நீர்வழிப் படூஉம் புணைபோல...

​இன்றைய சமூகம் இலக்கணத்தின் அவசியத்தை மறந்தே வருகிறது.
நீர்வழிப் படூஉம் புணைபோல...


இன்றைய சமூகம் இலக்கணத்தின் அவசியத்தை மறந்தே வருகிறது. ஆற்று நீர்வழி ஓடும் தெப்பம் இயற்கையாகவும், தடையின்றியும் செல்வதுபோல இலக்கணத்தைப் புரிந்துகொண்டு ஓர் இலக்கியத்தை அணுகும்போது, அவ்விலக்கியம் தரும் பொருள் இயல்பாக இருப்பதோடு, அப்பொருள் தரும் இன்பம் வியப்பில் ஆழ்த்துவதாகவும் இருக்கும். மேலும் சமய, தத்துவ நூல்களையும் எளிமையாகப் புரிந்துகொள்ள இலக்கணம் வழிவகுப்பதை நம்மால் உணரமுடியும்.

நாம் அனைவரும் அறிந்த, மகாகவி பாரதியாரின் "விநாயகர் நான்மணிமாலை'யில் உள்ள ஒரு பாடலில் இலக்கணத்தைப் பொருத்தி, அதன்வழி வெளிப்படும் பொருளைக் காண்போம்.  

"நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றுஞ் செய்' (25)

இப்பாடலுக்கு இதுநாள் வரை, "தனக்குத் தொழில் கவிதை எழுதுவதென்றும்; அதன்வழி நாட்டுக்கு உழைப்பதென்றும் பாரதி கூறியுள்ளார்' என்றே பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

விடுதலைப் போராட்டக் காலகட்டத்தில் எழுதப்பட்ட இப்பாடல், தன்னிலையில் மட்டுமே நின்று பாடப்பட்டுள்ளதாகக் கூறிவருவது பொருத்தமாகத் தோன்றவில்லை. எனவே, அப்பாடல் குறித்து இலக்கண அடிப்படையில் சிந்தித்துத் தெளிவு பெறுதல் நலம் பயக்கும்.

தமிழில் இடப்பெயர்களைத் தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவகையாகப் பகுத்துள்ளனர். இவற்றுள் தன்மை என்பது பேசுபவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் குறிக்கும்.

தன்மை

ஒருமை  -நான், யான்
பன்மை - நாம், நாங்கள், யாம், யாங்கள்

தன்மைப்பன்மை...

உளப்படுத்தும் தன்மைப் பன்மை - நாம் தமிழர்கள்
உளப்படுத்தாத் தன்மைப் பன்மை - நாங்கள் தமிழர்கள்

பேசுபவர் முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு பேசுவது உளப்படுத்தும் தன்மைப்பன்மை; பேசுபவர் முன்னிலையாரைத் தவிர்த்துப் பேசுவது உளப்படுத்தாத் தன்மைப்பன்மை. இந்நிலையில் இதை நிறுத்தி, மூவிடப் பெயர்கள் உருபை ஏற்கும்போது குறுகும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மேற்கூறிய பாடலில், "நமக்குத் தொழில் கவிதை' என்பதில் "நமக்கு' என்ற சொல்லையும், "நங்குடியை வாழ்விப்பான்' என்பதில் "நம் (நங்)' என்ற சொல்லையும் எடுத்துக் கொள்வோம்.

நாம்+கு = நமக்கு - வேற்றுமை உருபை ஏற்றுக் குறுகியது. 
(நாம்) நம் + குடி = நங்குடி - மவ்வீற்றுப் புணர்ச்சி. 

இவ்விரண்டின் வேராக இருப்பது "நாம்' என்பதே. நாம் என்பது உளப்படுத்தும் தன்மைப்பன்மை. இப்பொழுது நம்மால் ஒரு முடிவுக்கு வரமுடிகிறது. அதாவது, பாரதி இப்பாடலை உளப்படுத்தும் தன்மைப்பன்மையிலேயே பாடியிருக்கிறார் என்பதே அம்முடிவாகும். மேலும், இக்கூற்றை உறுதிப்படுத்த அப்பாடலின் ஈற்றடியையும் துணையாகக் கொள்ளலாம்.

