வரலாறு போற்றும் மருதுபாண்டியர்!
மருது பாண்டியர்களைப் பற்றிப் பாடப்படும் புகழ்ப் பாடல்களில் ஒன்றான, "சாந்து பொட்டு தளதளக்க' என்று தொடங்குகிற பாடல் குறிப்பிடத்தகுந்தது.


மருது பாண்டியர்களைப் பற்றிப் பாடப்படும் புகழ்ப் பாடல்களில் ஒன்றான, "சாந்து பொட்டு தளதளக்க' என்று தொடங்குகிற பாடல் குறிப்பிடத்தகுந்தது. "சிவகெங்கைச் சீமை' என்னும் திரைப்படத்தைத் தயாரித்த கவியரசு கண்ணதாசன் இதற்குத் திரைக்கதை, வசனமும் தீட்டியிருக்கிறார். அதில் இடம்பெற்ற பாடல்தான் இது.
இப்பாடலில், "பத்தினிப் பெண்மை காப்பவராம், பாவலர் வறுமை தீர்ப்பவராம்' என வரும் வரிகள் வெறும் புகழ்ச்சிக்காக மட்டும் பாடப்பட்டவை அல்ல. இதற்கு பல வரலாற்றுச் சான்றுகளும் உண்டு. சங்ககாலப் பாண்டிய மன்னர்கள் "சங்கம் வைத்து தமிழ் வளர்த்து, குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிந்ததைப் போலவே' மருது பாண்டியர்களும் செங்கோல் ஆட்சி சிறக்க ஆட்சி செய்திருக்கிறார்கள்.
மருதுபாண்டியரிடம் முறையான நீதிமன்றம் இருந்தது. ஐவர் கூடித் தீர்ப்பளிக்கும் வழக்கம் இருந்தது. கிராமப் பஞ்சாயத்துகளில் தோல்வி கண்டவர்கள் அரசரிடம் அப்பீல் செய்யும் வழக்கம் இருந்தது. ஆனாலும் இந்த அப்பீல் குறைவாகவே இருந்தது.
"கிராமப் பஞ்சாயத்துகளே அவ்வளவு தெளிவான நீதியை வகுத்திருந்தன' என்று மருது பாண்டியர்களின் தமிழ்ப் பெருமையையும், செங்கோல் ஆட்சிச் சிறப்பினையும் கண்ணதாசன் விவரிக்கிறார். இவற்றுக்குச் சான்றாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அது இலக்கியங்களில் மட்டுமின்றி, "சிவகெங்கைச் சீமை' திரைப்படத்திலும் இடம்பெற்றது.
புலவர் ஒருவர் தன்னுடைய மனைவியுடன் குன்றக்குடி கோயிலுக்குச் சென்று முருகப் பெருமானை வழிபட்டுவிட்டு, அந்தத் திருக்கோயிலின் சிறப்புக்குக் காரணம் மருதுபாண்டியர்களின் திருப்பணிகளே என்பதனை அறிந்து அவர்களையும் காண்பதற்காகச் சிவகங்கைக்குப் புறப்பட்டார். ஆனால், பயணம் முடிவதற்குள்ளாகவே இருள் கவிந்துவிட்டது. மருது பாண்டியர்களின் ஆட்சியில் திருட்டுப் பயம் கிடையாது என்பது புலவரின் நம்பிக்கை. அதனால் துணிந்து இரவிலும் பயணத்தைத் தொடர்ந்தனர்.
அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் கள்வர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காகப் புலவர், "நான் மருதுபாண்டியர்களைப் பார்க்கப் போகிறேன்' என்று கூறியிருக்கிறார். அதற்குக் கள்வர்கள், "அப்படி என்றால் உங்களிடம் பரிசுப்பொருள்கள் இருக்க வேண்டுமே. அவற்றைத் தாருங்கள்' என்று மிரட்டினர். ஆனால் புலவர், "நான் பரிசுப்பொருள் பெறுவதற்காக வெறுங்கையோடு போகிறேன்' என்று கூற, "இந்தப் பெண் பிள்ளையிடம் என்ன இருக்கிறது என்று பாருங்கள்' என மற்றவர்களுக்கு ஆணையிட்டான் கள்வன் ஒருவன்.
"ஏதேனும் நகை உண்டா' என்று தேடிப்பார்த்தால் ஒன்றுமில்லை. ஆத்திரத்தில் புலவரை அடிக்கத் துணிந்து விட்டார்கள். இதனால் அச்சமுற்ற புலவரின் மனைவி, "என்னிடம் தாலியைத் தவிர வேறு ஏதும் இல்லை' என்று இரங்கும் குரலில் கூறியிருக்கிறார். சற்றும் இரக்கமில்லாத அந்தக் கொடிய கள்வர்கள் தாலியைப் பறித்துக்கொண்டு இருளில் ஓடி மறைந்து விட்டார்கள்.
