பாரதி பாடல்களுக்குத் தடை...

பாட்டுக்கொரு புலவராகத் தோன்றிய பாரதி, காலப்போக்கில் மக்கள் போற்றும் மகாகவியாகவே விளங்கினார். தம் பாட்டுத் திறத்தாலும், பத்திரிகைப் பணிகளின் சிறப்பாலும் பாரதி பார் புகழும் பாரதியாகக் காட்சியளித்தார்.
பாரதி பாடல்களுக்குத் தடை...

பாட்டுக்கொரு புலவராகத் தோன்றிய பாரதி, காலப்போக்கில் மக்கள் போற்றும் மகாகவியாகவே விளங்கினார். தம் பாட்டுத் திறத்தாலும், பத்திரிகைப் பணிகளின் சிறப்பாலும் பாரதி பார் புகழும் பாரதியாகக் காட்சியளித்தார்.

"நாட்டுக்கு உழைத்தல்' என்கிற பெரும் தொழிலிலே ஈடுபட்டு, தேச நேசத்தையும் உயர்த்தெழுப்பி உலவச் செய்த பெருமையில் பாரதிக்கு மகத்தான பங்கு உண்டு.

"தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டு'மென்று ஆசைக் கனவு கண்ட பாரதி 11.9.1921-ஆம் தேதி நள்ளிரவு தாண்டி, 12.9.1921-ஆம் தேதியன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் மரணமடைந்தார்.

கவியரசர் பாரதி மரணமடைந்து, 99 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அடுத்து வரும் 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-12 ஆகிய தேதிகளில், நூற்றாண்டு நினைவு புகழ் அஞ்சலி ஆண்டாகத் திகழ உள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில், பாரதி மறைந்த ஏழாம் ஆண்டு நினைவு நாளில்- அதாவது, 11.9.1928-ஆம் தேதியன்று நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியை நினைவுகூர்வது காலத்தின் கட்டாயமாகும்.

இறந்தும் இறவாக் கவிதைகளை யாத்த கவியரசர் பாரதியைக் குறித்துக் கவியரசு கண்ணதாசன்,

"கவிஞன் பிறப்பின் கவிதை பிறக்கும்
கவிஞன் மறையினும் கவிதை உலாவும்
மறைந்தும் மறையா மாபெரும் புகழை
அடையும் கவிஞர் ஆயிரத் தொருவரே
ஆயிரத் தொன்றும் அதிக மென்றால்
கோடிக் கொருவராய்த் தோன்றும் கவிஞர்
குழாத்திடையே பாரதி குறையா மணமலர்'

என்று பாமாலை சூட்டி மகிழ்ந்தார். அவர் மறையினும் உலா வந்த வரலாற்றைத் தெரிவிக்கும் நிகழ்ச்சி 11.9.1928-ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

பாரதியின் "சுதேச கீதங்கள்' தொகுதிகளில் ராஜத் துவேஷத்தை ஊட்டுகின்ற விஷயங்கள் இருப்பதாகச் சொல்ல, அதுபோது பிரிட்டிஷ் இந்தியாவின்  ஒரு மாநிலமாக இருந்த பர்மா அரசு 7.8.1928-ஆம்  நாளன்று பாடல் நூல்களுக்குத் தடை விதித்தது.

இதன் தொடர்ச்சியாக, பாரதி நினைவு நாளான 11.9.1928-ஆம் தேதி சென்னை மாகாணத்திலும் பாரதி நூல்கள் தடை செய்யப்பட்டதற்கான உத்தரவு அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டது; நூல் தொகுதிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

21.9.1928-ஆம் தேதிய "சுதேசமித்திரன்' தனது  தலையங்கப் பக்கத்தில் பறிமுதல் விஷயத்தைக் குறித்து சட்டசபை அங்கத்தினர்கள் காரணம் கேட்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருந்தது.

