வரச் சொல்லி பெண்ணின் பெற்றோர் செவிலியை அனுப்புகிறார்கள். அங்கு சென்ற செவிலி கண்டது எதனை? குடும்பத்தில் வறுமை. எப்படிப்பட்ட வறுமை?
"நுணங்கு அறல்போலப் பொழுது மறுத்து உண்ணும்' நிலைமை. ஆற்றோரம் அலை அடித்த கருமணல் எவ்வாறு மேடும் பள்ளமுமாக இருக்குமோ, அதுபோல ஒரு பொழுது உண்டால் மறு பொழுது உண்பதற்கு இல்லாத வறுமை நிலை கண்டு வருந்திய செவிலி, நிலைமையைப் பெற்றோருக்குத் தெரிவித்தாள். மகளின் துன்பம் தந்தையை வருத்தியது. பெருஞ்செல்வன் அல்லவா? மகளின் குடும்பத்துக்குத் தேவையானவற்றை வண்டிகளில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
என்ன செய்தாள் வறுமையில் வாடிய முன்னாள் செல்வச் சிறுமி? அவற்றை ஏற்க மறுத்து, தந்தையிடமே அதைத் திருப்பி அனுப்பினாள். தந்தை அனுப்பிய பொருள்களை ஏற்பது கணவனின் தன்மானத்திற்கு இழுக்கு என்று அவள் நினைத்தாள்.
பெற்றோர் மகளை எண்ணி வருந்தினார்களா என்றால், இல்லை. மாறாக மகளை நினைத்து வியக்கிறார்கள். தேன் கலந்த பாலையும் உண்ணாமல் அடம்பிடித்த, செல்வச் சிறுமி, இன்று இவ்வாறாக அருஞ்செயல் புரிகின்ற அளவுக்கு "அறிவையும் ஒழுக்கத்தையும் எங்கே கற்றனள்?' என்று எண்ணிப் போற்றுகிறார்கள்.
வீட்டிலிருந்து வாங்கிவரச் சொல்லி மனைவியை விரட்டும் கணவர்கள் நிறைந்த இந்நாளில், வீட்டிலிருந்து வந்ததையும், திருப்பி அனுப்பும் கணவனும் மனைவியும் வாழ்ந்த காலத்தை எண்ணிப் பெருமூச்சு வேண்டுமானால் நாம் விடலாம்.
"... ... ... ...
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்,
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்,
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல,
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே? (நற்-110)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.