பாடிக்கொடுத்தாள் பாமாலை, சூடிக் கொடுத்தாள் பூமாலை!

விட்டுசித்தர் என்னும் இயற்பெயர் கொண்ட பெரியாழ்வார் மல்லிநாட்டு வில்லிபுத்தூரில் வாழ்ந்தவர்.
பாடிக்கொடுத்தாள் பாமாலை, சூடிக் கொடுத்தாள் பூமாலை!

விட்டுசித்தர் என்னும் இயற்பெயர் கொண்ட பெரியாழ்வார் மல்லிநாட்டு வில்லிபுத்தூரில் வாழ்ந்தவர். மகப்பேறு வாய்க்காத அவர், ஒரு நாள் தம்முடைய நந்தவனத்தில் பச்சிளம் பெண்குழந்தையொன்றைக் கண்டார். அதனை வாரியெடுத்து மார்பிலணைத்துத் தம் மனையாள் கைகளில் ஒப்படைத்தார். அக்குழந்தைக்கு, "மாலை' என்னும் பொருளுடைய "கோதை' என்னும் அழகுதமிழ்ப் பெயர் சூட்டினார். 

தம் குடிக்குத் திரியும் நெய்யும் தேசுறத் தேட வேண்டாம்; திருவிளக்கு இவளே போதும் என்று சீராட்டிப் போற்றி வளர்த்தார். கோதை, அவருக்கு வளர்ப்பு மகளே; ஆயினும், பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே என்றுதான் வைணவ உலகம் அவளுக்கு வாழ்த்துப் பாடுகின்றது. 

பெரியாழ்வாரும் அவர்தம் திருமகளாரும் என்று வைணவ சமய குரவர் (ஆசார்யர்)களும் இந்த உறவை உறுதிப்படுத்தினர். ஆண்டாளும் திருப்பாவைப் பலன் கூறும் பாட்டில், "பட்டர் பிரான் கோதை' என்றே பாடக் காண்கிறோம். நாச்சியார் திருமொழியிலும் இந்த உறவை விட்டுக் கொடுக்காமல், விட்டுசித்தன் கோதை எனப் பலவிடத்தும் பாடுவதைப் பார்க்கலாம். 

இன்று பெருக வழங்கும் ஆண்டாள், நாச்சியார் போன்ற பெயர்களை ஓரிடத்தும் அவள் குறிப்பிடவில்லை. எனினும் இப்பெயர்களோடு, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று வேறு ஒரு பெயரும் வழங்கிவருவதை நாம் அறிவோம். 

இப்பெயர்க் காரணம் பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். வில்லிபுத்தூர் இறைவனுக்காகப் பெரியாழ்வார் தொடுத்து வைத்த பூமாலையை அவருக்குத் தெரியாமல் எடுத்துத் தன் கழுத்தில் அணிந்து அழகு பார்த்தவள் ஆண்டாள். கண்ணன் என்னும் கருந்தெய்வக் காட்சி பழகிக் கிடந்தவளுக்கு (627) இச்செய்கை உவப்பாகவே தோன்றியது; தப்பாகத் தெரியவில்லை. 

பலநாள் பெரியாழ்வாருக்குத் தெரியாமல் நடந்த இந்நிகழ்வு, ஒரு நாள் அவருக்குத் தெரிந்துவிட, "தெய்வக் குற்றம்' என்று மனம் பதைத்தார்; துடித்தார். மகளைக் கடிந்து கொண்டார். 

அவர் பார்வையில் அந்த மாலை இறைவனுக்குச் சூட்டும் தகுதி இழந்ததாயிற்று. ஆனால், வில்லிபுத்தூர் உறைவான்தன் திருவுள்ளமோ வேறாக இருந்தது. அன்று இரவு ஆழ்வாரின் கனவில் வந்த மாலவன், "அவள் சூடிக் களைந்த மாலையே எமக்கு இனிதாம்; அம்மாலையைக் கொண்டு வந்து எமக்குச் சூட்டுக' என்று கூறினான். 

ஆண்டாளைப் போலப் பாமாலை சூட்டிய தேவியரும் இல்லை. பூமாலையைத் தாம் சூடித் திருமாலுக்குச் சூட்டிய ஆழ்வாரும் இல்லை. ஆதலின் ஆழ்வார்களைக் காட்டிலும் விஞ்சிய பெருமை ஆண்டாளுக்கே உரியது. எனவேதான் இந்நிகழ்வில் ஈடுபட்ட மனிதமனம் காலமெல்லாம் அவளைச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்றே கொண்டாடுகின்றது.

