பழங்காலத்தில் போர் பல காரணங்களால் நிகழ்ந்திருப்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும். பெண்ணாசையால், வேந்தன், தான் விரும்பிய பெண்ணை அடைய வேண்டி போர் புரிவது அவற்றுள் ஒன்றாகும். பெண் வேண்டி வரும் வேந்தன், தன் விருப்பத்தைத் தெரிவிக்கும் போது, பெண்ணைப் பெற்ற வேந்தன், அவன் தங்கள் குடிக்கோ, தலைவியின் அழகுக்கோ நிகர் இல்லாதபோது மணம் மறுப்பதுண்டு.
அவ்வாறு மணம் மறுக்கப்படும்போது, வேந்தன், அது தங்கள் தன்மானத்திற்கும் வீரத்திற்கும் இழுக்கெனக் கருதி, மகள் மறுத்த வேந்தன் மீது போர் தொடுக்கத் தயாராவான். பெண்ணைப் பெற்ற வேந்தனும் அதுபோல் மானமும் வீரமும் கருதிப் போருக்குத் தயாராவான். இதுபோலும் செய்திகளைப் புறநானூற்றில் காஞ்சித்திணை, மகட்பாற் காஞ்சி (336-356) நொச்சித்திணை மகள் மறுத்தல் ஆகிய துறைகளின் கீழ்வரும் பாடல்கள்வழி (109-111) அறியலாம்.
மகட்பாற் காஞ்சித்துறையில் வரும் பாடல்களில், மகளின் தந்தை இன்னார் என்றோ, மணக்க விரும்பும் வேந்தன் இன்னாரென்றோ பெயர் குறிப்பிட்டிருக்காது. மகள் மறுத்தல் துறையின்கீழ் வரும் பாடல்களில் மகளின் தந்தை இன்னார் எனப் பெயர் குறிப்பிட்டிருக்கும். இந்த ஒரு வேறுபாடு தவிர பிறிதில்லை.
மகட்பாற் காஞ்சியாவது பெண்ணைத் தருக எனக் கேட்டு வந்த வேந்தனொடு மாறுபட்டு (பகை கொண்டு) நிற்றல் என இலக்கணம் (புறப்பொருள் வெண்பாமாலை, காஞ்சி.84) கூறுகிறது. பெண்ணாசையால் உருவாகும் இப்போரால் நாடும் மக்களும் பேரழிவிற்கு ஆளாகும் போக்கும், போருக்கு யார் காரணமாக அமைகிறார்கள் என்பதையும் இத்துறையின் கீழ் வரும் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.
முரண்பட்டோர் இருவருக்கும் அறம் கூறி திருந்தச் செய்வதை விடுத்து, ஒருசாரார் மீது அறத்திற்கு மாறாகப் பழி கூறி, திருத்த முயலும் புலவரின் செயலை இப்பாடல்களில் காணமுடிகிறது. பானைச் சோற்றுக்குப் பதச்சோறு போல பரணரின் புறநானூற்றுப் பாடல் (336) ஒன்றை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். பாடல் பொருளைக் காண்போம்.
மணம் விரும்பிய வேந்தன் வெஞ்சினத்தினனாய் இருக்கிறான். பெண்ணின் தந்தையோ உரிய காலத்தில் தம் மகளுக்கு மணமுடிக்காது கடமை தவறியவனாக இருக்கிறான். இரு தரத்து யானைகளும் கடிமரம் சேராது போருக்குத் தயாராகி நிற்கின்றன. மறவர்களும் வாய் மூடி மௌனமாக உள்ளனர். இதுவரை அறியாத அச்சம் தரும் பலவகை போர்வாத்தியக் கருவிகளின் முழக்கம் மக்களைக் கலக்கமடையச் செய்கின்றன. வேங்கை மரத்தின் முகை போன்ற முதிராத மார்புடைய பெண், காண்பாரை மகிழ்வுறுத்தும் அழகுடையவளாய் இருக்கிறாள். தாயும் அதுபோல் மகிழ்ந்து இறுமாப்புற்று மணம் பேச மறுப்பதால் அறமற்றவளாக விளங்குகிறாள். பகை வளர்க்கும் இத்தாய் பண்பற்றவளாகத் தோன்றுகிறாள். இதனை,
வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே
கடவன கழிப்பிவ டந்தையுந் செய்யான்
ஒளிறுமுகத் தேந்திய வீங்குதொடி மருப்பிற்
களிறும் கடிமரம் சேரா சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே
இயவரு மறியாப் பல்யங் கறங்க
அன்னோ பெரும்பே துற்றன்றிவ் வருங்கடி மூதூர்
அறனிலள் மன்ற தானே விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப் பேந்திய முற்றா விளமுலைத்
தகைவளர்த் திருந்தவிப் பண்பி றாயே.
(புறநா.336)
என்ற பாடல் உணர்த்தும். புலவர் பரணரின் இப்பாடல் "ஒருபாற்கோடாமை சான்றோர்க்கு அணி' என்ற வள்ளுவத்துக்குப் புறம்பாக ஒரு பக்கம் சார்ந்து அறிவுறுத்தும் போக்கில் அமைகிறது. விரும்பும் வேந்தன் பல்வேறு காரணங்களால் தங்களுக்கு நிகராக அமையாதபோது மகள் மறுப்பது பெற்றோர் உரிமை. அதை விடுத்து அழகாகப் பிறந்த தலைவியும், அத்தகு அழகியைப் பெற்ற தாயை "அறனிலள்', "பகையை வளர்க்கும் பண்பில்லாத தாய்' என அவள் தாயும், உரிய காலத்தில் மணம் முடித்துக் கொடுக்காத தந்தையும் பழிக்கப்படுகின்றனர். பெண்ணைத் தர மறுத்ததற்காகப் போருக்குத் தயாராகும் வேந்தனின், தவறு அங்கே சுட்டப்படவில்லை. இவ்வாறு பரணரின் இப்பாடல் ஒருதலை சார்பாக அமைவதைக் காண்கிறோம்.
இதுபோலவே பரணர் பிறிதோர் பாடலில் இப்பெண்ணைத் தாய் ஈனாளாயின் போர் நிகழ்ந்திருக்காது எனும் பொருளில் "குவளை உண்கண் இவளைத் தாயே
ஈனாளாயின்' (புறநா.348, வரி. 6, 7) என்று தாயும், பெண்ணின் அழகே போரை நடத்தத் தூண்டும் எனும் பொருளில் "ஆரமர் உழப்பதும் அமரியளாகி' (புறம் 339, வரி 12) என்று பிறரும் கூறுவதிலிருந்தும் தலைவி பழிக்கப்படுவது நினைவில் கொள்ளத்தக்கதாகும். அழகாகப் பிறப்பதும் அழகான பெண்ணை ஈன்றெடுப்பதும் தவறாக உணர்த்தப்படக் காண்கிறோம். பெண்ணின் அழகுதான் வேந்தன் விரும்பக் காரணமாகிறது. தவறு வேந்தன் மேல் இல்லை என்பது போல புலவர் கூற்று அமைகிறது. பெண் வேண்டி வந்த வேந்தனுக்குப் பெற்றோர் பெண்ணைத் தர மறுக்கும்போது வேந்தன் சினம் கொண்டு போர் தொடுக்கும் செயல் அறத்திற்குப் புறம்பானது என்பது சுட்டப்படவில்லை.
ஆணாதிக்க உணர்வால் அறம் பிறழும் செயலாக இது அக்காலத்தில் கருதப்படவில்லை போலும். போர் நடைபெறக்கூடாது என்ற சான்றாண்மை அவரை அவ்வாறு கூற வைக்கிறதோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக கட்சியினா் போா்க்கொடி

பாலியல் புகாா் வழக்கு: இயக்குநா் ரஞ்சித்துக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்

‘இளைஞா்களின் ஆதரவு தவெகவுக்கு உள்ளது’

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


