தொல்காப்பியப் பெண்டிர்!
"தமிழ்' என்பது வெறும் மொழி மட்டுமன்று. வாழ்க்கையை வடிவமைத்துத் தந்த வளமையான பாதை. இந்தப் பாதையில் ஆதி மைல் கல்லாக ஆதாரங்களைச் சுமந்து இன்றைய தலைமுறைக்கும் அறிவூட்டும் தாய்மடியாக விளங்குகிறது


"தமிழ்' என்பது வெறும் மொழி மட்டுமன்று. வாழ்க்கையை வடிவமைத்துத் தந்த வளமையான பாதை. இந்தப் பாதையில் ஆதி மைல் கல்லாக ஆதாரங்களைச் சுமந்து இன்றைய தலைமுறைக்கும் அறிவூட்டும் தாய்மடியாக விளங்குகிறது தொல்காப்பியம். பல சூத்திரங்களை உள்ளடக்கி உலகக் கோட்பாட்டுக்கு வழிகாட்டுகிறது.
பல இனத்தின் ஆதி மொழிகள் சுவடின்றி அழிந்து வருகின்றன. நம் தமிழ்மொழியில் தொல்பொருள்களைப் போல, தோண்டத் தோண்ட புதிய கருத்துகளை வெளிப்படுத்தும் வளமையான ஆவணமாகத் தொல்காப்பியம் திகழ்கின்றது. அனைத்துத் தமிழர் இல்லங்களிலும் திருக்குறள் இருப்பதைப் போல இருக்க வேண்டிய இன்னொரு நூல் தொல்காப்பியம்.
தொல்காப்பியப் பெண்டிரின் பண்பு நலன்கள் எண்ணி வியக்கத்தக்கனவாக உள்ளன. இதனைப் பொருளியலில், "செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் / அறிவும் அருமையும் பெண்பா லான'
(தொல்.1154) என்ற நூற்பா வழி அறிகிறோம். அடக்கம், அமைதி, நேர்மை, உண்மையை உரைக்கும் சொல்வன்மை, நன்மை, தீமையைப் பிரித்தாராயும் அறிவு, அரும் பண்புகள் ஆகியவை பெண்டிரின் குணநலன்களாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. மற்றொரு நூற்பாவில்,
"கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்' (1098)
என்கிறார் கற்பியலில் தொல்காப்பியர். கற்பு எனும் மனத்திண்மை, தலைவன் மீது கொண்ட காதல், நல்லொழுக்கம், பொறுமை எனும் பெருங்குணம், நற்பண்புகளின் நிறை, விருந்தினரைப் பேணிக் காக்கும் தன்மை, சுற்றத்தாரை ஓம்பல் முதலானவை குடும்பத் தலைவியின் பண்புகளாகக் கூறுகின்றார்.
"பிறர் விரும்பும்படியாகப் பேசுதல் மாசற்றவர்களின் கொள்கை' (வேட்பத்தாஞ் சொல்லி) என்பது திருவள்ளுவரின் கருத்து. அதுபோல, மாசற்றவளான தலைவியின் உரை பற்றிக் கூறுமிடத்து,
"அருள் முந்துறுத்த அன்புபொதி கிளவி / பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே' (1107) என்கிறார் தொல்காப்பியர்.
அருளுடன் கூடிய அன்பு பொதிந்த சொற்களைப் பேசுதல் தலைவிக்குரிய பண்பாகும். தன்னைப் பற்றி வியந்து தலைவன் முன் தன்னைத் தான் புகழ்ந்து பேசும் தற்புகழ்க்கிழவி எச்சூழலிலும் தலைவிக்கு இல்லாததொரு பண்பாக, "தற்புகழ்க் கிளவி கிழவன் முன் கிளத்தல் / எத்திறத் தானும் கிழத்திக்கு இல்லை' (1126) எனத் தொல்காப்பியம் கூறுகின்றது.
செவிலியின் திறன் கூறும்போது, "நல்லவை உரைத்தலும் அல்லவை கழிதலும் / செவிலிக் குரிய ஆகும் என்ப' எனும் நூற்பாவின் வழி நற்றாய்க்கு இணையாய்த் தலைவியின் மீது பேரன்பு கொண்ட செவிலி நல்லனவற்றை எடுத்துரைப்பதிலும், தீயவற்றைக் கடிந்துரைப்பதிலும் தவறமாட்டாள் என்பது அறியப்படுகின்றது.
தோழியானவள் தலைவன், தலைவியின் காதலுக்குத் துணை நின்றாலும் வரைவு (திருமணம்) பற்றிய எண்ணம் இன்றி தலைவன் தலைவியுடன் காதலில் ஈடுபடும்போது, அவனை எச்சரிக்கும் விதமாகத் தலைவனுடன் தோழி கூற்று நிகழ்த்துவாள்.
தலைவி, தோழி, செவிலி, நற்றாய் ஆகியோர் முதன்மைப் பெண் மாந்தர்களாகத் தொல்காப்பியத்தில் திகழ்கின்றனர். இவர்களது அன்பும் அறிவும் ஆளுமையும் அக்காலப் பெண்டிரின் இயல்பினைப் படம்பிடிக்கும் காலக் கண்ணாடியாகத் திகழ்வதை, தொல்காப்பியப் பெருநூல் வழி அறிகிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...