ஆற்றுப்படை , ஆறுபடைவீடா?

திருமுருகாற்றுப்படையின் தொடக்க வரி இது. "உலகம் உவப்பப்பலர்புகழ் / ஞாயிறு கடற் கண் டாங்கு'. திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டில் ஒன்று. தமிழின் மூத்த, முதல் இலக்கிய நூல்.
ஆற்றுப்படை , ஆறுபடைவீடா?


திருமுருகாற்றுப்படையின் தொடக்க வரி இது. "உலகம் உவப்பப்பலர்புகழ் / ஞாயிறு கடற் கண் டாங்கு'. திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டில் ஒன்று. தமிழின் மூத்த, முதல் இலக்கிய நூல்.

"இழுமென இழிதரும் அருவி பழமுதிர் சோலை மலைகிழ வோனே' என முடிவுறும்.

"ஆற்றுப்படை' என்னும் சொல்லுக்கு "ஆற்றுப்படுத்துதல்' என்பது பொருள். வழிகாட்டுதல் - வழிப்படுத்துதல் என்று விளக்கம் சொல்லலாம். பத்துப்பாட்டு நூல் ஒவ்வொன்றும் ஒரு நீண்ட பாடலாகும். வெவ்வேறு புலவர் பாடியன அவை. பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை ஆகிய நான்கும் ஆற்றுப்படை நூல்கள்.

அரசனிடம், வள்ளலிடம் பரிசு பெற்று வரும் புலவரோ, பாணரோ, கூத்தரோ எதிரில் வரும் இரவலர்க்குப் பரிசில் பொருள் வழங்கும் வள்ளல் பற்றிச் சொல்லி "இன்னவழியில் இப்படி நீ சென்று அந்த வள்ளலைப் பாடினால் நிரம்பப் பரிசில் பெற்று மகிழ்வாய்' என்று ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படை. (ஆறு-வழி, )

கடைச் சங்க தலைமைப் புலவர் நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள ஆறு திருத்தலங்களின் பெருமை - சிறப்புகளைச் சொல்லி, அவ்விடங்களுக்குச் செல்லும் வழியினையும், வழியிடங்களின் இயற்கை வளத்தையும், அழகையும் கூறி பெருமானின் திருக்கோலச் சிறப்பையும் எடுத்துரைத்து, அடியவர்கள் சென்று போற்றிப் புகழ்ந்து, பாடிப் பயனடையுமாறு நக்கீரர் ஆற்றுப்படுத்தியுள்ளார். அதனால் இது "திருமுருகாற்றுப்படை' எனும் பெயருடையதாயிற்று.

திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருஆவினன்குடி, திருவேரகம், குன்றுதோராடல், பழமுதிர்சோலை ஆகிய ஆறு திருத்தலங்கள் இந்நூலுள் இடம்பெற்றுள்ளன. இவை இந்நாளில் "ஆறுபடைவீடுகள்' என்று கொண்டாடப்படுகின்றன.

படைவீடென்றால், இரு நாடுகளுக்கிடையே போர் நடைபெறும்போது, ஒரு நாட்டின் படைவீரர்கள், படைத் தளபதி ஆகியோர் சென்று தங்கி, அங்கிருந்து போருக்குப் புறப்படுவார்கள். இதனை நாம் இந்நாளில் "படைமுகாம்' என்று சொல்லுகிறோம்.

ஆற்றுப்படைக்கும் ஆறுபடைவீடு என்று சொல்வதற்கும் என்ன தொடர்பு? ஆறு ஊர்கள் என்னும் எண் பொருத்தம் ஒன்று கொண்டு ஆறுபடைவீடுகள் எனச் சொல்வது சரியா? திருச்சீரலைவாய் இன்று திருச்செந்தூராகக் கொள்ளப்படுகிறது. இத்தலம் ஒன்று மட்டும் படைவீடு என்று சொல்லத்தக்கது. சூரனைக் கொன்றழிக்கத் திருமுருகன், வீரபாகு முதலிய தளபதிகளுடன் சென்று செந்தூரில் தங்கி, அங்கிருந்து புறப்பட்டதாகக் கந்தபுராணம் பகர்கிறது.

