எதையும் அவரிடம் சொல்ல வேண்டாம்...

"யார் எப்படிப் போனால் என்ன?' இப்படி அயலார் - நமக்கு உறவில்லாதவர் நினைக்கலாம்.
எதையும் அவரிடம் சொல்ல வேண்டாம்...

"யார் எப்படிப் போனால் என்ன?' இப்படி அயலார் - நமக்கு உறவில்லாதவர் நினைக்கலாம். அவர் அப்படி நினைத்தால் என்ன செய்வது? அவர் பிழைப்பைப் பார்த்து போய்விட்டார். நம்மையே நம்பியிருப்பவள் பிழைக்க வேண்டும் என்று நினைத்தாரா?' - இப்படி தலைவி நினைக்கிறாள். இது மட்டுமா நினைக்கிறாள்? "உடம்பில் எங்கே இருக்கிறது என்று தெரியாத மனம் எவ்வளவோ நினைவுகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆகிவிட்டது'. அவள் மேலும் நினைக்கிறாள்...

"பெரிய இவர்! போகும்போது சும்மா போயிருக்கக்கூடாதோ! "அன்புத் தலைவியே! பொருள் தேடுவதற்காகப் போகும் நான் மழைக் காலம் வரும் முன் வந்துவிடுவேன்' என்று வேறு சொல்லிவிட்டுப் போக வேண்டுமா? மனம் அதையே நினைத்து, இப்போது அவர் வராமல் மழை வந்து ஊரையே அலசுகிறது. என் மனம் என்ன பாடுபடும்?' என்றெல்லாம் நினைக்கிறாள்.

யாரையாவது அவர் போயிருக்கும் இடத்திற்குச் சென்று அவரைப் பார்த்துச் சூடாக எதையாவது கேட்டு வரச் சொல்லலாம் போன்று தோன்றுகிறது அவளுக்கு. என்ன கேட்பது?  "சொன்ன சொல்லை மறந்திடலாமா? மழை பெய்கிறதே... என்ன சொல்லிவிட்டு வந்தீர்' என்று சினம் தோன்ற கேட்டுவரச் சொல்லலாம். இதைவிட எப்படிச் சுருக்கமாகச் சொல்வது? ஒரே ஒரு சொல் அவருடைய தவறை உணர்த்துவதுபோல கேட்டுவரச் சொல்ல வேண்டும். "இவ்வளவுதானா' என்று கேட்டாலே போதும்.

"இவ்வளவுதானா' என்றால், உங்கள் வாக்குறுதி இவ்வளவுதானா? என்று பொருள் கொள்ளலாம். உங்கள் காதல் இவ்வளவுதானா? என்று பொருள் கொள்ளலாம். உங்கள் நாணயம், நேர்மை, பரிவு, இரக்கம், மனிதநேயம் எல்லாம் இவ்வளவுதானா என்றும் பொருள் கொள்ள முடியும். ஆனால், இந்தப் பொருளெல்லாம் பொருளைத் தேடிச் சென்றவருக்குப் புலப்படுமா? ஆகவே, இதைவிட சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைக்கிறாள் தலைவி.

தோழியிடம் தன் மனத்தில் ஓடிய எண்ணங்களை எல்லாம் எடுத்துக் கூறுகிறாள். "இதைவிட எப்படிச் சுருக்கமாக மனத்தில் உறைக்கும்படிச் சொல்வது' என்று கேட்கிறாள். மேலும், "தோழி! நமக்காக அவரைத் தேடி செய்தி சொல்லப் போகிறவரிடம் ஒன்று சொல். "எதையும் அவரிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்' என்றாள். 

"எதையும் சொல்லாமல் உன் நிலைமையை உணர்த்துவது எப்படி?' என்று கேட்கிறாள் தோழி.

"அடியே என் அன்புத் தோழி! நம் கொல்லையில் இந்த மழைக்கால மாலையில் மஞ்சள் நிறத்தில் பூத்து, பின் வாடத் தொடங்கிவிடும் பீர்க்கம் பூக்களில் சிலவற்றைக் கொண்டுபோய் அவரிடம் காட்டி வரச்சொல். வேறு எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்' என்கிறாள்.

இந்தப் பீர்க்கம் பூக்களைக் காட்டினால், "இது கார்காலம். இக்காலத்தில்தான் பீர்க்கங் கொடி பூக்கும். பொலிவோடு மழைக்கால அந்தியில் மலரும் பீர்க்கம் பூ, இரவு வந்து சேரவே பொலிவிழந்து வாடிவிடும். இப்படித்தான் தலைவனே! உன் தலைவியின் நெற்றியும், மேனியும் ஆகிவிட்டன' என்று தெளிவாக உணர்த்திவிடும்' என்றாள் தலைவி.  இதுதான் புலவர் கோக்குளமுற்றனின் அருமையான சொல்லோவியம்.

இன்னள் ஆயினள் நன்னுதல் என்று அவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன்; வாழி தோழிநம் படப்பை
நீர்வார் பைம்புதற் கலித்த
மாரிப் பீரத்து அலர்சில கொண்டே!  (குறுந்.98)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com