இந்த வாரம் - கலாரசிகன் (23.08.2020)

"பாரத ரத்னா' பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக இருந்தபோது, அவரைச் சந்திக்க "ராஷ்டிரபதி பவன்' சென்றிருந்தேன்.
இந்த வாரம் - கலாரசிகன் (23.08.2020)

"பாரத ரத்னா' பிரணாப் முகர்ஜிகுடியரசுத் தலைவராக இருந்தபோது, அவரைச் சந்திக்க "ராஷ்டிரபதி பவன்' சென்றிருந்தேன். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னிடம் தனிப்பாசம் வைத்திருப்பவர் என்பதால், தில்லிக்குப் போகும் போதெல்லாம் அவரை சந்திப்பதை வழக்கமாக்கி இருந்தேன்.

2015-ஆம் ஆண்டில் ஒரு நாள். அப்போதுதான் அவர் தனது அரசியல் அனுபவங்களைத் தொகுத்துப் புத்தகமாக எழுதிக் கொண்டிருந்தார். அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் பரபரப்பான அரசியல் வாழ்க்கையில் இருந்ததால் புத்தகம் எழுதுவது குறித்து சிந்திக்கக்கூட அவருக்கு நேரம் இல்லாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

தட்டச்சு செய்யப்பட்டிருந்த புத்தகத்தின் சில பகுதிகளை அவர் என்னிடம் தந்து படித்துப் பார்க்கச் சொன்னார். அதைத் தொடர்ந்து அவர் சொன்ன வார்த்தைகள் இவை: ""விரைவிலேயே புத்தகத்தை வெளியிடப் போகிறேன். இதை இந்தியிலும் வங்காள மொழியிலும் மொழிபெயர்க்க இருவரிடம் பணித்திருக்கிறேன். தமிழில் நீங்கள்தான் மொழிபெயர்க்க வேண்டும்'' என்றபோது எனக்கு வியர்த்து விட்டது.

"சாவி' இதழில் பணிபுரியும்போது, "கிருஷ்ணப் பருந்து' உள்ளிட்ட சில தொடர்களை நான் மொழிபெயர்த்திருக்கிறேன் என்றாலும், கடந்த பல ஆண்டுகளாக மொழிபெயர்ப்புப் பணியில் நான் ஈடுபடவில்லை என்பதால் ஏற்பட்ட கலக்கம்தான் அதற்குக் காரணம். அடுத்த சில மாதங்களில் அவரது முதல் புத்தகம், "தி ட்ரமாடிக் டிகேட்ஸ்' (பரபரப்பான பத்தாண்டுகள்) வெளியானது. அவர் இரண்டு பிரதிகளை எனக்குத் தந்தார்.

பிரணாப் முகர்ஜியின் புத்தகங்களை நான் மொழிபெயர்ப்பதற்கான முறையான உரிமத்தை "நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்புப் புலம்' பெற்றது. மொழிபெயர்ப்புப் பணியில் மறைந்த எழுத்தாளர் சாருகேசியையும் இணைத்துக் கொண்டேன். பிரணாப் முகர்ஜியை சந்திக்கும் போதெல்லாம் ""நான் குடியரசுத் தலைவராக இருக்கும்போதே உங்கள் மொழிபெயர்ப்பு முடிந்துவிடுமா இல்லை முன்னாள் குடியரசுத் தலைவரான பிறகுதான் முடிப்பீர்களா?' என்று கிண்டலாகக் கேட்பார்.

அவரது அடுத்தடுத்த இரண்டு புத்தகங்கள் "தி டர்புலன்ட் இயர்ஸ்' (குழப்பம் நிறைந்த ஆண்டுகள்) "தி கோயிலிஷன் ஈரா' (கூட்டணி காலகட்டம்) வெளியாகின. அவரது பதவிக்காலமும் முடிவுக்கு வந்துவிட்டது. நண்பர் சாருகேசி இயற்கை எய்திவிட்டார். அதுகுறித்து நான் இந்தப் பகுதியில் பதிவும் செய்திருந்தேன்.

என்னுடன் இணைந்து மொழிபெயர்க்க உதவிக்கரம் நீட்டினார் டாக்டர் சுதா சேஷய்யன். அவரும் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தரானது முதல், மொழிபெயர்ப்புப் பணியில் மீண்டும் தொய்வு ஏற்பட்டுவிட்டது.

ஆறேழு மாதங்களுக்கு முன்னால் தில்லி சென்றிருந்தபோது வழக்கம்போல அவரை சந்தித்தேன். ""நான் மொழிபெயர்ப்பு குறித்து உங்களிடம் எதுவும் கேட்பதாக இல்லை'' என்று அவர்சொன்னபோது, மிகுந்த வருத்தத்துடனும் குற்ற உணர்ச்சியுடனும் தலைகுனிந்து நிற்கத்தான் முடிந்தது. "அடுத்த முறை மொழிபெயர்ப்பு புத்தகத்துடன்தான் உங்களை சந்திக்க வருவேன்'' என்று ஈன ஸ்வரத்தில் அவரிடம் கூறி விட்டு என்னை சமாதானம் செய்து கொண்டேன்.

