எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சவில்லை!

பாவேந்தருக்கு 28-7-1946-இல் சென்னையில் நிதி அளிப்பு விழா நடைபெற்றது. அவ்விழாவுக்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமை தாங்க, அறிஞர் அண்ணா பாவேந்தருக்கு நிதி வழங்கினார்.
எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சவில்லை!
Published on
Updated on
1 min read


பாவேந்தருக்கு 28-7-1946-இல் சென்னையில் நிதி அளிப்பு விழா நடைபெற்றது. அவ்விழாவுக்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமை தாங்க, அறிஞர் அண்ணா பாவேந்தருக்கு நிதி வழங்கினார். நிதியைப் பெற்றுக்கொண்டு பாவேந்தர் நிகழ்த்திய உரையின் சுருக்கம் "சக்தி' இதழிலிருந்து இங்கே  வெளியிடப்படுகிறது:

எனக்கு இன்று அளித்த கெளரவத்திற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இது எனக்கு அளித்த கெளரவமல்ல; தமிழுக்கு அளித்த கெளரவம்.

செய்யத் துணிபவனுக்கு, எண்ணத் துணிபவனுக்குத்தான் வெற்றி கிட்டுகிறது. தன்னுடைய செயல் முறையும் கொள்கையும் சரியானதென்று நம்புபவன், எந்த எதிர்ப்புக்கும் அஞ்சி கொள்கையினின்றும் பிறழக்கூடாது. இவனுக்கு என்றாவது ஒருநாள் வெற்றி வந்தே தீரும். என் வாழ்நாள் முழுவதும் இதுவே என் கொள்கையாக இருந்து வந்திருக்கிறது. சுயேச்சையான மனோபாவத்திடம் எனக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் பலன்தான் நான் இன்று பெற்றிருக்கும் இந்தப் பணமுடிப்பு.

இன்று, தமிழகத்தில் பழமையின் சிறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் போதும் என்னும் மனோபாவம் பொதுவாகப் பரவியிருக்கிறது. இது முன்னேற்றத்திற்கு வழி காட்டாது. பழமையை உதறித்தள்ளி புது வழியை மேற்கொள்பவன்தான் உண்மையான சேவை செய்தவன்.

தமிழுக்குச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. மக்களின் தமிழ்க் காதல் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. கரையான் அரித்த பழைய துறையிலிருந்து மெல்ல மெல்ல விலகிப் புரட்சிக்கரமான புதுத் துறையில் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இன்றைய நவயுக எழுத்தாளர்களும், கவிகளும் தமிழ் நாட்டில் எதிர்காலம் சிறப்படைய வேண்டுமானால், அதற்கு உண்மையாகவே புத்துயிர் பிறக்க வேண்டுமானால், இத்தனை எழுத்தாளர்களும், கவிகளும் குறுகிய சாதி வேறுபாடுகளைத் தகர்த்து எறியக் கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட வேண்டும். அடிமை மனப்பான்மையை ஒழித்து சுயேச்சையான எண்ணத்தையும், பரந்த நோக்கங்களையும் வளர்க்க முற்பட வேண்டும்.

"இந்த விஷயத்தைப் பற்றி எழுது' என்று கவிஞனிடம் ஒப்பந்தம் பேசுவது நடக்காத காரியம். குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி இன்னொருவர் சொல்லி, கவி எழுத முடியாது. ஒரு கொடுமையை அல்லது ஒரு காட்சியைக் கண்ட அளவில் உணர்ச்சி தூண்டக் கவி எழுத வேண்டும்.

என் இளைய நண்பர்களுக்கு நான் கூற விரும்புவது இதுதான்! தமிழ் படி; தமிழ் பேசு, தமிழ் எழுது. கொடுமை கண்டவிடத்து எதிர்த்துப் போராடு. யாரேனும் தமிழைப் பழித்தால் லேசில் விடாதே.

அச்சமின்மையை வளர். புரட்சி மனப்பான்மை என்னுள் புகுந்த பொழுது எனக்கு எவ்வளவோ எதிர்ப்புகள் ஏற்பட்டன. நான் அவைகளைக் கண்டு அஞ்சவில்லை. ஏனெனில் எதிர்ப்பிலிருந்து நன்மை பிறக்கிறது, அறிவு வளர்கிறது. பாரதியார் "அச்சம் தவிர்' என்றும்,  "போர் முனை விரும்பு' என்றும்தான் கூறியிருக்கிறார். தமிழ் வாழ்க!
"பார் புகழும் பாவேந்தர்' நூலிலிருந்து...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com