பொய் சொல்லிப் பழகி இருந்தால்தானே!

"அப்பன் குதிருக்குள் இல்லை' என்ற பழமொழி நமக்குத் தெரிந்ததுதான். 
பொய் சொல்லிப் பழகி இருந்தால்தானே!
Published on
Updated on
2 min read


"அப்பன் குதிருக்குள் இல்லை' என்ற பழமொழி நமக்குத் தெரிந்ததுதான். 
தான் வீட்டில் இல்லை என்று மகனிடம் பொய் சொல்லச் சொல்லிவிட்டு குதிருக்குள் ஒளிந்து கொண்ட தந்தையைப் பொய் சொல்லிப் பழக்கமில்லாத மகன் கடன்காரனிடம் காட்டிக் கொடுத்த கதைதான் "அப்பன் குதிருக்குள் இல்லை' என்பது. இவ்வாறு கூறும் வழக்கம் இன்று நேற்று என்றில்லை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது. கொள்ளம்பக்கனார் இயற்றிய நற்றிணைப் பாடலில் பொய் சொல்லத் தெரியாமல் சொல்லி அன்னையிடம் அகப்பட்டதாகக் காட்டப்படுகிறது.

தலைவன் தலைவியைச் சந்தித்தான். காதல் முகிழ்ந்தது. பகற் பொழுதிலேயே தொடர்ந்து அவளைக் காணவருகிறான். நடப்பது தோழிக்கு நன்றாகவே தெரியும். இதை இப்படியே நீடிக்கவிடுவது சரியில்லை என்று முடிவெடுத்த தோழி, களவியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, கற்பியல் வாழ்வை தொடங்கச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாள்.

தலைவியைத் தலைவன் சந்திக்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது? தினைப் புனம் காக்க தலைவியைத் தாயார் அனுப்பி வைத்தார். பரண் அமைத்து அதில் தோழியோடு இருந்து கவண் விசிக் கிளிகளை தினைக் கதிரைக் கொத்தாமல் விரட்டுவது அவர்களின் பணி.

பெரும்பாலும் வேட்டையாடி வரும் தலைவன் அந்தக் கொல்லைக்கு வருவான். "மான் வந்ததா?'  என்று கன்னியரிடம் கேட்பான். அவர்கள், "அது எந்த மான்? புள்ளிமானா?  புள்ளி மேவாத மானா?' என்று பேச்சை வளர்த்துவார்கள். புரிந்துவிடும். இவ்வாறுதான் காதல் வளர்ந்துவரும். ஒரு பாடல் (ஏனல் காவல் இவளும் அல்லன்/ மான்வழி வருகுவன் இவனும் அல்லன்) இந்தக் காதல் நிகழ்வைக் காட்டும். 

நற்றிணை காட்டும் தலைவியும் இவ்வாறே தினைப்புனம் காப்பதற்காக தாயினால் அனுப்பப்படுகிறாள். தலைவியும் தோழியுடன் தினைக் காவலுக்காகப் புறப்படுகிறார்கள். போன இடத்தில் போன வேலையைத் தவிர்த்து தலைவனும் தலைவியுமாக மலர் கொள்வது, சுனையில் நீராடி மகிழ்வது என்று காதல் விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.

"தினையைக் காப்பதற்காகவென்று வந்துவிட்டு காதலில் களித்துக் கொண்டு இருக்கிறாள். அவனோ  திருமணம் புரிந்து கொள்ள ஏற்பாடு செய்பவனாக இல்லை. இதை இப்படியே விடக்கூடாது திசை மாற்றி கரை சேர்க்க வேண்டும் என்று திட்டமிடுகிறாள் தோழி.  அன்று பகலில் தினைப்புனத்தில் இருக்கும்போது தலைவன் வந்து வேலிக்கு வெளியே நிற்கிறான். இப்போது தோழி தன் நாடகத்தை நடத்துகிறாள். தலைவன் கேட்குமாறு பேசுகிறாள் தலைவியிடம். 

""என்னடி நீ இப்படிச் செய்துவிட்டாய்? இனி என்ன நடக்குமோ தெரியவில்லையே! உன் அம்மா உன்னிடம் என்ன கேட்டார்? ஆமாம் உன்னை தினையைக் காக்கத்தானேஅனுப்பினேன்? நீ அங்கு இல்லாமல் எங்கு போனாய்? கிளிகள் தினைக் கதிர்களைக் கொத்தித் தின்கின்றனவாமே என்றுதானே கேட்டார்? அதற்கு என்ன பதில் சொன்னாய்? முன்பின் பொய் சொல்லிப் பழக்கமில்லாத நீ "நாங்கள் மலர் பறிக்கவில்லையே! அவனோடு சுனையில் நீராடவும் இல்லையே! என்று உளறிக்கொட்டினாயே, ஏனடி அப்படிச் சொன்னாய்? என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லையே'' என்கிறாள் தோழி.

தலைவனுக்கு இதன் மூலம், தலைவியை அங்கு வருவதற்குத் தாய் அனுமதிக்க மாட்டாள். எனவே, நீ தலைவியுடன் சேர்ந்து இன்புறுவதற்கு இனி திருமணம் புரிந்து கொள்வதுதான் சரியான வழியாகும் என்பதை உணர்த்துகிறாள். தோழி தன் பணியை நாடகப் பாங்கில் ஆற்றுகிறாள். 

யாங்கு ஆகுவமோ "அணிநுதற் குறுமகள்!
தேம்படு சாரற் சிறுதினைப் பெருங்குரல்
செவ்வாய்ப் பைங்கிளி கவர, நீ மற்று
எவ்வாய்ச் சென்றனை அவண்?' எனக்கூறி
அன்னை ஆனாள் கழற, முன்நின்று,
"அருவி ஆர்க்கும் பெருவரை நாடனை
அறியலும் அறியேன்; காண்டலும் இலனே;
வெதிர்புனை தட்டையேன் மலர்பூக் கொய்து,
சுனைபாய்ந்து ஆடிற்றும் இலன்' என நினைவிலை
பொய்யல், அந்தோ! வாய்த்தனை? அதுகேட்டு
தலை இறைஞ்சினளே அன்னை;
செலவு ஒழிந்தனையால், அளியை நீ புனத்தே?  

(நற்றி-147)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com