பாரதி பாடல் நூல்களைப் பறிமுதல் செய்த தருணத்தில், எஸ்.சத்தியமூர்த்தி சட்டசபை  அங்கத்தினராக இருந்தார். 8.10.1928 தேதியன்று சட்டசபையில் ஓர் ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

9.10.1928-ஆம் தேதியன்று விவாதம் தொடங்கியது. விவாதத்தை சத்தியமூர்த்தி தொடங்கிவைக்க, சி.எஸ்.முத்துரங்க முதலியார் தீர்மானத்தை ஆமோதித்துப் பேசினார்.

தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில், ஆதி நாராயண செட்டியார், சாவடி சுப்பிரமணியபிள்ளை, ஹரி சர்வோத்தம ராவ், சிவராஜ், டி.சி.சீனிவாச ஐயங்கார், டி.கே.சிதம்பரநாத முதலியார், ஜனாப் ஷம்னாத், ராம்நாத் கோயங்கா, துரைராஜா, டேனியல் தாமஸ், டேவிஸ், முனுசாமி பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டு, தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்.

தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய அனைவரும் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்திய நிலையில், சட்டமன்றத்தில் ஒலித்தது ஒரே ஒரு தமிழ்க்குரல்.

அந்தத் தமிழ்க் குரலுக்குச் சொந்தக்காரர் கே.வி. கிருஷ்ணசுவாமி நாயக்கர் என்ற மாமனிதர் ஆவார். அந்த மாமனிதரின் தமிழ்க் குரலை இனி கேட்போம்:

""அக்கிராசனாதிபதி அவர்களே! நான்கு வேதங்களுக்குச் சமானமாய் எங்களால் போற்றப்படும் எங்கள் சுப்பிரமண்ய பாரதியாரின் அருமையான பாடல்களை பறிமுதல் செய்த அரசாங்கத்தாரின் அக்கிரமச் செய்கையை எந்த தமிழன், எந்த இந்தியன் கண்டிருக்காமலிருக்க முடியும்? தேசபக்தி ததும்பும் அப்பாடல்களைக் கேட்டிராத தமிழருண்டோ? 

சென்ற பதினைந்து ஆண்டுகளாய் தமிழ் நாட்டிலுள்ள கிராமங்களிலெல்லாம் பாரதியாரின் தேசீய பாட்டுகள் பாடப்பட்டு வருகின்றன. தாலூகா போர்டு, முனிசிபல் பள்ளிக்கூடங்களிலும் மாணவர்களுக்கு இப் பாடல்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இவ்வளவு காலம், இப்பாடல்களில்  கெடுதல் ஒன்றும் காணாமல் இருந்த நம் அரசாங்கத்தார் திடீரென்று பர்மா கவர்ன்மென்டார் இந்த பாடல்களுக்கு ஆட்சேபிக்கிறார்களென்ற காரணத்தால் மாத்திரம், பாடல்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது மிகவும் விந்தையாயிருக்கிறது. நமது சென்னை கவர்மென்டாருக்கு சுய புத்தியும் சுய மரியாதையுமில்லையாவென்று நான் கேட்கிறேன்.

சட்டப்படி பர்மா கவர்ன்மென்டாருடைய உத்தரவு சென்னை கவர்ன்மென்டாரைக் கட்டுப்படுத்தவில்லை. அப்படியிருக்க, சென்னையிலுள்ள மாஜிஸ்திரேட்டும், போலீஸýம் பாரதியாரின் பாடல்களைப் பறிமுதல் செய்வதும், நம் தமிழ் மந்திரிகளும், நமது இந்திய சட்ட மெம்பரும், போலீஸ் மெம்பரும், அதைப் பார்த்துக்கொண்டு இருப்பதும், இந்த சபையில், சட்ட மெம்பரும் தானும் போலீஸ் மெம்பரும் ஒன்றும் செய்யவில்லையென்று முதலில் சொல்லுவதும், பிறகு, தன் உத்தியோகஸ்தர்கள் செய்த செய்கைகளுக்கு தான் ஜவாப்தாரிதானென்று சொல்லுவதும், இந்த அரசாங்கத்தின் ஊழல்களைக் காட்டுகிறது.

