குறள் கூறும் சொல்!

சிலர் Knowledge, Wisdom என இரண்டுக்கும் அறிவு என்ற ஒரு சொல்லையே பயன்படுத்துகின்றனர். நமக்குத் தெரியவில்லை என்பதால் தமிழில் சொற்கள் இல்லையென்று ஆகிவிடாது.
குறள் கூறும் சொல்!


(சென்றவார தொடர்ச்சி...)

அறிவு, ஒட்பம்  
அறிவு - Knowledge
ஒட்பம் - Wisdom

சிலர் Knowledge, Wisdom என இரண்டுக்கும் அறிவு என்ற ஒரு சொல்லையே பயன்படுத்துகின்றனர். நமக்குத் தெரியவில்லை என்பதால் தமிழில் சொற்கள் இல்லையென்று ஆகிவிடாது. திருக்குறளில் இரண்டுக்கும் வேறுபட்ட சொற்கள் உள்ளன. அறிவு - Knowledge என்பதை அறிவுடைமை என்ற அதிகாரத்தின் மூலம் பல்வேறு இடங்களில் கையாண்டுள்ளார். சங்க இலக்கியங்களில் அறிவு என்பது 43 இடங்களில் ஆளப்பட்டுள்ளது. ஆனால் ஒட்பம் என்பதை வள்ளுவர் மட்டுமே கையாண்டுள்ளார்.

கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடை யார் (குறள்- 404)
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு (குறள்- 425)

இக்குறள்களில் ஒட்பம் - Wisdom என்னும்  பொருளிலேயே கையாண்டுள்ளார். 

முறிமேனி (Aesthetic body)

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு  (குறள் 1113)
இக்குறளில் பயின்றுள்ள சொற்களுள்
முறிமேனி - தளிர் உடல்
முத்தம் முறுவல் - முத்துப் பற்கள்
வெறிநாற்றம் - மிகச் சிறந்த நாற்றம் (மணம்)
வேய்த்தோள் - மூங்கில் போன்ற தோள். மூங்கில் மேற்கோள்.

மாவிலையின் தளிரின் நிறம் என்பது வெம்மையின் செம்மை நிறமும், விரல் தீண்டினாலே பதியும் நெகிழ்வும் கொண்டிலங்கும். இதுபோன்ற தன்மைத்தது மங்கையரின் மேனி என்பதால் முறிமேனி என்கிறார். சொற்களைக் கூறும்போது கண்ணில் படமாகிறது, உள்ளம் உணர்வாகிறது. இதுதான் கலைச்சொல். இதில் திருவள்ளுவர் புலவர்களுக்கெல்லாம் புலவராக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது.  ஆங்கிலத்தில் the natural appearance of the ski என்றும் , a beautiful person என்றும் பலவாறாகக் கூறினாலும் திருவள்ளுவரின் சொல்லான முறிமேனி என்பதற்குச் சரியான சொல் தேர்ந்தால் aesthetic body என்பது பொருந்தும்.

ஆரஞர் (Sleeplessness)

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண் (குறள்.1179)

காதலர் இல்லாத நாட்களிலும் உறக்கமில்லை, இருக்கும்பொழுதுகளிலும் உறக்கமில்லை கண்ணுக்கு. காரணம்... எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பிலும், பிரிந்துபோவாரோ என்ற அச்சத்திலும் துயிலாநின்று இமைமூடியில் சிக்காத கண் எந்தக் கண்ணோ அந்தக் கண்ணே ஆரஞர் கண் என்று சொல்லுகிறார் திருவள்ளுவர்.  உறங்காத துன்பத்தினை உடைய நிலை ஆரஞர் என்று பரிமேலழகரும், பொறுத்தற்கரிய துன்பநிலை என்று பாவாணரும் கூறுகின்றனர்.

புணை (கட்டுமரம் - Catamaran)

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை  (குறள்-1134)

நாணும், நல்லாண்மையும் காமவெள்ளத்திற்குப் புணை என்கிறார் பரிமேலழகர். கடும் புனலில் கடத்தற்குரிய கட்டுமரமாகப் புணை விளங்குகிறது. கடலில் கலம் செலுத்தும் காலந்தொட்டே "புணை' என்னும் சொல்தான் கலத்திற்கான சொல்லாகப் புழக்கத்திலிருந்துள்ளது. தகுந்த மரத்துண்டுகளைப் பிணைத்துக் கட்டி கலமாக ஆக்குவதே "புணை' என்றாகியுள்ளது. 

அஞர் - அச்சம் (Fear)

"அச்சம்' என்பது மன அழுத்தத்தின் காரணமாக விளையக்கூடியது. மனவெழுச்சி உடனிருப்பின் அச்சம் காணாமல் போகும். இவ்வாறான அச்சத்தைத் திருக்குறள்,

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்'      (குறள்-1086)

மெல்லினத்தை மையத்தில் வைத்துக் கட்டியுரைக்கும் சொல்லான "அஞர்' என்பது மனவழுத்தம் தருவதாகயில்லாமல், மென்மையான அச்சமாக மாந்தர் பெறும் வகையில் இச்சொல் அச்சமில்லாமல் அச்சத்தை விளிக்கிறது. 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com