தொல்காப்பியம் (ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட) கூறும் இலக்கணச் சொற்களை இன்றும் பொருநை (தாமிரவருணி) ஆற்றங்கரை நெல்லைத் தமிழர் வழங்குகின்றனர்.
எருத்தே கொச்சகம் அராகம் சிற்றெண்
அடக்கியல் வாரமொடு அந்நிலைக்கு உரித்தே!
(தொல்பொருள்செய்.464)
இந்நூற்பா கலிப்பாவின் ஆறு உறுப்புகளை விதந்து ஓதுகிறது. 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பேராசிரியர் இந்தக் கலிப்பா நூற்பா உறுப்புகளின் பெயர் விளக்கத்தை விரிவாக எழுதியுள்ளார். ""கொச்சகம் என்பது ஒப்பினாகிய பெயர் என்னை? பல கோடுபட அடக்கி உடுக்கும் உடையினைக் கொச்சகம் என்ப. அதுபோலச் சிறியவும் பெரியவும் விராய்த் தம்முள் ஒப்பச் செய்யப்படும் பாட்டுக்களைக் கொச்சகம் என்றான் என்பது. இக்காலத்தார் அதனைப் பெண்டிர்க்குரிய உடை உறுப்பாக்கியும் கொய்சகம் என்று சிதைத்தும் வழங்குப'' என்று பேராசிரியர் விளக்கம் தந்துள்ளார்.
அவர் கூறிய "கொய்சகம்' என்ற சொல் மேலும் மருவி இன்று "கொசவம்' என்று வழங்குகிறது. முன்னர் 16 முழம் சேலை கட்டிய மகளிர் உடம்பின் பிற்பகுதியில் வருமாறு கொசவம் மடித்து உடுத்தினர். பத்து முழம் (3.8மீ) சேலை கட்டும் மகளிர் இன்று உடம்பின் முற்பகுதி வயிற்றை மறைக்கும் வகையில் கொசவம் மடித்து அணிகின்றனர். "கொசவம்' என்ற சொல் இன்றும் நெல்லைத் தமிழரிடம் வழங்குகிறது.
இனி, "அராகம்' என்ற சொல்லுக்குப் பேராசிரியர் தரும் விளக்கத்தைப் பார்ப்போம்: ""அராகம் என்பது அறாது கடுகிச் சேறல், பிறிதொன்று பெய்து ஆற்ற வேண்டும் துணை செய்வதாகிய பொன்னினை அராகித்து என்ப ஆகலின், அதுவும் ஒப்பின் ஆகிய பெயர் ஆயிற்று என்னை? மாத்திரை நீண்டும் துணிந்தும் வராது குற்றெழுத்துப் பயின்றும் வந்து நடைபெறுதலின்'' பேராசிரியர் தந்த விளக்கத்தைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
இக்காலத்தார் கலப்பில்லாத செம்பொன்னை 24 கேரட் என்பர். இது சற்று நெகிழும் தன்மை உடையது. அதனால் 22 கேரட் பொன்னுடன் 2 கேரட் அளவு செம்பு கலந்து வலுவூட்ட வேண்டும். இக்காலத்தில் இதை 22 கேரட் தங்கம் என்பர். முன் காலத்தில் பொன்னை 11 பங்காகப் பிரித்து அதில் பத்தரைப் பங்கு தங்கமும் அரைப்பங்கு செம்பும் கலந்து உருக்கி அணிகலன் செய்வார்கள். அதைப் "பத்தரை மாத்துத் தங்கம்' என வழங்குவர். இதை நெல்லைப் பொற்கொல்லர் குழுஉக் குறியாக "அராத்து' என்பர். பொய்கலந்து ஒரு காரியத்தைப் பேசுபவனை "அராத்து' என்றும் பழிப்பர்.
தொல்சொல்உரியியல்
தடவும் சுயவும் நளியும் பெருமை (சூ.22)
கயஎன் கிளவி மென்மையும் செய்யும் (சூ.24)
இந்த நூற்பாக்கள் காட்டும் "கய' என்னும் உரிச்சொல் பெருமை, மென்மை ஆகிய இரண்டு கருத்துகளையும் வெளிப்படுத்தும் என இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய உரையாசிரியர்கள் விளக்கம் தந்துள்ளனர். கயவெள்ளருவி, சுயந்தலை, மடப்பிடி, கயவாய்ப் பெருங்கை யானை என, சங்க இலக்கியச் சொற்தொடர்களை எடுத்துக்காட்டுகளாகத் தந்துள்ளனர்.
"கயவெள்ளருவி' என்பதற்கு விளக்கம் காண்போம்: இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர் கழுகுமலை. கி.பி. 6ஆம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சியில் கழுகுமலையில் சமணப்படாரர்கள் (துறவி) வாழ மலைமேல் குகைகள் அமைத்துள்ளனர். அடிவாரத்தில் பாறையைக் குடைந்து கோயிலும் அமைத்துள்ளனர். இன்று அது முருகன் கோயிலாக உள்ளது. பல்லவர் காலத்தை நினைவூட்டும் வகையில் கழுகுமலை அருகே "மகேந்திரவாடி' என்னும் சிற்றூரும் உள்ளது.

அக்காலத்தில் மலையிலிருந்து "வெள்ளருளி' பாய்ந்து ஓடி "கயத்தாறு' எனும் பெயரும் பெற்றது. அப்பெயரில் ஊரும் தோன்றியது. (கய+ அத்து+ ஆறு= கயத்தாறு. அத்து சாரியை) தமிழக வரலாறு கூறும் செப்பேடுகளில் "தளவாய்புரம் செப்பேடு' சிறப்புப் பெற்றது. அதில் கழுகுமலையின் சிறப்பும் மலை அருவியும், ஆற்றுப் பாசனமும் கூறப்பட்டுள்ளது.
கழுகுமலை சிற்றரசன் படைத்தளம் ஆனதால் அவ்வூர் தளவாய்புரம் என்னும் பெயர் பெற்றது. இன்று பருவகால வேறுபாட்டால் இப்பகுதி வறண்ட கரிசல் பூமியாக உள்ளது. "கய' எனும் உரிச்சொல் வழியாகப் பிறந்ததே கயல் மீன். அது பாண்டியரின் கொடியில் அடையாளமாக உள்ளது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் காலத்துப் பழக்க வழக்கங்களை நினைவூட்டும் கொச்சகம், அராகம், கய என்னும் சொற்கள் தென்பாண்டி - நெல்லைப் பகுதியில் இன்றும் வழங்குகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிஞ்சுக் கைவண்ணம்
முதல் தேர்தலும் சுகுமார் சென்னும்...
ஏழு தலைமுறை சுற்றம்...

முத்தான முத்தல்லவோ...
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