தனது புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பைப் பார்ப்பதற்காகவாவது, பிரணாப் முகர்ஜி உடல்நலம் தேறி இல்லம் திரும்ப வேண்டும். அவர் நலம் பெறுவார், பெற வேண்டும்!

-------------------------------------------------------------

நான் கொவைட்-19 சிகிச்சையில் கிண்டி அரசு மருத்துவமனையில் இருந்தபோது, படிப்பதற்காக நண்பர் கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம் அனுப்பித் தந்திருந்த புத்தகங்களில் ஒன்று "இதயத்திலிருந்து...'. மதுரை வடமலையான் மருத்துவமனையில் இதய சிகிச்சை மருத்துவராகப் பணியாற்றுபவர் பி.ஆர்.ஜே. கண்ணன். அவரால் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் கதையுமல்ல, மருத்துவம் தொடர்பான கட்டுரையுமல்ல, ஒரு மருத்துவரின் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்ட அனுபவங்கள்...!

மருத்துவராகப் பணிபுரிபவர்கள் சந்திக்கும் நோயாளிகளின் பல்வேறு தரப்பட்ட பிரச்னைகளும், அவற்றை அந்த மருத்துவர் எதிர்கொள்ளும் விதமும் கற்பனைக் கதைகளை எல்லாம் அகற்றி நிறுத்தி வைக்கும் அளவிலான சுவாரஸ்யங்கள் என்பதை "இதயத்திலிருந்து...' உறுதிப்படுத்துகிறது. வெறும் சம்பவங்களின் தொகுப்பல்ல இது. நிஜ வாழ்க்கையின் நிஜங்களை உணர்த்தும் பதிவுகள்.

மருத்துவர் கண்ணன் குறித்த சில வியப்பூட்டும் தகவல்களை அணிந்துரை வழங்கி இருக்கும் எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி தெரிவிக்கிறார் - பத்து கார்கள் வைத்துக் கொள்ளும் வசதி இருந்தும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக சைக்கிளில் பயணிப்பவர்; விமான நிலையத்திலிருந்து வீடு திரும்ப வாடகைக்கார் தேடாமல் அவனியாபுரம் வரை நடந்து சென்று பொதுப் போக்குவரத்தில் பயணிப்பவர்.

இதில் அவரால் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றும், நமது இதயத்தைத் தொடுகின்றன. மருத்துவராக அவரது இதயத்தைத் தொட்ட அல்லது அவரை சிந்திக்க வைத்த நிகழ்வுகளை அவர் தொகுத்திருக்கிறார் என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.

மணம் செய்து கொள்ள முடியாது என்று மருத்துவம் அறுதியிட்டுக் கூறிய, பிறவியிலேயே இதய நோய் உள்ள பெண் ஒருவர் காதல் வயப்படுகிறாள். ரகசியமாகத் திருமணமும் செய்து கொள்கிறாள். அவரது நோயைக் காதல் வெல்கிறது. அவர் மணமுடித்தது மட்டுமல்ல, நல்லபடியாகக் குழந்தையும் பெறுகிறாள். "திருவிளையாடல்' என்று தலைப்புக் கொடுத்திருக்கும் கண்ணன் பதிவு செய்திருக்கும் சம்பவத்தின் கதாபாத்திரங்கள் அனைவரும் முஸ்லிம் சமூகத்தினர்.

தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள் என்றால், அவர்கள் பணத்துக்காக மட்டுமே செயல்படுபவர்கள் என்கிற கருத்து மேலோங்கி இருக்கிறது. எனினும் சில விதிவிலக்குகள் இருக்கத்தானே செய்கின்றன. "தீர்ப்பு' என்கிற தலைப்பில் மருத்துவர் கண்ணன் பதிவு செய்திருக்கும் சம்பவம் ஒருபுறம் நெகிழ வைக்கிறது, மறுபுறம் நோயாளிகளின் உறவினர்களுடைய மனநிலையையும் பிரதிபலிக்கிறது. அதில் வரும் வரிகள் இவை -

""நாம வேலை பார்த்தா பணம் கிடைக்கிறது. ஆனா நாம பணத்துக்காக மட்டுமா வேலை பார்க்கிறோம்? வேலையை நேசிக்கிறதிலேயும், நம்மால மத்தவங்க உயிரையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் பொறுப்பு இருக்கிறதாலேதான். சரிதானே?'' என்கிற மருத்துவர் கண்ணனின் வரிகளை இன்றைய தலைமுறை மருத்துவர்கள் மனதில் பதிவு செய்து கொண்டால் நன்றாக இருக்கும்.


இந்த வாரக் கவிதை இதுதான்-

இந்தியாவின் இன்றைய
அத்தியாவசியத் தேவை
என்ன என்றார்கள்?
"காந்தி' என்றேன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com