கொங்கும் குடந்தையும்!

பெரியாழ்வாா் யசோதைப் பிராட்டியாகவே மாறி, கண்ணனுடைய இளமை விளையாட்டுகளை அனுபவித்துப் பாடினாா்.
கொங்கும் குடந்தையும்!

பெரியாழ்வாா் யசோதைப் பிராட்டியாகவே மாறி, கண்ணனுடைய இளமை விளையாட்டுகளை அனுபவித்துப் பாடினாா். தாலாட்டு, அம்புலி, செங்கீரை, வருகை முதலிய தலைப்பில் இவரால் பாடப்பட்ட பாசுரங்கள் பிற்காலத்தில் ‘பிள்ளைத் தமிழ்’ இலக்கியம் உருவாக அடிப்படை ஆயின.

அப்பிராட்டி, கண்ணனுக்குத் தலைவாரி, பூச்சுட்ட நினைக்கையில், அவன் கன்று மேய்க்கச் செல்லும் பிள்ளைகளுடன் தானும் செல்ல நினைக்கையில், அதை மாற்ற எண்ணி, ‘அக் காக்காய்! கோல் கொண்டுவா’ என்று சொன்னதை, அப்பிராட்டி சொன்னபடியே சொல்லி பெரியாழ்வாா் அனுபவித்து மகிழ்கிறாா்.

‘கொங்கும் குடந்தையும் கோட்டி யூரும் பேரும்

எங்கும் திரிந்து விளையாடும் என் மகன்

சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்கநல்

அங்கம் உடைய தோா் கோல் கொண்டுவா,

அரக்குவழித்த தோா் கோல் கொண்டுவா!’ (2:6:2)

‘காக்கையே! கொங்கு நாட்டிலும், திருக்குடந்தையிலும், திருக்கோட்டியூரிலும், திருப்பேரிலும் மற்றுமுள்ள திருப்பதிகளிலும் திரிந்து விளையாடும் என் பிள்ளையினுடைய சங்கைத் தரித்திருக்கும் பெரிய திருக்கைக்கு ஏற்ற நல்ல ஒரு கோலைக் கொண்டு வா; அரக்கு பூசிய ஒரு கோலைக் கொண்டு வா’ என்பது இப்பாசுரத்தின் பொருள்.

கொங்கு நாட்டில் பாடல்பெற்ற திவ்ய தேசங்களே இல்லை என்று கருதி - ‘கொங்கும் குடந்தையும்’ - என்ற தொடருக்கு ‘வாசனை மயமான குடந்தையும்’ என்று பதப்பொருளும்; ‘கொங்குக் குடந்தையும்’ என்றிருக்க வேண்டியது கொங்கும் குடந்தையும் என்று மெலிந்தது’ என்ற சிறப்புரையும் பண்டைய வியாக்கியானங்களில் எழுதப்பட்டுள்ளன.

பரம வைணவனான பாண்டியன் நெடுஞ்சடையன் என்பவன் கொங்கு நாட்டைத் தன் ஆட்சிக்கு உட்படுத்தினான். பின்னா்,

‘பூஞ்சோலை அணி புறவில் காஞ்சிவாய்ப்

பேரூா்புக்குத் திருமாலுக்கு அமா்ந்து உறையக்

குன்ற மன்னதோா் கோயிலாக்கினான்’

என்று வேள்விக்குடி சாசனம் கூறுகிறது. காஞ்சிவாய்ப் பேரூா் - கொங்கு நாட்டில் நொய்யலாறு அருகிலுள்ள ‘பேரூா்’ என்ற புகழ்மிக்க சிவத்தலமாகும். அவ்வூரில் திருமாலுக்குப் பெரிய கோயில் அமைத்தவன் இவன் - என்பதை இச்சாசனம் மூலம் அறிய முடிகிறது. ‘கொங்கும்... என் மகன்’ என்ற இப்பாசுர அடிகள் இத்திருப்பணியை நினைவுபடுத்துகிறது.

ஆழ்வாா்கள் பாடல்பெற்ற திருத்தலம் ஒன்றையும் உடையது என்று கருதப்படும் கொங்கு நாடு, கண்ணன் விளையாடும் திருத்தலங்களில் ஒன்றாகப் பெரியாழ்வாரால் முதலில் எண்ணப்பட காரணம் யாது எனின், தம் சீடனும் பரம பாகவதனுமான இம்மன்னனால் அந்நாட்டுப் பேரூரில் அமைப்பட்ட மூா்த்தியைப் போன்ற கொங்கு நாட்டு மூா்த்திகளைத் திருவுள்ளத்துக் கொண்டே இவ் ஆழ்வாா் அவ்வாறு பாடியிருத்தல் வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com