முருகப் பெருமானின் ஆறு திருக்கோயில்களை "ஆறுபடைவீடுகள்' எனல் எவ்வாறு பொருந்தும்? திருச்சீரலைவாய் எனும் திருச்செந்தூர் மட்டும் பொருந்தும். கடலலைகள் தாலாட்ட அமைந்த கோயில் அது. திருஆவினன்குடி இந்நாள் பழனி என்பர். சங்க காலத்துப் "பொதினி' என்று குறிக்கப்படும் மலையே பழனிமலை.திருவாவினன்குடி என்று மலையின் கீழ்த்தரையில் ஒரு கோயில் பிற்காலத்துக் கட்டப்பட்டுள்ளது.

சுவாமிமலை மிகப் பிற்காலத்துக் கட்டுமலை. இதுதான் "திருவேரகம்' என்று சொல்லத்தக்க சான்றுகள் உண்டா எனத் தெரியவில்லை. திருத்தணிகையைக் குன்றுதோராடலில் அடக்கியுள்ளனர். இதற்குக் காரணம் ஏதும் சொல்ல இயலாது. பழமுதிர்சோலை என்று, மதுரை அழகர்மலையின் மேலுயரத்தில் "நூபுரகங்கை' என்ற ஒரு துளைவழி வரும் நீரூற்று ஒன்று உள்ளது. அவ்விடம் செல்ல வேண்டிய பாதையின் நடுவழியில் பல்லாண்டு முன் ஒரு வேல் மட்டும் இருந்தது. இந்நாளில் அங்கு சிறிய கோயில் ஒன்று கட்டி முருகன் திருவுரு அமைத்து வழிபடுகிறார்கள்.

இந்த விளக்கமெல்லாம் ஆறுபடைவீடென்ற கூற்று பொருந்தாதென்பதுடன், காலப்போக்கில் எப்படி மாற்றங்கள் உருவாகின்றன எனக் காட்டுதற்கே ஆகும். காலப்போக்கில் கதைகள் எப்படிப் புனையப்படுகின்றன என்று ஒன்றைச் சுருக்கமாக உரைக்கிறேன்.

எட்டுத்தொகையுள் குறுந்தொகை ஒன்று. அகத்துறை நூல். இதன் கடவுள் வாழ்த்து இறையனார் என்ற சங்கப் புலவரால் எழுதப்பட்டுள்ளது. சிவன், முருகன் சங்கப் புலவராய் இருந்தார்கள் என்பதை மனங்கொண்டு திருவிளையாடல் ஆசிரியர் பரஞ்சோதியார் அந்தப் பாடலைச் சிவபெருமான் இயற்றியதாகவும், நக்கீரர் அதில் குற்றம் கண்டதாகவும், நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று வழக்காடி நின்றதாகவும் கதை செய்தார்.
தருமி பாத்திரம் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தது. புராணத்தில் தருமி புலவர் அல்லர். பூசை செய்யும் பூசகர். இறை திருமேனி தொட்டுப் பூசை செய்ய விரும்பி (மணமானவர்க்கே அத்தகைய தகுதியுண்டு) அதற்குப் பொருள் வேண்டி இறைவனை வேண்ட, மன்னன் அறிவித்த பாடல் பரிசு பற்றிச் சொல்லி, பீடத்தின் அடியில் பாட்டு வைத்தான் ஈசன். அதுதான், "கொங்குதேர் வாழ்க்கை' பாடல். இது தலைவன் தலைவியின் "மெய்தொட்டுப் பயிறல்' துறையில் அமைந்த சிறந்த நலம் பாராட்டல் ஆகும்.

"ஆறுபடை வீடென்ற கூற்று சரியே' என்று அறிஞர் பெருமக்கள் சான்று காட்டினால் ஏற்று மகிழ்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com