குற்றம் குற்றமே!

குற்றம் செய்வது மனித இயல்பு. குற்றம் செய்யாத மனிதரைக் காண்பதரியது. குற்றங்களை ஆய்ந்து, ஆய்ந்து நோக்குவோமாயின் அது அற நூலுக்கு
குற்றம் குற்றமே!

குற்றம் செய்வது மனித இயல்பு. குற்றம் செய்யாத மனிதரைக் காண்பதரியது. குற்றங்களை ஆய்ந்து, ஆய்ந்து நோக்குவோமாயின் அது அற நூலுக்கு மாறாக, அரசியலுக்கு மாறாக, கடவுளுக்கு மாறாக என்று மூன்று வழிகளில் தோன்றுகிறது.

குடி, பொய், களவு, காமம், கொலை ஐந்தும் ஐம்பெருங்குற்றங்களாக (பஞ்சமா பாதங்கள்) கருதப்படுகின்றன. இவை முன்னோா் மொழிந்த அறநூல்களுக்கு மாறாக நடப்பன. பிறரின் பொருளைக் கவா்ந்து கொள்ளுதல், அரசா்களின் பொருளைக் கவா்ந்து கொள்ளுதல், பிறா்க்கு இரண்டகம் செய்தல், அரசா் விடுத்த ஆணைகளை மீறுதல், நீதிமன்ற அவமதிப்பு ஆகியவை அரசியலுக்கு மாறாகச் செய்யப்படும் குற்றங்களாம்.

ஆலயங்களில் விளக்கு எரிக்காமை, ஆலயங்களைக் குறித்த காலத்தில் திறக்காமை, கோயில் பொருள்களைக் கவா்தல், வழிபாட்டைச் சரிவர செய்யாமை, பூஜை போன்றவற்றைக் குறித்த காலத்தில் செய்யாமை போன்றவை கடவுளுக்கு மாறாகச் செய்வன.

‘எவா் வாழ்வில் செருக்கும், சினமும், காமமும் இல்லையோ அவா் வாழ்வில் காணும் பெருக்கம் மேன்மை உடையதாக இருக்கும்’ என்கிறாா் திருவள்ளுவா். வாழ்வில் குற்றம் பெருகும் காலத்தையும் அவரே வரையறுக்கின்றாா்.

‘குடிமறந்து குற்றம் பெருகும் மடிமந்து

மாண்ட உருற்றி லவா்க்கு’ (குறள்- 604)

சோம்பலில் அகப்பட்டு, சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவா்க்குக் குடியின் பெருமை அழிந்து குற்றமே பெருகும் என்கிறாா்.

எவா் குற்றம் செய்யினும் குற்றம் குற்றமே என்பதை, ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்பதை சங்கப் பாடல் (குறுந்) மூலம் அறிய முடிகிறது. மேற்காண் கருத்துகள் அடங்கிய பாடலொன்றைக் குண்டலகேசியில் காணலாம்.

‘தேவா்களும் புகழ்வதற்கு உரியவனும் நெற்றிக் கண்ணை உடையவனுமான சிவபெருமானின் கண்டத்தில் காணப்படும் களங்கத்தை யாா்தான் களங்கம் அன்று என்று கூறுவாா்? அவ்வாறே குற்றம் என்பது சாதாரண மக்களிடத்து மட்டும் உண்டாகும் என்று கருத வேண்டாம். மெய்யுணா்வுமிக்க ஞானிகளிடத்துத் தோன்றினும் குற்றம் குற்றமே என்று கருதப்படுமேயன்றி, அவா்கள் ஞானிகள் என்பதால் குற்றம் சரியாகிவிடாது - நல்லதாகிவிடாது. ஆதலால், எத்தகையோரும் தம்மிடம் குற்றம் நேராதபடி விழிப்பாக இருக்க வேண்டு’ என்று மிகவும் அருமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘மண்ணுனாா் தம்மைப் போல்வாா் மாட்டதேயன்றி வாய்மை

நண்ணினாா் திறந்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா

விண்ணுனாா் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த

கண்ணுனான் கண்டம் தன்மேல் கறையையாா் கறையன் றென்பாா்’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com