புறம் பேசும் அகம்

"வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல்மனையுரை மகளிர்க்கு ஆடவர் உயிரே!'
புறம் பேசும் அகம்
Updated on
2 min read

ஆடவர்க்கு உயிர்: 
குறுந்தொகை 135-ஆவது பாட்டின் மேல்வரிச் சட்டம் கீழ்க்காணும் வரிகள். 

"வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல்
மனையுரை மகளிர்க்கு ஆடவர் உயிரே!'

கட்டாததற்கும் "மனை' என்று பெயர், கட்டியதற்கும் "மனை' என்று பெயர். இத்தகைய மனைக்கு மாண்புடைய மனைவி அமைந்துவிட்டால், அந்த மனையில் இல்லாதது ஏதுமில்லை. மாண்பு உடையவளாக அமையாவிட்டால் அம்மனையில் எது இருந்தாலும் என்ன பயன்?

ஓர் ஆணின் வாழ்வில் மனைவி என்றும் மாற்ற முடியாத உறவு; அந்த உறவுக்கு நிகராக எந்த உறவும் இல்லை.

முதன்மைக் காரணம் - அகக் காரணம் எது?

பிசிராந்தையார் என்ற பெருமை சான்ற புலவரை நோக்கி, "ஆண்டுகள் பல ஆகியும் தங்களுக்கு நரை இல்லையே ஏன்? என்ன காரணம்' என்று சான்றோர் சிலர் வினவினர். அதற்குப் பிசிராந்தையார் நான்கு காரணங்களை அடுக்கிக் காட்டினார்.

"என் மனைவியும் என் மக்களும் மாண்பு உடையவர்கள். என் பணியாளர்களான ஏவலரும் நான் எண்ணியவற்றையே எண்ணிச் செயல்படுகின்றனர். என் நாட்டு அரசனும் தீமை ஏதும் வராமல் காத்து வருகிறான். இவை எல்லாவற்றுக்கும் மேலாக நான் வாழும் ஊரில் ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர் பலர் வாழ்கின்றனர்' என்றார் நரை திரையில்லா முதுபெரும் புலவர் பிசிராந்தையார்.

அவர் சொன்ன தலைக்காரணம் - முதன்மைக் காரணம் அவர் வாழும் ஊரில் சான்றோர் பலர் வாழ்கின்றனர் என்பதே. அந்த ஊரில் வாழும் எல்லாருக்கும்தானே சான்றோர் பலர் வாழ்கின்றனர்? பிசிராந்தையர்க்கு மட்டுமே சான்றோர் வாழ்கின்றனரா? அவர்களுக்கெல்லாம் நரை தோன்ற, பிசிராந்தையார்க்கு மட்டும் நரை இல்லையே! எனவே, இந்தத் தலைக் காரணம் தலைக்குப்புற வீழ்ந்துவிடுகிறது.

நாட்டு அரசன் தீமை ஏதும் செய்யாமல் பிசிராந்தையாரை மட்டுமே காத்தானா? நாட்டு மக்கள் அத்தனை பேரையும் காத்தவன்தானே அரசன்? எனவே, இந்தக் காரணமும் இற்றுப்போன காரணமே.

அவருடைய பணியாளர்களான ஏவலர்கள் அவர் எண்ணியதை எண்ணியவண்ணம் செய்து முடிப்பாராம். அப்படிச் செய்யாவிட்டால் அவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை அமர்த்திக்கொள்ளும் வாய்ப்பு வாழ்வில் அவருக்கு இருக்கிறதே! எனவே, இந்தக் காரணமும் வேரற்று வீழ்கிறது.

அவர் பெற்ற மக்கள் மாண்புடையவர்களாக உள்ளனர் என்பது அடுத்த காரணம். அப்படி அவர்களை வளர்த்த பாங்கு அவர்க்கும் அவர்தம் மனைவியார்க்குமே உரியது. அப்படித் தம் மக்கள் மாண்புடையவர்களாக ஒருவேளை அமையாவிட்டால், அவர்களை விட்டு விலகி வாழவும் வாய்ப்பு  உள்ளதே! எனவே,  இந்தக் காரணமும் அடியற்று வீழ்கின்றது.

மாண்புடைய மனைவியே அகக் காரணம்:

எடுத்த எடுப்பில் புலவர் பிசிராந்தையார் சொன்ன காரணம் "மாண்ட என் மனைவியும் மக்களும் நிரம்பினர்' என்பதே. அவர்தம் மனைவி மாண்பு உடையவளாய், அறிவு ஒழுக்கங்களில் நிரம்பியவளாய் மனையைக் காத்தாள் என்பதே அகக்காரணம். ஏன் எனில், மனைவி என்ற உறவே மாற்ற முடியாத உறவு. "ஒருவனுக்கு ஒருத்தி' என்னும் மரபைக் காத்தலே அறம். இதுவே எல்லாக் காரணங்களையும் ஓரங்கட்டிவிட்டு ஓங்கி நிற்கிறது.

ஒருவனுக்கு விரைவில் நரை தோன்றக் காரணம், அவன் எதிர்கொள்ளும் கவலைகள் என்பதே உடலியலாளர் தேற்றம். எனவே, கவலைகள் எதும் கணவனை அண்டவிடாது காப்பவள் மனைக்கு விளக்கமான மாண்புடைய மனைவியே! அவள் அறிவு ஒழுக்கங்களால் நிரம்பி இருந்தாள் என்பதே ஒப்பற்ற அகக் காரணம்.

"யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்கு ஆகியர் எனவினவுதிர் ஆயின்
"மாண்ட என்மனைவியும் மக்களும் நிரம்பினர்'
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை 
ஆன்றவித் தடங்கிய கொள்கைச் 
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே!' (புறம்: 191)
"தமிழ்ச் செம்மல்' புலவர் வே.பதுமனார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com