மாரிமுத்தாப் பிள்ளை பாடிய திருப்புலியூர் வெண்பா

தமிழ் இசைக்குப் பெருந்தொண்டாற்றிய சீர்காழி மூவருள் ஒருவர் மாரிமுத்தாப் பிள்ளை. தில்லை ஈசன்மேல் பல பாடல்கள் புனைந்தவர்.
மாரிமுத்தாப் பிள்ளை பாடிய திருப்புலியூர் வெண்பா

தமிழ் இசைக்குப் பெருந்தொண்டாற்றிய சீர்காழி மூவருள் ஒருவர் மாரிமுத்தாப் பிள்ளை. தில்லை ஈசன்மேல் பல பாடல்கள் புனைந்தவர். பல சிறப்பான நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒரு அருமையான இலக்கிய நூலே "திருப்புலியூர் வெண்பா'வாகும். இதில் நூறு வெண்பாக்கள் உள்ளன. இதன் வெண்பா அமைப்பு தமிழைப் பயில்வோருக்குச் சிறந்த வழிகாட்டியாக உள்ளது.

திருப்புலியூர் வெண்பா முழுதும் இருவிகற்ப நேரிசை வெண்பாவாலமைந்தது. இந்நூலின் அருமையான அமைப்பினைப் பின்வரும் வெண்பாவாற் கண்டுணரலாம்.

மன்னுபுலி யூர்க்கு வகுத்தவெண்பா நூறவற்றில் 
உன்னி லிருபத்தைந் தோர்வயனம் - பின்னுமுள
ஐயைந் தொருவயன மையைந் தொருவயனம் 
 ஐயைந் தொருவயன மாம் (101)

அதாவது, திருப்புலியூர் வெண்பாவிலுள்ள நூறு செய்யுள்களை இருபத்தைந்து இருபத்தைந்தாகப் பிரித்துக் கொண்டால், அவற்றுள் ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமாக (வயனம்- வகை) வருவதனைக் காணலாம். 

முதல் 25 பாடல்கள் முதலிரண்டடியால் தலமகிமையைக்கூறிப் பின்னிரண்டடி திரிபாக வரும். எடுத்துக்காட்டாக, 
தத்துதிரைப் பாலுததி தன்னையழும் வெம்புலியின் 
புத்திரனுக் கீயும் புலியூரே - பத்தித் 
தவந்தழைத்த சித்தனார் தாம்சமைத்த சேயை 
உவந்தழைத் தசித்த னாரூர் (6)  
எனும் பாடல்.

பாலை விரும்பியழுத வியாக்கிரபாத முனிவரின் மகவுக்காக இறைவர் பாற்கடலைக் கொடுத்த புலியூரானது, தவத்தில் சிறந்தவராக வந்து சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறி கேட்டு அவர் அவ்வாறே சமைத்தபின் அப்பிள்ளையை அழைத்து உயிர்ப்பித்த சித்தரின் ஊராகும்.

"தவம் தழைத்த சித்தனார்', "உவந்து அழைத்த சித்தனார்' என வரும் சொற்களில் திரிபினைக் காணலாம். அடுத்த 25 வெண்பாக்கள் முன்னிரண்டடி தலமகிமையும், பின்னிரண்டடி யமகமாகவும் வரும்.

பத்தரைக்கொண் டேபேசாப் 
    பாவைதனைப்பே சுவித்துப் 
புத்தரையாட் கொள்ளும் புலியூரே 
    - முத்திதரும் 
பஞ்சாக் கரனார் பணிவார் 
    வினையழன்முன் 
பஞ்சாக் கரனார் பதி. (28)

மாணிக்கவாசகர் மூலமாக, பேசாத ஊமைப்பெண்ணைப் பேசவைத்து புத்தசமயத்தோரை ஆட்கொண்ட புலியூரானது, பஞ்சாட்சரத்தை உச்சரிப்போருக்கு முத்தியைத்தருபவரும், தம்மைப் பணிவோருடைய வினைகளை அழலாகிய நெருப்பின்முன் பஞ்சுபோலாக்குபவருமான அரனார் வாழுமிடமாம். 

"பஞ்சாக்கரனார்' எனும் சொல்லுக்கு இரு இடங்களிலும் வெவ்வேறு பொருள் வந்ததனால் மடக்கு அல்லது யமகமாயிற்று.

அடுத்த 25 வெண்பாக்கள் முன்னிரண்டடி சிலேடையாகவும், பின்னிரண்டடி திரிபாகவும் வரும்.

கட்பங் கயமின்னார் 
கார்க்குழலி லந்தியினிற் 
புட்பஞ் சரஞ்சேர் புலியூரே -         நட்பினொடு 
மெச்சிக்கும் பிட்டார் மெலிவொழிப்பார் 
வந்தியிட 
விச்சிக்கும் பிட்டா ரிடம் (54)

தாமரை போலும் கண்களையுடைய மின்னலையொத்த பெண்கள் தமது கருங்குழலில் மலரால் தொடுத்த சரங்களை அணியும் அந்திநேரத்தில் பறவையினங்கள் கூட்டினைச் சேரும் புலியூரானது, அன்போடு புகழ்ந்து கும்பிடும் அடியார்களின் பிறவித்துன்பத்தை ஒழிப்பவரும், வந்தியம்மை கொடுக்க பிட்டுணவை விரும்பியுண்பவருமான இறைவரின் இடமாகும். 

இதில் "புட்பம் சரம் சேர்' எனவும், "புள் பஞ்சரம் (கூடு) சேர்' எனச் சிலேடையாகி வந்தமையும், "மெச்சிக் கும்பிட்டார்', "இச்சிக்கும் பிட்டார்' என வரும் திரிபையும் காணலாம்.

அடுத்த 25 வெண்பாக்கள் முன்னிரண்டடி சிலேடை பற்றிய உவமையும் (அதன் மூலம் வரும் உபமானம்), பின்னிரண்டடி திரிபாகவும் வரும். 

காற்காட்டி யாறுதலைக் 
காட்டியடுத் தோர்க்கயில்வேள்
போற்கா வனஞ்சூழ் புலியூரே-         பாற்கோலக்
குட்டிக்கங் கூட்டினார் 
கொச்சைமுக மாமனுக்கன்
றொட்டிக்கங் கூட்டினா ரூர். (86)


தம்மை அண்டியவர்களுக்குத் திருவடியைக்காட்டி, ஆறுதிருமுகங்களையும் காட்டிடும் வேலேந்திய முருகப்பெருமானைப் போல், தம்மை அடைந்தோர்க்குத் தென்றல் காற்றைக்காட்டி, இளைப்பாறுதலைக் காட்டிடும் காடும் வனமும் சூழ்ந்த புலியூரானது, தாயாய் வந்து பன்றிக்குட்டிக்குப் பாலை ஊட்டினவரும், ஆட்டுமுகத்தைத் தன் மாமனான தக்கனுக்கு தலையாக ஒட்டினவருமாகிய இறைவன் வாழும் ஊராகும். 

இங்கு தென்றலை முருகனுக்கு உவமித்தார். 'குட்டிக்கு அங்கு ஊட்டினார்', 'ஒட்டிக் கம் கூட்டினார்' எனும் திரிபினையும் காண்க!  

இவ்வாறு இந்நூல் ஒப்பற்றதொரு வெண்பாப் பிரபந்தமாகத் திகழ்கின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com