அரங்கனுக்கு ஆடரவப் பாயல்...

இராச மகேந்திரன் முடக்காற்றுப் போரில் பெருவீரனாகப் போரிட்டான் என்று இவன் கல்வெட்டுகள் உணர்த்தினும், இவனைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை.
அரங்கனுக்கு ஆடரவப் பாயல்...
Updated on
1 min read


திருவரங்கம் ஏழு திருச்சுற்று வீதிகளில் அமைந்துள்ளது. அவற்றுள் இரண்டாம் திருவீதியை அமைத்தவன் இராச மகேந்திரன். இவன் இரண்டாம் இராசேந்திர சோழனின் தம்பி. இராசேந்திரன் இவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி "சோழ பாண்டியன்' என்னும் பட்டம் வழங்கினான். இவன் மதுரையில் அரசப் பிரதிநிதியாய் இருந்து பாண்டிய, சேர நாட்டை அரசாண்டு வந்த மும்முடிச் சோழனாவான்.

இராச மகேந்திரன் முடக்காற்றுப் போரில் பெருவீரனாகப் போரிட்டான் என்று இவன் கல்வெட்டுகள் உணர்த்தினும், இவனைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை. பின்னர் இவன் ஒரு போரில் இறந்திருக்க வேண்டும். பட்டத்துக்கு வராமலே,
               ".... அப்பழநூல்
               பாடரவத் தென்னரங்க 
         மேயாற்குப் பன்மணியால்
         ஆடரவப் பாயல் அமைத்தோனும்'
என்னும் "விக்கிரம சோழன் உலா' அடிகள், இவன் திருவரங்கநாதரிடம் அன்பு பூண்டு அப்பெருமானுக்குப் பொன்னாலும் நவமணியாலும் அரவணை ஒன்று செய்து அளித்தான் என்று அறிய முடிகிறது.

விதுரர், கண்ணபிரான் தம் இல்லத்தில் தங்கியபோது அவர் திருக்கண் வளர "மலர் பாயல்' (புஷ்ப சயனம்) ஒன்றைத் தயாரித்தளித்தார் என்னும் வில்லிபாரதச் செய்தி இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

"... மன்றனாள் மலர்ப் பாயலின் மீது கண்வளர்ந்தான்' (கிருட்டிணன் தூதுச் சருக்கம்-96). இவன் பெயரால் திருவரங்கத்தில் "இராச மகேந்திரன் திருவீதி' இருப்பதை முன்பே கண்டோம். இச்செய்தி "கோயில் ஒழுகு' (பக்-3) எனும் நூலில் காணப்படுகிறது. "மனுவினுக்கு மும்மடி நான்மடியாஞ் சோழன்' - என்று கலிங்கத்துப்பரணியும், "தரும நெறி நிற்ப மனுநெறி நடத்திய கோ இராஜகேசரிவர்மரான உடையார் ஸ்ரீஇராச மகேந்திர தேவர்' - என்னும் கல்வெட்டுப் பகுதியும், இவன் செங்கோல் சிறப்பையும், நீதி மாண்பையும் விளக்கி நிற்பதை அறியலாம்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com