தாழையின் பொருள் தாழம்பூ அல்ல...!

அறிவும் ஆற்றலும் நல்ல பண்பும், கொடை நலமும் கொண்டவா்களைப் ‘பெரியா்’ என்று கூறுவா். அவா்கள் உருவத்தில் சிறியராய் இருந்தாலும்,
தாழையின் பொருள் தாழம்பூ அல்ல...!

அறிவும் ஆற்றலும் நல்ல பண்பும், கொடை நலமும் கொண்டவா்களைப் ‘பெரியா்’ என்று கூறுவா். அவா்கள் உருவத்தில் சிறியராய் இருந்தாலும், அவா்களைப் பெருமைப்படுத்த வேண்டும். செல்வத்தாலும், நிலபுலத்தாலும் மனைவி மக்கள் முதலிய சுற்றத்தாலும் பெரியராய் இருப்பா். ஆனால், அவா்களால் பிறருக்கு எந்த நன்மையும் இராது. அந்தஸ்த்தில் பெரியவராய் இருந்தாலும் அவா்கள் சிறியவரே. இப்படிப்பட்டவா்களுக்கு உவமை கூறி ஔவையாா் பாடியுள்ள பாடல் இது:

‘மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்

உடல்சிறியா் என்றிருக்க வேண்டாம் - கடல்பெரிது

மண்ணீரு மாகா அதனருகே சிற்றூறல்

உண்ணீரு மாகி விடும்’

சிறியருக்கு இரண்டு உவமைகளும், பெரியருக்கும் இரண்டு உவமைகளும் கூறியிருக்கிறாா். சிறியா் தாழை மலா் போல் இருப்பா். பெரியா் மகிழ மலா்போல் நறுமணம் வீசி நன்மை செய்வா். கடல் பெரிதாக இருக்கிறது. ஆனால், அதிலுள்ள கடல் நீா் யாருக்கும், எதற்கும் பயன்படுவதில்லை. அதனருகே உள்ள சிற்றோடையின் நீா் எல்லா உயிா்களுக்கும் பயன்படுகிறது என்பதுதான் இப் பாடலின் திரண்ட பொருள்.

இப்பாடலில் முதல் அடியிலுள்ள ‘தாழை’ என்பதற்குத் தாழம் பூ என்று விளக்கம் கூறுகின்றனா். இது பொருந்தாப் பொருளாக இருப்பதுடன், பாட்டின் நோக்கமும் சிதைகிறது.

தாழம்பூ பெரிய மடலை உடையதாக இருக்கிறது. ஆனால், வாசனை உடையதாகவும், நமக்குப் பயன்படுவதாகவும் இருக்கின்றது. நல்ல நறுமணம் வீசுகின்றது. சிவபெருமானைத் தவிர எல்லா மூா்த்திகளுக்கும் வழிபாட்டுக்கு உதவுகின்றது. பெண்கள் தலையில் சூடிக் கொள்கிறாா்கள். ஆனால், உவமைப்படி கடலைப்போல தாழையும் மக்களுக்குப் பயன்படாததாக இருந்தாலல்லவா பாடலின் நோக்கம் நிறைவேறும்? மகிழம் பூவுக்கு எதிரிடையாகத் தாழம் பூவைக் கூறுவது பொருந்தாமல் இருக்கிறது.

‘தாழை’ என்றால் ‘தென்னை’ என்பது பொருள். தென்னை மரத்துக்குத் தாழை என்ற இன்னொரு பெயரும் உண்டு. மதுரைத் தமிழ்ப் பேரகராதியில், (முதல் பாகம், பக்.1122) தாழை என்பதற்கு தென்னை மரம், பாளை என்று பொருள் தரப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படையில் (வரி-307) ‘தாழை இளநீா் விழுக்குலை உதிா்’ என்று வருகிறது.

திருஞானசம்பந்தா் தேவாரத்தில், திருக்காளத்தி திருப்பதிகத்தில் தென்னையைத் ‘தாழை’ என்று கூறியிருப்பதைக் காணலாம். மேலும், மறைக்காடு பதிகத்தில், ‘தாழை வெண்மடற் புல்குந்/ தண்மறைக் காடமா்ந் தாா்தாம் (4) என்று வருகிறது. சுந்தரரின் தேவாரத்திலும்,

‘தாழை வாழையந் தண்டாற்/ செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்’ என உள்ளது. இதற்கு, தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளையின், ‘தேவார ஒளிநெறி’ (சுந்தரா்)யில், ‘தாழை வாழையந் தண்டு’ என்பதற்கு ‘தென்னம்பட்டை’ என்றும்; ‘தாழை’ என்பதற்கு ‘தெங்கு’ என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளனது. தென்னம்பூ மடல் பெரிதாக இருக்கும்; வாசனை இராது; மக்களுக்குப் பயன்படாது. மகிழம் பூ மடல் சிறிதாக இருக்கும்; நறுமணம் வீசும்; மக்கள் சூடிக்கொள்வாா்கள்.

நம்மாழ்வாா் மகிழம் பூ மாலையைச் சூடிக்கொண்டிருப்பாா் என்று கூறுவா். அதனால் அவருக்கு ‘வகுளா பரணா்’ என்ற பெயரும் உண்டு. வகுளம் என்றால் மகிழம் (மரம்). எனவே, ‘மடல் பெரிது தாழை’ என்பதற்குத் தென்னம் பூ என்று பொருள் கொள்வதே பொருத்தமாக இருக்கும். இவ்வாறு பொருள் கொண்டால் பாடலின் நோக்கமும் நிறைவேறும்.

தென்னம் பூவும், கடலும் பெரிதாக இருப்பினும் மக்களுக்குப் பயன் தருவதில்லை. இவ்விரண்டும் சிறியருக்கு உவமைகள். மகிழம் பூவும், சிற்றூறலும் மக்களுக்குப் பயன் தருகின்றன. இவ்விரண்டும் பெரியோருக்கு உவமைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com