குறள் கூறும் சொல்!

குறள் கூறும் சொல்!

என் காமம் இவ்வூர் மறுகின் கண்ணே மயங்கிச் சுழலா நின்றது என்று பொருளுரைக்கிறார் பரிமேலழகர்.

(சென்றவார தொடர்ச்சி...)

மறுகு  (Big Street) 
அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்
மறுகின் மறுகும் மருண்டு (குறள்-1139)

என் காமம் இவ்வூர் மறுகின் கண்ணே மயங்கிச் சுழலா நின்றது என்று பொருளுரைக்கிறார் பரிமேலழகர். இவர்தம் கூற்றுப்படியும் பாவாணர் கூற்றுப்படியும் தலைவியின் அன்பு அவ்வூரின் பெருந்தெரு என்று குறிப்பிடப்படும் மறுகு இடத்தில் நின்று சுழன்று சுழற்காற்று போல ஓங்கி நிற்கின்றதாம்.

செம்பாகம் (Moiety, Exact Half)

வடிவவியலில் (geometric shape)   வடிவம் என்பது ஒரு பொருளின் இடம், அளவு, நிலை ஆகியவைகளின் தன்மையை வடிவ அளவில் குறிப்பதாகும். இத்தகைய வடிவங்கள் பல்கோணங்களாக வழங்கப்பெறும். வட்டம் அல்லது நீள்வட்டம் தொடர்பிலான வடிவங்கள் அதன் வளைகோடுகளால் வரையறுக்கப்படும். அந்த வகையில் பல நிலைகளில் காணப்படும் வடிவங்கள் (ம) பொருள் நிறைகளில் சமமான பங்காகப் பிரித்தெடுத்தல் என்பது இயற்பியல் விதிகளுக்குட்பட்டு அமையும். இவ்வாறு பிரித்தெடுக்கும் பகுதி சரியானதாக அமைய வேண்டும். அவ்வாறு அமையும் பாகத்தினைச் "செம்பாகம்' என்கிறார் தெய்வப்புலவர்.

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் 
செம்பாகம் அன்று பெரிது  (குறள்-1092)

காமத்தில் சரிபாதி அளவுள்ளதன்று அதனினும் பெரும்பகுதியாகும் கள்ளத்தனமான சிறுபார்வை. சரிசமம், சரிபாகம், சரிபங்கு என்பதெல்லாம் சரியாக இருக்குமா என எண்ணத் தோன்றும். ஆனால் பொய்யாமொழிப் புலவரின் "செம்பாகம்'  என்னும் உயர்வான தமிழ்ச்சொல் செறிவான, நடுநிலையான பாகத்தை உரைக்கும் அளவீட்டில், பங்கீட்டில், நிறை ஒதுக்கீட்டில் செம்மையாகவே விளங்குவதைச் சொல்லின் உரைப்பிலிருந்தே உணரலாம். 

சொல்வணக்கம், வில்வணக்கம் (Bowing Serviely)

வணக்கம் சொல்லுவது மதித்தல், கீழ்படிதல் எனும் பண்பாட்டின் வெளிப்பாட்டுச் சொல் ஆகும். இதுவரை காலை வணக்கம், மாலை வணக்கம் என நமக்குள் சிலர் வேளை பிரித்துக் கூறிக்கொண்டிருக்கிறோம். ஆனால் எவ்வேளையிலும் எப்பொழுது உரைத்தாலும் வணக்கம் எல்லாப் பொழுதுக்கும் பொருத்தமானதாகும். 

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான் (குறள். 827)

இக்குறளில் கண்டுள்ள இரண்டு வணக்கங்கள் ஒரே பண்பைக் கொண்டிலங்குவதாக அமைகின்றன. அம்பு எய்யும்பொழுது வில் வளைவது நன்மைக்காக அல்ல. அவ்வாறு வளைந்து கொடுப்பதும் பணிவுக்கானது அல்ல. அதுபோல நம் பகைவன் நம் நமக்குத் தரும் சொல்லின் வணக்ககமும் நன்மையென்று கருதவியலாது. வணக்கம் ஒரே சொல்தான். ஆனால் சொல்வோரின் தன்மைக்குட்பட்டு அதன் மதிப்பும் சிறப்பும் வினையாற்றும் என்பதை மாந்தரின் உள்ளத்தில் பதியும் வண்ணம் சொல்லை வில்லாக வைத்துச் சொல்வோர் மனத்தில் வடுக்களாய் வரைந்திருக்கிறார் திருவள்ளுவர். 

அலகை - பேய் (Ghost)

இலக்கியங்களில் அலகையென்பது கானல் தேர் என்பதையும், அலகைக் கொடியாள் என்பது காளி தெய்வத்தையும் சுட்டுகிறது. 

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்     (குறள்-850)

குறள்  நெறி அதீத நம்பிக்கைகளை முற்றிலும் கடந்து நிற்பது. ஆனால் இந்தக் குறளில் சுட்டப்படும் சொல்லான அலகை என்பது "இருந்தும் இல்லாமலிருப்பதைச் சுட்டுவதைத்தான்' நாம் ஏற்கவியலும். அவ்வகையில், "மண்ணுலகில் எல்லோராலும் உண்டு என ஏற்றுக்கொண்டு சொல்லும் பொருளை இல்லை என்று மறுப்பவர் மாந்த வடிவில் பேய்' என்று குறளின்வழியுரைக்கிறார் பாவாணர். மேலும், அவ்வாறு மறுத்துரைப்போர் புல்லறிவால் மகன் என்று கருதப்படான், அவன் வையத்துக் காணப்படுவதோர் பேய் என்கிறார் பரிமேலழகர். ஆன்றோர் தம் அறிவின் உண்மையைத் தற்குறியாக மறுப்பவரை "இருந்தும் இல்லாதார்' எனும் நோக்கில் மாயைப் பிடியில் வாழும் அலகை என்னும் சொல்லால் சுட்டுகிறார் வள்ளுவப் பெருமான். நாமாக ஒரு புதுச்சொல்லை உருவாக்கும் முன் அதற்குச் சரியான பழஞ்சொல் இருக்கிறதா என அறிந்து அச்சொல்லைப் பயன்படுத்தினால் தனித்தமிழ்ச் சொற்கள் மீண்டும் புழக்கத்திற்கு வந்துவிடும். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னே இத்தகைய சொல்லாடல்களுக்குத் தனிச்சொற்களைத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் உலகறியும். திருக்குறள் ஒரு சொற்களஞ்சியம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com