

திருப்பாவை ஐந்தாம் பாசுரத்தில் பாவை நோன்பு நோற்கும் திருவாய்பாடிப் பெண்களுள் ஒருத்தி, பாவை நோன்பின் பயனைப் பற்றிப் பின்வருமாறு பேசுகிறாள்:
""நாம் நெடுநாளாகச் செய்துவந்த பிழைகள் இந்நோன்புக்கு இடையூறு ஆகிவிடுமோ? என்னும் ஐயம் வேண்டாம். பிழைகளைப் போக்கிக்கொண்டுதான் இந்நோன்பினைச் செய்ய வேண்டும் என்ற நியதியும் இல்லை. நாம் தூய மலர்களைத் தூவித் தொழுது கண்ணனுடைய திருப்பெயர்களை வாயினாற் பாடி, மனத்தினால் சிந்திக்க, முன்பே செய்த பிழைகளும் இனிமேல் செய்யவிருக்கிற பிழைகளும் உருவழிந்து போய்விடும்; எதுபோல எனில்,
"தீயினில் இட்ட பஞ்சு போல' என்கிறாள். பாலைப் பருகுபவருக்குப் பித்தம் தானாக நீங்குவதுபோல பாவங்களும் நீங்கிவிடும் என்பது கருத்து.
அந்நிலையில் யசோதையின் இளஞ்சிங்கமாகிய கண்ணனை, "மாயன், வடமதுரை மைந்தன், யமுனைத் துறைவன், ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கு' என அவனது ஊரும் பேரும் ஆறும் போன்றவற்றைச் சொல்லிப் புகழ்கிறார்கள் கோபியர்கள். அத்துடன் அமையாது திருவாய்ப்பாடியில் "கண்ணிநுண் சிறுத்தாம்பி'னால் யசோதையிடம் அவன் கட்டுண்டு ஏங்கி நின்ற எளிவை நினைத்து அவனுக்குத் தாமோதரன் என்று ஒரு புதுப் பெயரும் சூட்டுகிறார்கள்.
தாமம் - கயிறு; உதரம் -வயிறு, "யசோதை கட்டிய கயிற்றுத் தழும்பை வயிற்றில் உடையவன்' என்பது பொருள். இத்திருப்பெயர் "உயர்வற உயர்நலம் உடையவ'னின் எளிமைக்கு (சௌலப்யம்) அடையாளம் ஆகும். இங்ஙனம் யசோதைக்கு எளியனாய் அவன் அடங்கி நின்ற நிலை கண்டு, "என்ன நோன்பு நோற்றாள்கொலோ / இவனைப் பெற்ற வயிறுடையாள்?' (பெரியாழ்வார் திருமொழி 2-2-6) என்று ஊரார் அவளைக் கொண்டாடினார்களாம்.
இதனை எடுத்துக்காட்டும் உரையாசிரியர்கள், "நாட்டார் புகழ்ச்சியாலே பெற்ற வயிற்றுக்குப் பட்டம் கட்டியவன்' என்று எழுதுகிறார்கள். "குடல் விளக்கம் செய்த' என்பதற்கு அவர்கள் தரும் பொருள் இதுவே.
ஆக, "தாயாகிய யசோதைக்குப் புகழ்ச்சியை உண்டாக்கிய தாமோதரன்' என்று பொதுவாக இதற்குப் பொருள் காணப்படுகிறது. கண்ணனைப் பொருத்தவரை தாயர் இருவர்; ஒருத்தி பன்னிரு திங்கள் வயிற்றில் சுமந்த பாங்கினள்; அவள் தேவகி; மற்றொருத்தி பிறந்தது முதலாகப் பன்னீராண்டுகள் அவனைச் சீராட்டி வளர்த்த தெய்வ நங்கை யசோதை. ஒருத்திக்கு "அவதார ரஸ'த்தையும் மற்றொருத்திக்கு "லீலா ரஸ'த்தையும் கொடுத்தவன் கண்ணன்.
ஆண்டாளும் அதனை உணர்ந்து,
"ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர' (25) என்று பாசுரமிடக் காணலாம். வளர்ப்புத் தாயை நினைக்கும்போது பெற்ற தாயை நினைக்காமல் இருக்க முடியுமா? எனவே, "தாயை' என்பதனால் ஈன்ற தாயான தேவகியையும், "தாமோதரன்' என்பதனால் வளர்ப்புத் தாயான யசோதையையும் இப்பாடலடியால் ஒருசேரக் குறித்ததாகக் கொள்ளலாம்.
இடைநின்ற, "குடல் விளக்கம் செய்த' என்பதனைத் தாயர் இருவர்க்கும் கூட்டி அவர்களுக்குப் புகழ்ச்சியை உண்டாக்கியவன் என்றும் பொருள் காணலாம்.
இங்ஙனம் தொட்ட இடந்தோறும் ஆழ்பொருள் காட்டும் "திருப்பாவை' தமிழில் சுரந்த அமுதம் அன்றோ? இனி, நாமும் சூடிக் கொடுத்தாளின் பாசுரத்தைப் பாடிப் பயன் கொள்வோம்.
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோ தரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது,
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்; செப்பேலோர் எம்பாவாய்!
}முனைவர் ம.பெ.சீனிவாசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.