அருங்கலச் செப்பு!

"அருங்கலச் செப்பு' என்னும் தமிழ் நீதிநூல் பெயர் தெரியாத சமண முனிவர் ஒருவரால் 12-ஆம் நூற்றாண்டில்  இயற்றப்பட்டுள்ளது.
அருங்கலச் செப்பு!
Published on
Updated on
2 min read

"அருங்கலச் செப்பு' என்னும் தமிழ் நீதிநூல் பெயர் தெரியாத சமண முனிவர் ஒருவரால் 12-ஆம் நூற்றாண்டில்  இயற்றப்பட்டுள்ளது. "ரத்ன கரண்ட சிராவகாசாரம்' என்னும் நூலின் மொழிபெயர்ப்பான இந்நூல் 180 குறள் வெண்பாக்களை உடையது. சமண இல்லறத்தார் பின்பற்ற வேண்டிய கடமைகளை எடுத்தியம்புகிறது இந்நூல்.

நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என அறத்தையும்;  நல்லொழுக்கத்தை இல்லறம், துறவறம் எனவும் (இரண்டாக) பகுக்கிறது. சமண சமயத்தின் நெறிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும், வாழ்வியல் முறைகளையும் எடுத்தோதுகிறது.

நூலின் அமைப்பு, முதல் நூலான "ரத்ன கரண்ட சிராவகாசாரம்' என்னும் சமந்தபத்திரரால் எழுதப்பட்ட நூலை ஒட்டியே  அமைந்துள்ளது. பெயர் தெரியாத "அருங்கலச் செப்பு' ஆசிரியர்  தமிழோடு வடமொழியிலும் சிறந்த புலமை பெற்றிருப்பதை அறிய முடிகிறது.

பூஜ்ய ஆர்ஜவசாகர் முனி சங்கம் தமிழ்நாட்டில் சமணம் சார்ந்த 18 ஊர்களில் ஸ்ரீமகாவீரர் பள்ளிகள்  உள்ளன. அப்பள்ளி மாணவர்களுக்கு நான்காண்டு பாடத்திட்டத்தில்  மூன்றாம் ஆண்டுக்கு, "அருங்கலச் செப்பு'  பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.

இல்வாழ்வில் உண்மையான பக்தி எவ்வாறெல்லாம் அமைய வேண்டும் என்று இந்நூலில் பதித்த கருத்துகளை வெளிப்படுத்தி உரையும் வெளிவந்துள்ளது. இல்வாழ்வார் அருகன் தவிர பிறரையும் வணங்கலாம் என்பதுபோல பேசப்படுகிறது. இறையைப் பற்றிய உண்மையைத் தேடுபவர் இந்நூலைப் பயில்வதன் மூலம் தெளிவடையலாம் என்பர்.

அருங்கலம் என்றால் ரத்தினம்; செப்பு எனில் கரண்டகம்  (பெட்டி). இரண்டு நூல்களுக்கும் இடையே பெயர் ஒப்புமையே இது.  

"அருங்கலச் செப்பு' எனும் சொல்லாட்சி, சிலம்பில் பின்வருமாறு  பயின்று வருவதைக் காணலாம்.

"ஆயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு
வாய்திறத் தன்ன மதிலக வரைப்பின்...' 
(சிலம்பு. ஊர்காண் 68-69)

அருங்கலச் செப்பு என்ற சொல்லுக்கு அரிய அணிகலன்களை வைத்துள்ள பேழை (பெட்டி)  எனப் பொருள் கொள்ளலாம். "பெறுதற்கரிய மணிக்கலம் பெய்த மணிப்பெட்டகம்' என்று உரையாசிரியர் அடியார்க்குநல்லார் உரை 
காண்கிறார்.

அருங்கலச் செப்பு என்ற சொல்லாட்சியைக் குறிக்கும் சீவக சிந்தாமணி அடி "அருங்கலப் பேழை' என்று சொல்கிறது. "அருமணி வைரம் வேய்ந்த அருங்கலப் பேழை ஐந்நூறு' (சீவக.வரி. 557) என்று பயன்று வருவதையும் காணலாம்.
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்கள் கொண்ட திருக்குறள் போன்று அருங்கலச் செப்பு நூலிலும் இவ்வுறுதிப் பொருள்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

நற்காட்சி, நன்ஞானம்,  நல்லொழுக்கம் ஆகிய மூவகை அறத்தை வலியுறுத்தும் கருத்துகள் குறட்பாவில் பரிணமிக்கின்றன. இறையியல்பு, அறம், மதம், பிறப்பு, வறுமை, ஆகமம், இல்லறம், கொல்லாமை, பொய்யாமை, திருடாமை, காமம், விரதம், எண்வகை குணங்கள், பயனில செய்யாமை, உண்ணா நிலை, ஈகை, விருந்தோம்பல், வடக்கிருத்தல் முதலிய பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய 180 (நூற்றென்பது) குறட்பாக்கள் மூலம் "அருங்கலச் செப்பை' ஆசிரியர் எடுத்தோதுகிறார்.

சில குறட்பாக்களைக் காண்போம்:
முற்ற உணர்ந்தானை ஏற்றி மொழிகுவன்
குற்றமொன் றில்லா அறம் (1)
அனைத்துப் பொருளையும் ஒருங்கே அறியும் அறிவனை வாழ்த்தி, அவருக்குரிய குற்றமற்ற அறத்தைக் கூறுவன் என்பதாம்.
பிறப்பு குலம்வலி செல்வம் வனப்பு
சிறப்பு தவம் உணர்வோ டெட்டு  (34) 
குடி, குலம், வலிமை, செல்வம், எழில், பெருமை, தவம் மற்றும் அறிவோடு எட்டாகும் மதமாம்.
காட்சி  யுடையார் வினைவரும் வாயிலின்
மீட்சியா நல்லொழுக்கம் நன்று (6) 

நற்காட்சியாளரின் உயிரில் வினைகள் வந்து சேராவண்ணம் அவ்வழியை அடைத்து அவரை நன்கு மீளச் செய்வது நல்லொழுக்கமாகும். 

நூலின் இறுதியில் நூற்பயனைக் கூறி, பார்சுவநாதர் என்ற தீர்த்தங்கரரை வணங்கி இந்நூலை நிறைவு செய்துள்ளார் இதன் ஆசிரியர்.

எல்லா மதத்தினரும் தமிழ்மொழியை வளர்த்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், நீதி நூல்களில் போற்றத்தக்க ஒன்றாகவும் விளங்கும் "அருங்கலச் செப்பு' நூலை ஒருமுறையேனும் படித்துணர்ந்து அதன் பெருமையை உணர்வோம். 

பேராசிரியர் அ.மாணிக்கம் எழுதிய தெளிவுரையுடன் இந்நூல் "மணிவாசகர் பதிப்பகம்' வெளியீடாக வெளிவந்துள்ளது கூடுதல் செய்தியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com