பரணர் சொன்ன வரலாற்று உண்மை!

ஓர் அரசன் மக்களால் தூற்றப்படாமல்,  போற்றப்பட வேண்டுமானால்  அவன் எத்தகைய செயலைச் செய்யக்கூடாது என்பதை ஒரு வரலாற்று நிகழ்வு (கதை) மூலம் புலவர் பரணர், தோழியின் கூற்றாக வெளிப்படுத்துகிறார்.  
பரணர் சொன்ன வரலாற்று உண்மை!


ஓர் அரசன் மக்களால் தூற்றப்படாமல், போற்றப்பட வேண்டுமானால் அவன் எத்தகைய செயலைச் செய்யக்கூடாது என்பதை ஒரு வரலாற்று நிகழ்வு (கதை) மூலம் புலவர் பரணர், தோழியின் கூற்றாக வெளிப்படுத்துகிறார்.

தலைவி பெற்றோரால் பாதுகாக்கப்படுகின்றாள்; தாயின் காப்பு (காவல்) அதிகமாகிவிட்டது. அவளை வரைந்து கொள்ளுதலே (திருமணம் முடித்தலே) நல்லது என்பதைத் தோழி, இரவுக்குறிக்கண் சிறைப்புறமாக இருக்கும் தலைவனுக்குக் கேட்கும்படி குறிப்பாக உணர்த்துகிறாள்.

"நன்னன்' எனும் அரசன் தன்னுடைய காவல் மரமாக "மா' மரத்தை வளர்த்து வந்தான். அந்த மரத்தின் அருகில் ஓர் அழகிய சிற்றாறு. அந்த ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ஓர் இளம்பெண் ஆற்று நீரில் அடித்து வரப்பட்ட (மன்னனின் காவல் மரத்து) மாங்காயை எடுத்துத் தின்றுவிட்டாள். இந்தச் செய்தி அறிந்த நன்னன், காவல் மரத்து காயைத் தின்ற அந்தப் பெண்ணைக் கொலை செய்ய உத்தரவிட்டான்.

அப் பெண்ணின் தந்தையோ, "மன்னனின் காவல் மரத்துக் காய் என்பதை அறியாமல் அவள் அதைத் தின்றுவிட்டாள். அறியாமல் செய்த பிழையை மன்னிக்க வேண்டும். இந்தக் குற்றத்துக்குத் தண்டமாக எண்பத்தொரு யானைகளும், பெண்ணின் எடைக்கு நிகரான பொன்னாலான பாவையையும் கொடுக்கிறேன், பெண்ணைக் கொல்லாமல் விட்டுவிடுங்கள்' என்று மன்றாடினார்.

ஆனால், நன்னன் அவற்றை ஏற்க மறுத்து, அந்தப் பெண்ணைக் கொலை செய்தான். அன்றுமுதல் அந்த மன்னன் அந்நாட்டு மக்களின் வெறுப்புக்கு ஆளாகி, "பெண் கொலை புரிந்த நன்னன்' என்று தூற்றப்பட்டான். பகைவர் தாக்கும் ஊர் இரவெல்லாம் தூங்காமல் கிடப்பதுபோல தாயும் தலைவியைப் பாதுகாத்துக்கொண்டு தூங்காமல் கிடக்கிறாள். பெண்கொலை புரிந்த நன்னன் இறந்த பின்னர் நரகலோகம் சென்றதைப் போல இந்த அன்னையும் நரகம் செல்வாளாக' என்கிறாள் தோழி.

"மண்ணிய சென்ற ஒண் நுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்ற தன் தப்பற்கு,
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண் கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை,
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்தெனப்
பகை முக ஊரின் துஞ்சலோ இலளே'
(குறுந்.292)

பரணர் சுட்டும் நன்னனும், மலைபடுகடாமில் வரும் நன்னனும் வேறுவேறானவர்கள் என்பது பொ.வே.சோமசுந்தரனார் உரை மூலம் தெரிய வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com