கோயில் வழிபாடு முடித்து வந்த நேரத்தில் தாலி பறிபோய்விட்ட துயரம் அந்தப் பெண்ணை உருக்கியது. "இப்படியோர் அக்கிரமம் எங்காவது நடக்குமா?' என்று முருகனைப் பார்த்து வேண்டினாள். மறுநாள் விடியல் பொழுதில் ஒரு சத்திரத்தில் மனைவியைத் தங்க வைத்துவிட்டு மருது பாண்டியரைப் பார்ப்பதற்காக அரண்மனைக்குச் சென்றார் புலவர்.
"மன்னரை அவசரமாகப் பார்க்க வேண்டும்' என்று செய்தி சொல்லி அனுப்பினார். மன்னரும் புலவர் என்று அறிந்து உடனே அழைத்து அவரை வரவேற்றார். மன்னரைப் பார்த்தவுடன் வேறு ஏதும் பேசாத புலவர் துக்கம் நிறைந்த குரலில்,
"மருவிருக்கும் கூந்தல் மடவார்கண் கணவன்
அருகிருக்கத் தாலி அறுமா? } இரவினுக்குள்
செங்கோல் செல்லாதா? இத் தேசம்
திருடருக்குப் பங்கா மருதபூ பா!'
என்று பாடிவிட்டார். அவர் குரலில் ஆத்திரமும் அழுகையும் ஒருசேரப் பொங்கியது. பாட்டைக் கேட்டதுமே இது வெறும் கற்பனைப் பாட்டில்லை என்பது மருது பாண்டியருக்குப் புரிந்துவிட்டது. நடந்தவற்றை புலவர் வாயிலாகவே கேட்டறிந்தார்.
"நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. ஒருவகையில் நானும் அதற்குப் பொறுப்பு. உங்கள் மனைவியை உடனே இங்கு அழைத்து வாருங்கள்' என்று ஆணையிட்டார். அவர்கள் வருவதற்குள் மருதுபாண்டியர் தாம் திட்டமிட்டபடி சிவகங்கையில் இருந்த பொன் வணிகர்கள் வீடுகளுக்கெல்லாம் ஆள் அனுப்பி, யாரிடத்தில் புதுத்தாலி இருந்தாலும் உடனே வாங்கி வரும்படிக் கூறினார். ஒன்றுக்குப் பதிலாக இரண்டு தாலிகள் கிடைத்தன.
புலவரும் மனைவியும் வந்தவுடன், அவர்களை நீராடச் செய்து, புத்தாடை பூணச் செய்து, மங்கலப் பொருள்கள் நிறைந்த சீர்வரிசைகளை அவர்களுக்குத் தந்து, "திருடர்கள் செய்த கொடுமையினால் ஒரு நன்மையும் விளைந்தது. உங்கள் திருமணத்தைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது' என்று மருதுபாண்டியர் சொல்லி, புதுத் தாலியை எடுத்துப் பூட்டச் சொன்னார். அவர் மனைவிக்கு மேலும் பல புதிய அணிகலன்களும் வழங்கினார். அன்று அரண்மனையில் புலவரின் திருமண விருந்து கோலாகலமாக நடைபெற்றது. புலவர் மனம் மகிழ்ந்தது. அவர் மனைவி உள்ளமும் நெகிழ்ந்தது.
"பத்தினிப் பெண்மை காப்பவராம், பாவலர் வறுமை தீர்ப்பவராம்' எனும் வரிகள் இப்போது மெய்யாகின்றனவா? இந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் என்று திரைப்படத்தில் பதிவாகியிருக்கிறது. ஆனால், இந்தப் பாடலைப் பழம் புலவர் ஒருவர் பாடி இருப்பதாக கி.வா.ஜ. தனது படைப்பில் கூறுகிறார்.
கண்ணதாசன் தயாரித்து வந்த சிவகெங்கைச்சீமை திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1959. ஆனால், கி.வா.ஜ.வின் "அமுத இலக்கியக் கதைகள்' நூல் வெளியான ஆண்டு 1967. ஆனால், 2004}ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பேராசிரியர் ந.சஞ்சீவியின் "மானங்காத்த மருதுபாண்டியர்' நூலில் இந்தப் பாடலைப் பாடிய புலவர் கமுதியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சரி, பாடிய புலவர் யாராக இருந்தாலும் பாடப்பெற்ற பாட்டுடைத் தலைவர் மருதுபாண்டியரே என்பது வெள்ளிடை மலை. மருதிருவர் புகழ் வாழ்க!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...