அவள் பாடிக் கொடுத்த பாமாலைகளை மகிழ்ந்து ஏற்றுக் கொண்டது போலவே அவள் சூடிக் கொடுத்த பூமாலைகளையும் உகந்து ஏற்றுக் கொண்டான் இறைவன். இவ்விரண்டாலும் விஞ்சிய மகிழ்ச்சி இறைவனுக்கு மட்டும்தானா? இல்லை, அடியவர்களுக்கும்தான். 

இதைத் திருப்பாவைக்கு உய்யக்கொண்டார் பாடிய தனியன்கள் (சிறப்புப் பாயிரம்) உணர்த்துகின்றன.

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் 
            இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
இந்த நினைவு அந்தாதியாய்த் தொடரவே அடுத்த வெண்பாவிலும்,
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே 
            தொல்பாவை 
பாடி யருளவல்ல பல்வளையாய் நாடிநீ
"வேங்கட வற் கென்னை தி' என்ற 
            இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு
என்று கொண்டாடுகிறார் அந்தத் திருத்தொண்டர்.
ஆண்டாளின் இந்த வாழ்க்கை நிகழ்ச்சியைப் பெரியாழ்வாரின் திருமொழிப் பாசுரம் ஒன்றும் குறிப்பாகப் புலப்படுத்துகிறது.
காறைபூணும்; கண்ணாடி காணும், தன்
    கையில் வளைகுலுக்கும்;
கூறை உடுக்கும், அயர்க்கும் தன்
    கொவ்வைச் செவ்வாய் திருத்தும்;
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்
    தேவன் திறம் பிதற்றும்;
மாறில் மாமணிவண்ணன் மேல் இவள்
    மால்உறு கின்றாளே!

காதல் வயப்பட்ட பெண்ணொருத்தி கண்ணாடி முன்னின்று தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் செயலை விவரிக்கிறது பாட்டு. 

காறை என்பது கழுத்தணி. கூறை என்பது ஆடை. ஆக அணிகலன்களைப் பூண்டும், ஆடையை அவிழ்த்து அவிழ்த்து உடுத்தியும், கைவளைகளைக் குலுக்கியும், கொவ்வைக் கனி போன்ற வாயை மேலும் சிவக்கும்படி திருத்தியும் காதலில் பித்தேறி நிற்கும் தன் மகளைத்தான் இப்பாசுரத்தில் சித்திரிக்கிறார் பெரியாழ்வார். 

திருமாலுக்கு எனத் தொடுத்த மாலையை அவள் அணிந்து பார்த்த செயலை மட்டும் பதிவுசெய்ய மனமின்றித் தவிர்த்து விடுகிறார். ஆனால் ஆழ்வாரின் இந்தப் பாடலைப்படித்த கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு, "அவள் மாலை சூடிநின்ற அழகும்' சேர்ந்தே மனக்கண்ணில் தோன்றியிருக்கக் கூடும். 

எனவே பாலகாண்டம் பூக்கொய் படலத்தில் தன் காதலனோடு ஊடிய  ஒருத்தி கண்ணாடி பார்த்து வருந்திய காட்சியைப் பின்வருமாறு அமைக்கிறார் அவர்.

நாடிக் கொண்டாள் குற்றம் நயந்தாள் 
        முனிவு ஆறாள்
ஊடிக் காணக் காட்டு நலத்தாள் உடன்நில்லாள்,
தேடித் தேடிச் சேர்த்த செழும்பூ நறுமாலை
சூடிச் சூடிக் கண்ணடி நோக்கித் துவள்வாளும்
என்பது பாடல்.

சூடிக் கொடுத்தவளின் வாழ்க்கை நிகழ்ச்சியை நினைத்தே கம்பர் இப்படியொரு காதல் காட்சியைத் தம் காவியத்தில் அமைத்திருக்கலாமோ என்று நினைக்கத்தோன்றுகிறது.

தேடித்தேடிச் சேர்த்த செழும்பூ நறுமாலை 
சூடிச் சூடிக் கண்ணடி நோக்கித் துவள்வாளும் 

என்னும் பாடலின் பின்னிரண்டடிகள் இந்த ஊகத்தை ஊக்குவிப்பதாய் அமைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com