வ.உ.சி. வழங்கிய எழுத்தூசி!

தமிழ்கூறும் நல்லுலகம் விடுதலைப் போராட்ட வீரர்  வ.உ.சிதம்பரம் பிள்ளை வெள்ளையர்க்கு எதிராகக் கப்பலோட்டினார் என்றும், அதனால் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார் என்றும், சிறையில் செக்கிழுத்தார்
வ.உ.சி. வழங்கிய எழுத்தூசி!

தமிழ்கூறும் நல்லுலகம் விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை வெள்ளையர்க்கு எதிராகக் கப்பலோட்டினார் என்றும், அதனால் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார் என்றும், சிறையில் செக்கிழுத்தார் என்றும் மட்டுமே அறியும். இந்தியத் தேசம் இவற்றையும் மறந்துபோய், மரத்துப்போய் மறுகி நிற்கிறது. அவர்தம் பெயரை இன்றைய மாணவர் உலகம் "வஊசி' என்றே ஒலிக்கிறது, எழுதுகிறது.

அவர் வீரம் செறிந்த அரசியல் வித்தகர், ஆன்மிக முத்தர், பதிப்பாசிரியர், இதழாசிரியர், மொழி பெயர்ப்பாளர், தொழில் சங்க நிறுவனர், இந்தியக் கப்பல் நிறுவனச் செயலாளர், வல்லாண்மை சான்ற வழக்குரைஞர் என்பதை நூறு ஆண்டு வரலாற்றை ஆராய்ந்தவர் மட்டும் அறிவர்.

அவர் கட்டுரை வன்மையும், கலைபயில் தெளிவும் கொண்டவர்; நூல் பல கற்ற பேரறிவாளர் என்பது எவருக்குத் தெரியும்? சிவஞானபோதம், இன்னிலை, திருக்குறள் ஆகிய நூல்களின் அகல உரையாசிரியர் அவர் என்பதை எவர் அறிவார்? ஆங்கிலமொழி அறிஞர் அவர் என்பதை இன்று எண்ணிப் பார்க்கவும் நேரமில்லாத நாடுதானே இது?

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் சீரிய செந்தமிழ்க் கவிஞர். மெய்யறம், மெய்யறிவு, பாடல்திரட்டு, தன் வரலாறு ஆகிய அரிய கவிதை நூலாக்கச் செம்மல்; திருக்குறள் மணக்குடவர் உரை, தொல்காப்பியம் இளம்பூரணர் உரை நூல்களைப் பதிப்பித்த பைந்தமிழ்ச் செம்மல். புகழ் வாய்ந்த ஆங்கிலக் கவிஞரான ஜேம்ஸ் ஆலனின் ஆங்கிலக் கவிதைகளை, மனம் போல் வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் எனும் சீரிய தலைப்புகளில் மொழிபெயர்த்த அறநெஞ்சினர்.

திருக்குறளுக்கு உரை கண்டு, பதிப்பித்தவர். புலவர்களே இடறிக் குழறும் குறட்பாக்களுக்கு நடுநிலையோடு நல்லுரை நல்கிய உரையாசிரியர் அவர் என்பதை அறிந்தால் அவர்தம் உரை வளமும் நடைநலமும் மொழித்திறத்தின் முட்டறுத்த நுட்பமும் வெளிப்படும். அவர் புத்துரை தமிழுக்குக் கிடைத்த பத்தரை மாற்றுத் தங்கம்.

முதலில் முப்பாலை அவர்தம் அறிவுச் சுவாலையில் சுண்டக் காய்ச்சி அறப்பால், பொருட்பால், இன்பப்பால் என்றே வடித்து வழங்குவார். பாயிரமாம் முதல் மூன்று அதிகாரங்கள் இடைச் செருகலானவை என நிறுவி, அவற்றை இடைப்பாயிரம் என்றும், நான்காம் அதிகாரமாகிய அறன் வலியுறுத்தலே நூலின் முதன்மை பேருண்மைப் பொலிந்தது என்பதால் முதலதிகாரம் எனவும் வழங்கியுள்ளார்.

வ.உ.சி., உரையாசிரியர்களின் உரைகளை மறுக்கும்போது, மெல்லென மறுப்பார். அதனால், அவர் உரை மறுப்புரையே அன்றி வெறுப்புரையாக என்றும் வெளிப்பட்டதில்லை. அவர் உரையில் பதவுரை, அகலம், கருத்து என வடித்து வழங்கும் அழகே அழகு. பதவுரை தருகையில் குறளை இரண்டு மூன்று பகுதிகளாக்கி எளிய உரை வழங்குவார். "அகலம்' என்னும் பகுதியில் (விருத்தி) செய்தி விளக்கத்தையும், இலக்கணக் குறிப்பு, பாட வேறுபாடு, பிறருரை மறுப்பு என விளக்குவார். "கருத்து' எனும் பகுதியைச் சிறுதொடரில் தருவார். மூல ஏடுகளிலிருந்து பெயர்த்தெழுதுவோர் பிழைகளைச் சுட்டி, மூலபாடம் இதுவென எடுத்துக்காட்டுவது அவர்தம் உரைநெறி.

"தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்' (குறள்-202)

என்னும் குறள் பெயர்த்தெழுதியவர் செய்த பிழைக்குறள்' என்றார் அவர். "தீயவே தீய பயத்தலால்' என்றே இருக்க வேண்டும் என்பது அவர்தம் ஆய்வு. தீ நன்மையையும் தீமையையும் பயக்கும். ஆனால், தீயன தீயவே பயக்கும் என்பதே குறளாய் இருக்கும் என முறை வகுப்பார் வ.உ.சி. (ப.154, கு172).

இக்குறட்பாவுக்கு, "தீய வினை தீயினும்
கொடிது' என எளிமையாகக் கருத்துரைப்பார் வ.உ.சி. இதைப் போலவே,
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு' (குறள்-129)

என்ற குறளில் "நாவினால்' என்பதே பிற உரையாசிரியர் கொண்ட பாடம். ஆனால், வ.உ.சி.யோ, ""வாயினால்'என்றே கொள்வார். இதனை விளக்கும் வ.உ.சி., ""வாயினால் என்பது எதுகையும் மோனையும் ஒத்துத் தொடையின்பம் தருதல் காண்க; அன்றியும், வாய் என்பது ஆசிரியர்தம் நூலில் அடிக்கடி வழங்கும் சொற்களில் ஒன்று. ஆதலால், "வாயினால்' என்பதே பாடம் எனக் கொள்ளப்பட்டது'' என நிறுவுவார் வ.உ.சி. (ப-113, கு-99). "வாய்' எனும் சொல் திருக்குறளில் 11 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

உரையாசிரியர்தம் பரந்துபட்ட நூல் அறிவு, உலக வழக்கு, சார்ந்துள்ள சமயநெறி ஆகியன பற்றிக் குறட்பாக்களுக்கு அவரவர் நோக்கில் உரை வழங்குவதே உரை வழக்கு. அதனால், சமயச் சாயமும் உரையாசிரியர்தம் மனப்பாங்கு வண்ணமும், குறட்பாக்களில் படிவது இயற்கை. ஆனால், நடுநிலை நின்று உரை வழங்கு நெறியில் நின்ற வ.உ.சி., உரை, குறளின் மெய்நின்ற உரை என்பதை அவர்தம் உரையில் தெளிவாகக் காணலாம்.

"ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்'

என்பதே பிற உரையாசிரியர்களின் பாடம். "ஆபயன் - பால், நெய் முதலியன இல்லாமற்போகும்; அறுதொழிலோர் - ஆறு தொழில்களைச் செய்யும் அந்தணர்; நூல் - வேதம் மறப்பர்' என்றே பரிமேலழகர் தலையிட்ட உரையாசிரியர்கள் உரை வகுத்தனர். ஆனால், வ.உ.சி., ஆபயன் - வினைத்தொகை -ஆனபயன், ஆகிறபயன், ஆகும் பயன் - நாட்டின் விளைச்சல் எனப் பொருள் தருவார்.

"அறுதொழிலோர்' என்ற சொல் "அறிதொழிலோர்' என்றே இருக்க வேண்டும் என்றும்; அறிதொழில் - கல்வி என்றும் - பாடம் கண்டு, நடுநிலையாய் உரை வழங்குவார். இதனைத் தம் அகல உரையில் அறுதியிட்டுக் காட்டுவார் வ.உ.சி. (ப348, கு530). கருத்துரையில், "அரசன் நடுநிலையாய் முறை செய்யானாயின், அவன் நாட்டில் விளையுளும் (விளைச்சல்), கல்வியும் குறையும்' என எளிய விளக்கம் தருவார். ஆம்! வ.உ.சி., கருத்தே பகுத்தறிவாளர் உள்ளிட்ட அறிஞர் எவரும் ஏற்கும் கருத்தாகும் என்பதை எண்ணிப் பார்த்தால், உரையாசிரியர் வ.உ.சி.யின்எழுத்தூசியின் கூர்மை தெளிவாகப் புலனாகும்.

உரையாசிரியர் வ.உ.சி., திருக்குறளில் பயின்றுவரும் அக்காலச் சொற்களுக்குச் செவ்விய பொருளையும் வழங்கியுள்ளார். அவர்தம் திருக்குறள் உரைவளம் செந்தமிழ் உரைவளம் - செந்தமிழ் நிறைநலம் - அறத்தை ஆக்கும் அருவளம். இதனால், அவர்தம் எழுத்தூசியின் கூர்மையும், நேர்மையும் நன்கு புலப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com