இரட்டைச் சொற்கள்!

கார சாரம்: காரம் என்பது உறைப்புச் சுவை. சாரம் என்பது சார்ந்தது - காரத்தைச் சார்ந்த புறச் சுவைகள். 

சென்றவாரத் தொடர்ச்சி...


கார சாரம்: காரம் என்பது உறைப்புச் சுவை. சாரம் என்பது சார்ந்தது - காரத்தைச் சார்ந்த புறச் சுவைகள். 

இசகு பிசகு: இசகு என்பது தம்மியல்பு தெரிந்து ஏமாற்றுபவனிடம் ஏமாறுதல். பிசகு என்பது தம்முடைய அறியாமையால் ஏமாறுதல். இடக்கு முடக்கு: இடக்கு என்பது எள்ளி நகைத்தும் இகழ்ந்தும் பேசல். முடக்கு என்பது கடுமையாக எதிர்த்தும், தடுத்தும் பேசல். தோட்டம் துரவு: தோட்டம் என்பது செடி, கொடி, கீரை போன்றவை பயிரிடப்படுமிடம். துரவு என்பது கிணறு.

சத்திரம் சாவடி: சத்திரம் என்பது இலவசமாக சோறு போடுமிடம். சாவடி என்பது இலவசமாகத் தங்கும் விடுதி. 

பற்று பாசம்: பற்று என்பது நெருக்கமாக உறவாடுதல். பாசம் என்பது பிரிவின்றி சேர்ந்தே இருத்தல். பழக்க வழக்கம்: பழக்கம் என்பது ஒருவர் ஒரு செயலைப் பலகாலம் செய்து வருதல். வழக்கம் என்பது ஒரு செயலைப் பலகாலம் மரபாகக் கடைப்பிடித்தல்.

கிண்டலும் கேலியும்: கிண்டல் என்பது ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயிலிருந்து பிடுங்கி வரவழைத்தல். கேலி என்பது எள்ளி நகையாடுதல்.

பட்டி தொட்டி: பட்டி என்பது மிகுதியாக ஆடுகள் வளர்க்கும் ஊர். தொட்டி என்பது மாடுகள் மிகுதியாக வளர்க்கும் ஊர்.

பேரும் புகழும்: பேர் (பெயர்) என்பது வாழும் காலத்தில் உண்டாகும் சிறப்பும் பெருமையும். புகழ் என்பது வாழ்வுக்குப் பிறகு நிலைபெற்றிருக்கும் பெருமை. 
நேரம் காலம்: நேரம் என்பது ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைந்த பொழுது. காலம் என்பது ஒரு செயலைச் செய்வதற்குப் பஞ்சாங்க அடிப்படையில் எடுத்துக் கொள்ளும் கால அளவு. 

பழி பாவம்: பழி என்பது நமக்குத் தேவையில்லாத, பொருந்தாத செயலைச் செய்ததால் இப்பிறப்பில் உண்டாகும் பழிச்சொல். பாவம் என்பது தீய செயல்களைச் செய்ததால் மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் தீய (தீவினை) நிகழ்வு.

நகை நட்டு: நகை என்பது பெரிய அணிகலன்களைக் குறிக்கும். நட்டு என்பது சிறிய அணிகலன்களைக் குறிக்கும். வாட்ட சாட்டம்: வாட்டம் என்பது வளமான தோற்றம். வாளிப்பான உடல், அதற்கேற்ற உயரம். சாட்டம் என்பது வளமுள்ள கனம்- தோற்றப் பொலிவு.

காய் கறி: காய் என்பது காய் வகைகள். கறி என்பது சைவ உணவில் பயனாகும் கிழங்கு கீரை வகைகள். 

கால்வாய் - வாய்க்கால்: வாய் என்பது குளம். கால்வாய் குளத்திற்கு நீர் வரும் கால் (வழி). வாய்க்கால் என்பது குளத்திலிருந்து தண்ணீர் செல்லும் கால் (வழி).

ஈவு இரக்கம்: ஈவு என்பது கொடை வழங்குதலைக் குறிக்கும். இரக்கம் என்பது பிறவுயிர்கள் மேல் அருள் புரிதலைக் குறிக்கும்.

பொய்யும் புரட்டும்: பொய் என்பது உண்மையற்றவற்றைக் கூறுதல். புரட்டு என்பது ஒன்றை நேருக்கு மாறாக மாற்றி உண்மை போலவே நம்புமாறு கூறுதல்.

சூடு சொரணை: சூடு என்பது ஒருவர் தகாத சொல்லைப் பேசும்போது - தகாத செயலைச் செய்யும்போது ஏற்படும் மனக்கொதிப்பு. சொரணை என்பது நமக்கு ஏற்படும் மான உணர்வு.

இவை போன்று தமிழில் இன்னும் நிறைய இரட்டைச் சொற்கள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com