"சிந்தையே இம்மூன்றுஞ் செய்' என்று இப்பாடலின் ஈற்றடி கட்டளைத் தொடரில் அமைந்துள்ளது. நம் முன்னிலையில் இருப்பவரை ஒரு செயலைச் செய்யுமாறு உறுதித் தன்மையில் கூறுவதற்குப் பயன்படுவது கட்டளைத் தொடர். மேலும், அவ்வடியில் உள்ள "சிந்தையே' என்ற சொல் எது நன்று?, எது நன்றன்று? என்று சிந்தித்துப் பகுத்தறியும் மனிதனையே குறிக்கிறது. இலக்கண அடிப்படையில் பார்ப்போமானால் சிந்தையே என்பது "சேய்மை விளி'யாகும். (விளி-அழைத்தல்) அவ்வாறு இருக்கையில், தன் கண்ணெதிரே உள்ள கண்ணுக்குத் தெரியாத அத்தனை கவிஞர்களையும் அழைத்து, நாம் ஒன்றிணைந்து நாட்டுக்கு உழைக்க வேண்டும் என்று உறுதித் தன்மையில் உரிமையோடு அழைப்பதைப் போல இப்பாடலைப் பாரதி பாடியிருப்பது தெளிவாகிறது.

யாப்பின் அடிப்படையில் இப்பாடலை அணுகுவதும், பொருள் தெளிவுக்குச் சிறப்பு சேர்க்கும். அதாவது, இப்பாடல் வெண்பா வகையைச் சார்ந்தது. வெண்பாவுக்குரிய ஓசை செப்பலோசை. "செப்பல்' என்பதற்கு,  "சொல்லுதல்' என்று பொருள். எனவே, மகாகவி பாரதி தன் எண்ணத்தை, தன்னைச் சார்ந்த தன் கவிஞர்களுக்கு உறுதிபடச் செப்பினார் என்று பொருள் கொள்ளவும் இப்பாடல் இடமளிக்கிறது.

மேலும், "செப்பல்' என்பதற்கு, "விடைகூறுதல்' என்றும் பொருள் உண்டு. கேள்வியை "வினா' என்றும், விடையை  "செப்பு' என்றும் இலக்கண நூல்கள் கூறுகின்றன. வெண்பாவில் முன்னிரண்டடி வினாவாகவும், பின்னிரண்டடி விடையாகவும் தனிச்சீரில் ஒரு நிறுத்தத்தைப் பெறும் வகையில் வெண்பா அமைந்திருக்கும். 

முதலிரண்டடியில், "நாட்டிற்காக உழைக்காமல் இருந்தால் நம் குடியின் நிலை என்னவாகும்?' என்ற வினாவை எழுப்புவதோடு, பின்னிரண்டு அடியில் நாட்டிற்கு உழைப்பின், "கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்' என்று பாரதி நம்பிக்கையோடு விடை கூறுகிறார் எனப் பொருள் கொண்டாலும் பிழையாகாது. இதுவரை கூறிய தரவுகளின்அடிப்படையில் இப்பாடலின் பொருளைக் கீழ்க்காணுமாறு தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

 நமக்கு, நாம் என்று உளப்படுத்தும் தன்மைப்பன்மையில் தன்னையும், தன்னைச் சார்ந்த கவிஞர் குழுவையும் சேர்த்தே பாரதி பாடியுள்ளார். 

 ஈற்றடியில் கட்டளைத் தொடரையும், விளிச் சொல்லையும் பயன்படுத்தி, கவிதை வழி நாட்டிற்கு உழைப்பது நம் அனைவருக்கும் உரிய கடமை என்று ஆணையிடுகிறார்.

 யாப்பு அடிப்படையிலும் முன்னிலையில் உள்ளவரை நோக்கி, செப்பும் வகையில் பாடுவதற்குரிய செப்பலோசையிலேயே பாடியிருக்கிறார்.

எனவே, "நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற் குழைத்தல்' என்ற பாடலுக்கு பாரதியார் தன்னிலையில் மட்டுமே பாடியிருக்கிறார் என்று எண்ணியிருப்பின் அது மாற்றத்திற்குரியது எனத் தெளியலாம்.

சங்க காலம் முதல் பாரதிக்கு முன்புவரை பெரும்பாலும் தன்மை ஒருமையிலும், முன்னிலையிலுமாகவே பாடல்கள் 
(நின், என், எம் (எங்), உம்) பாடப்பட்டுள்ளன. பாரதியே தன்மைப் பன்மையில் பாடும் மரபை ஏற்படுத்தி, ஒற்றுமைக்கு வலிமை சேர்ப்பதோடு, பின்வரும் கவிஞர்களுக்கும் வழிகாட்டியுள்ளார்.

இனி, செய்யுளானாலும் உரைநடையானாலும் அவற்றை இலக்கணத்தோடு பொருத்திப் படிப்பின் அதன் பொருளை முழுமையாக உணர்ந்து, இலக்கண - இலக்கிய இன்பத்தை ஒருசேரப் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com