கனம் போலீஸ் மெம்பரும் கனம் சட்ட மெம்பரும் சென்னை போலீஸ் கமிஷனருடைய அடிமைகளாவென்று நான் கேட்கிறேன். இந்த முக்கியமான விஷயத்தில், கனம் சட்ட மெம்பர், இந்தியன் என்று சொல்லிக் கொள்ளும் இவர், பேசிய மாதிரி இவ்விடத்திலுள்ள இந்திய அங்கத்தினர்களுக்கே அவமானத்தைத் தரக்கூடியதாயிருக்கிறது.

அக்கிராசனாதிபதி அவர்களே! கவர்ன்மென்டாரின் செய்கை தமிழர்களையும் அவர்களின் பஷையையும் பற்றியது. பிராமணரல்லாதவர் சட்ட மெம்பராய் நியமிக்கப்பட்டால் எண்ணிறந்த நன்மைகள் தமிழர்களுக்கு விளையுமென்று சிலரால் சொல்லப்பட்டது. அவ்வித நன்மைகளில் இது ஒன்றாவென்று நான் கனம் சட்ட மெம்பரைக் கேட்கிறேன்.

நம் சுதந்திரத்தைப் பற்றியும், ஒற்றுமையைப் பற்றியும், தேசபக்தியைப் பற்றியும் பாடுவதில் சட்ட மெம்பருக்கு ஆட்சேபணை யிருந்தால், அவர் வெளிப்படையாய்ச் சொல்லட்டும். பாரதியாரின் சிறந்த பாட்டுகளில் ஒன்றை நான் தங்கள் அனுமதியுடன் பாடுகிறேன். இதில் அரசாங்கத்தாருக்கு எவ்வித ஆட்சேபணை யிருக்கக்கூடும் என்று இந்த சபையோரே சொல்லட்டும்.

("வீரசுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்  வேறொன்று கொள்வாரோ?' என்ற பாடலை முழுவதும் பாடுகிறார் நாயக்கர். )

""அக்கிராசனாதிபதியவர்களே! இவ்வித சுதந்திரப் பாட்டைப் பாடுவதில் நம் அரசாங்கத்தாருக்கு ஆட்சேபணை யுண்டானால், அவர்களின் மனப்பான்மை வெட்ட வெளிச்சமாய் நமக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் இந்த சபையிலிருந்து நான் அரசாங்கத்தாருக்கு ஒன்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

அவர்கள் நம் கவிசிரேஷ்டமான சுப்பிரமண்ய பாரதியாரின் பாடல்களைப் பறிமுதல் செய்யலாம்; அந்தப் பாட்டுகளைப் பாடுகிறவர்களையெல்லாம் கைது செய்யலாம். ஆனால் தமிழர்களின் தேசீய உணர்ச்சியையும், அவர்களுடைய சுதந்திர தாகத்தையும் எந்த அரசாங்கத்தாரும் அடக்க முடியாது. இந்த விஷயத்தில் இச்சபையிலுள்ள சர்வ கட்சியினரும் ஒருமைப்பட்டு பேசுவதே அதற்கு அறிகுறியாகும். 

அரசாங்கத்தார் என்ன செய்தபோதிலும், தமிழரும், மற்ற இந்தியரும்  சுதந்திரப் போரில் மனந்தளராமல் முன்னணியில் நின்று பாரதியாரைப் பின்பற்றி யுத்தம் செய்ய வேண்டுமென்று நான் அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன். இந்த வார்த்தைகளுடன், எனது நண்பர் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி பிரேரேபித்த தீர்மானத்தை நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன். வந்தே மாதரம்!''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com