சொல் அறிவோம்!

அலகை என்பதற்குப் "பேய்' என்பது பொருள். "அல்' என்பதற்கு இரவு, இருட்டு, கருப்பு என்பன பொருளாகும். இது கரிய நிறத்தோடு அலையும். ஆதலால், அவ்வுருவம் அலகை - பேய் ஆயிற்று. (அல் = இருள், கருப்பு, பேய்)
சொல் அறிவோம்!

அலகை


அலகை என்பதற்குப் "பேய்' என்பது பொருள். "அல்' என்பதற்கு இரவு, இருட்டு, கருப்பு என்பன பொருளாகும். இது கரிய நிறத்தோடு அலையும். ஆதலால், அவ்வுருவம் அலகை - பேய் ஆயிற்று. (அல் = இருள், கருப்பு, பேய்)


அம்மி


மிளகாய், சாந்து முதலிய பொருள்கள் அரைக்கப் பயன்படும் கருவி, ஆயுதம் அம்மி ஆயிற்று. காரணம், அப்பொருள்களைச் செவ்வக வடிவமான கருங்கல்லில் வைத்துக் குழவியால் "அம் அம்' என்று அமுக்கியும், அழுத்தியும் அரைப்பதால் அஃது அம்மி ஆயிற்று.


அமையம்


"அமையம்' என்பதற்குப் பொருந்துதல், நேர்தல், நிகழ்தல், சமயம், பொழுது எனப் பல பொருள் கொள்ளலாம். சந்தர்ப்பம் அல்லது நேரத்திற்கு ஏற்ப அஃது அமைவதால் "அமையம்' ஆயிற்று.


அரம்


அரிவாள், அறுவாள், அரிவாள்மனை போன்ற கருவிகளை அராவி அதாவது, தேய்த்துக் கூர்மைப்படுத்தும் கருவி "அரம்' ஆயிற்று. இதை "ரம்பம்' என்றும் "அரம்பம்' என்றும் சொல்லலாம்; சொல்லுவார்கள்.


அரவம்


பாம்புக்கு அரவம் என்ற வேறு பெயரும் உண்டு. அரவுதல் என்பதற்குத் தீண்டுதல், கடித்தல், வருத்துதல், துன்புறுத்துதல் எனப் பல பொருள்கள் உண்டு. எனவே, அஃது அரவம் எனப்பட்டது. 

மேலும், அரவு என்பதற்குச் சப்தம், இரைச்சல், ஒலி, ஓசை என்ற பெயரும் உண்டு. மேலும், அது "உஸ் உஸ்' என சப்தம் எழுப்பும் தன்மையது. எனவே, அஃது அரவமும் ஆயிற்று.


அரவணைத்தல்


பாம்பின் வகைகளான சாரைப் பாம்பும், நல்ல பாம்பும் ஒன்றை ஒன்று கட்டிப்பிடித்து அரவணைத்து ஆலிங்கணம் செய்யும். எனவே, இச்செயல் அரவணைத்தல் எனப்பட்டது. அரவணைத்தல் என்பதற்குப் "பாம்புச் சேர்க்கை' என்பது பொருளாகும். மேலும், ஒத்துப்போதலும் ஆகும். 


 அரண்மனை


"அரண்' என்பதற்குப் பாதுகாப்பு என்பது பொருள். "மனை' என்பதற்கு இல்லம் அல்லது "வீடு' என்பது பொருள். மன்னர் அல்லது அரசர் வாழும் இடம் அரண்மனை ஆயிற்று. மன்னர் வாழும் அவ்விடம் - அம்மனை அகழிகளாலும், மதில் சுவர்களாலும், படைப் பாதுகாவலர்களாலும் அரண் செய்து பாதுகாப்பாக சூழப்பட்டிருக்கும். எனவே, அஃது அரண்மனை ஆயிற்று.


அரிவை


அரிவை என்பதற்குப் "பெண்' என்பது பொருளாகும். அதாவது 20 முதல் 25  வயதுள்ள பெண் "அரிவை' எனப்பட்டாள். அதாவது,  "அரி' என்னும் சிங்கத்தைப் போன்று எடுப்பான தோற்றமும், அழகும், ஆற்றலும் பெற்ற அப்பெண்மகள் அரிவை ஆனாள்.


ஆண் - பெண்


ஆளுமைத்தன்மை உடையவன் ஆள் + அண் = ஆளண் - ஆண் ஆனான். அதுபோல் பேணுதல் தன்மை உடைய அப்பெண் மகள் பேண் + அண் = பேணன் - பெண் ஆனாள். 


"சொல்லாய்வுச் செம்மல்' குடந்தை வய்.மு. கும்பலிங்கன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com