திகைப்பூட்டும் கம்பர் கவிநயம்!

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ்மொழி உலக சகோதரத் தத்துவத்தை வாழ்த்தியும் போற்றியும் வருகிறது.
திகைப்பூட்டும் கம்பர் கவிநயம்!


பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ்மொழி உலக சகோதரத் தத்துவத்தை வாழ்த்தியும் போற்றியும் வருகிறது. கற்றவர்கள் நன்கு அறிவர். கம்பர் பெருமானும் இந்த நல்வழியைச் சிறப்புறச் செய்தார்.

ஒரே நதி ஒரே இடத்தில் தோன்றி பலவாறாகப் பிரிந்து, பின்னர் ஒரே கடலில் சேருவதைப் போன்றே உலக வாழ்க்கையில் மனித உயிரினங்களின் பல்வேறு சமயங்களும் என்ற கருத்தைத்  தனது காப்பியத்தின் 30-ஆவது  பாடலிலே தொடங்கி, தொடர்ந்து வலியுறுத்துகிறார். 

"பல் இயல் நெறியில் பார்க்கும் பரம்பொருள்' (பா.1128),
"ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்' (1081),
"பின்னிலன், முன்னிலன், ஒருவன், பேர்கிலன்' (6247),
"வாக்கினால், மனத்தினால், மற்றும் அறிவினால் அளக்கவாரா' (6337)

முதலிய பல பாடல்களில் சமயங்களின் பார்வைகளை ஏற்றுக்கொண்டு நல்லிணக்கத்தை விழைந்து மெய்சிலிர்க்க வைக்கிறார். இந்தக் கோணத்தில் அணுகும்பொழுது, "சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்' மிகவும் வியப்பை வாரி வழங்குகிறது.  

தேவர்களின் தலைவனான இந்திரன், மூலக் கடவுளான  ராமனைத் தொழுது ஐந்து பாடல்கள் பாடுகிறான். இவற்றில் அடுத்தடுத்து வரும் பாடல்களில், தொழுவதற்கேற்ற ஒரு சொல்லை பல மதங்கள் நம் நிகழ்காலத்தில் சொல்வதுபோல வியப்புடன் அமைந்தது.

2,613-ஆவது பாடல்  "வேதம் நெறிமுறையின் நேடி ஆய்ந்த உணர்வின் உணர்வே! எந்தாய் / நின் இணை அடித் தாமரைதான்''  
- இந்து மதத்தினர் இவ்வாறுதான் வழிபடுகின்றனர். பாடல் 2,614-இல், "தேவா' என்ற சொல்லுடன், "சிலை ஏந்தி' என்றெல்லாம் வருவது,  கிறிஸ்தவ சகோதரர்கள் ஏசுபிரானை "தேவனே, சிலுவை ஏந்தியவனே' என்பதை நினைவூட்டுகிறதே!
பல ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்வாமிநாதத் தம்பிரான் என்ற துறவி ஒருவர், இலங்கையிலிருந்து மதுரைக்கு வந்து ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றினார். என்னுடன் என் இணைபிரியா  நண்பர்கள்  இருவர் (ஆவி வேறு இலாத் தோழர்கள் - பாடல்-5,676) அவருடன் நன்கு பழகினோம். ஒரு முறை தம்பிரான் தனது முகவரியைக் குறிப்பிடும்போது, "கதிர்காமத்தில்  உத்தமர் ஆலயத்தின் அடுத்த மடம்' என்றார். எங்களுக்குப் புரியவில்லை. "அதுதான், புத்தர் கோயிலுக்கு அடுத்தது' என்றார்.
இப்பொழுது பாடல் 2,615- க்கு வருவோம். இதில் வரும்
 "பெருங் குணத்து எம் உத்தமனே' என்ற தொடர் வியப்பைத் தருகிறது. உலகம் போற்றும் உத்தமர் புத்தபிரான் அல்லவா! வியப்பு மேலோங்குகிறது! தொடர்வோம்.
பாடல் 2,616, "எங்கள் நவை தீர்க்கும் நாயகமே' என்ற தொடரைத் தாங்கி மகிழ்ச்சியில் மூழ்கடிக்கிறது.  இஸ்லாமிய சகோதரர்கள் தொழும் சொல்லால் இன்பத்தில் திளைக்க வைக்கிறது. இத்தோடு கம்பர் நிற்கவில்லை!
அடுத்து வரும் பாடல் 2,617, கடவுளை மறுப்பவர்களைச் சுட்டிக் காண்பிக்கின்றது. "அல்லை இறையவன்' என்று. என்னே கம்பர் பெருமானின் தனித்தன்மை!
கவிச்சக்கரவர்த்தி, எல்லாக் காலத்துக்கும் ஏற்ற சொற்களைப் பதிவு செய்தாரோ அன்றி, அடியேன் "மிகுந்தகை நினைப்பினால்' கிறுக்குகிறேனோ, அது கிடக்கட்டும்.  எனக்கு ஏன் மயக்கமும், குழப்பமும்? இது யாரால் வந்தது? வேறு யார்? கம்பர் பெருமானால்தான்! அவர் குழப்பம் கொண்ட பகுதியைச் சொல்லவா? இதோ:  பாடல் 1,232-இல் கம்பர் ஒப்புக்கொள்கிறார்.
மிதிலையில், ராமன்-சீதை திருமண விழாவில்,  ராமன் மணக்கோலம் பூண்டு வரும்பொழுது கம்பர் பெருமான் மயக்கமே கொண்டார். அப்ரூவரே ஆகிவிட்டார்!
"அமைவு அரு மேனியான் அழகில் ஆயதோ?
கமை உரு மனத்தினால் கருத வந்ததோ? 
சமைவு உர அறிந்திலம், தக்கது ஆகுக'
 இதன் பொருள்: "யாவர்க்கும் அமைய இயலாத சிறந்த திருமேனியை உடைய ராமபிரானின் மிகுந்த அழகின் காரணத்தாலோ அல்லது  தனது (கம்பரின்) பொறுமை மிகுந்த மனத்தால் ராமனின் அழகையே நினைத்துக் கொண்டிருப்பதால் வந்ததோ - இந்த இரண்டில் எது பொருந்துகிறது என்று அறிந்தோம் இல்லை' என்று கம்பர் ஆனந்தக் குழப்பக் கடலில் தானும் மூழ்கி, நம் அனைவரையும் குதூகலிக்க வைக்கிறார்.
அது என்ன "தக்கது ஆகுக'? இதன் பொருள், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிப்பில் "எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆகவே, நீங்களே சரியானவற்றைத்  தேர்ந்தெடுங்கள்' என்றிருக்கிறது. அதேபோன்றுதான் எனக்கும் மேலே சொன்ன பாடல்கள் அனுமதியைக் கொடுத்தன. ராமனது அழகினால் கம்பர் பெருமான் திகைக்கிறார்! கம்பரின் கவி நயத்தால் நாமும் திகைக்கிறோம்!  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com