கல்லா சிறுவர்களின் நெல்லி வட்டாட்டம்

கிராமப்புற விளையாட்டுகள் பல வகை உண்டு. அவற்றுள் ஒன்று "வட்டு' வைத்து "தட்டு' விளையாடுதல்.
கல்லா சிறுவர்களின் நெல்லி வட்டாட்டம்

கிராமப்புற விளையாட்டுகள் பல வகை உண்டு. அவற்றுள் ஒன்று "வட்டு' வைத்து "தட்டு' விளையாடுதல். இடதுபுறம் நான்கு, வலதுபுறம் நான்கு என்று மொத்தம் எட்டு கட்டங்களைத் தரையில் வரைய வேண்டும். உடைந்த மண் ஓட்டிலிருந்து, வட்ட வடிவில் ஒரு சில்லை (துண்டை)  உருவாக்கி, அந்த "வட்டை' இடதுபுறம் முதல் கட்டத்தில் போட வேண்டும். ஒரு காலை மடித்துக்கொண்டு, மற்றொரு காலால், கோட்டை மிதிக்காமல் தாவி அந்த வட்டை மிதிக்க வேண்டும். பிறகு அதனை எடுத்து அடுத்தக் கட்டத்தில் போட வேண்டும். முன்பு போலவே, அதனை மிதித்து எடுக்க வேண்டும். இப்படியாக, ஒவ்வொரு கட்டமாகக் கடந்து, புறப்பட்ட இடத்திற்கு வந்துசேர வேண்டும். இதை நொண்டி விளையாட்டு, பாண்டி ஆட்டம் என்று சொல்வர். பொதுவாக, இது பெண்களுக்கான விளையாட்டு.

இதுபோன்றதொரு விளையாட்டை,  நெல்லிக் காய்களை வைத்து சிறுவர்கள் (ஆண் பிள்ளைகள்)  வட்டு ஆடியதாக நற்றிணைப் பாடல் ஒன்று கூறுகிறது. அதை "வட்டாட்டம்' என்றும் சொல்கிறது. புலவர் இளங்கீரனாரின் பாலைத் திணைப் பாடல் இது. 

ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ்சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,
கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்,
வில் ஏர் உழவர் வெம்முனைச் சீறூர்ச்  
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ யானே, உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே?  
(நற்.3)

இந்த விளையாட்டை நிகழ்த்துவதற்கு "அரங்கு' தேவை என்றும், அரங்கு என்பது, கட்டங்களைக் குறிப்பதாகவும் புரிந்துகொள்ள முடிகிறது.

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டிக் கொளல் (குறள், 401)

தனக்கு அறிவுதரும் நூல்களைக் கல்லாத ஒருவன், கற்றவர் அவையில் கருத்துரைப்பது, அரங்கு இல்லாமல் வட்டாடுவது போன்றது' என்கிறார், வள்ளுவர். இக்குறளுக்கு உரை எழுதும் தேவநேயப் பாவாணர், வட்டாட்டம் என்பதை, "பாண்டி' விளையாட்டிற்கும், தாயம் விளையாடுவதற்கும் ஒப்பிடுகிறார். 
பாண்டி விளையாட்டில், "வட்டை' கட்டத்திற்கு உள்ளே வீச வேண்டும். தாய விளையாட்டில், தாயக்கட்டைகளை, கட்டத்திற்கு வெளியே உருட்ட வேண்டும் என்று இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டையும் விளக்குகிறார். ஆக, இரண்டு வட்டாட்டங்களுக்குமே, அரங்கு (கட்டம்) தேவைப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஓங்கி உயர்ந்த வேப்பமரம். அதன் உச்சியில் பருந்து கூடுகட்டி, முட்டை இட்டு, தன்னை வருத்திக்கொண்டு அடைகாக்கிறது. இலைகளின் ஊடாக சூரிய ஒளிதரையை அடைகிறது. அது, தரையில் ஒளிப்புள்ளிகளாகத் தெரிகின்றன. "பொரியரை வேம்பின் புள்ளிநீழல்' என்னும் வரி இதனை உணர்த்துகிறது. அந்த வேம்பின் நிழலில், சிறுவர்கள்,  நெல்லிக் காய்களை வைத்து அரங்கில்லா வட்டாட்டம் (அமர்ந்து) விளையாடுகிறார்களாம்.

பாவாணரின் கூற்றுப்படி, இச்சிறுவர்கள் ஆடியது, கட்டம் இல்லாத தாய விளையாட்டு என்று கருதலாம். இப்படி விளையாடும் சிறுவர்களை "கல்லாச் சிறுவர்கள்' என்கிறது, பாடல். தங்களது வாழ்க்கைக்குத் தேவையானயாதொரு தொழிலையும் கற்றுக்கொள்ளாத சிறுவர்களே, அப்படி விளையாடியதாகப் பாடல் சொல்கிறது.

அறிவு தரும் நூல்களைக் கற்றுக் கொள்ளாமல், கற்றோர் அவையில் கருத்துரைப்பது, அரங்கு (கட்டம்) இன்றி வட்டாடுதலை ஒத்தது என்று வள்ளுவர் கூறுகிறார். 

கல்லா இளைஞர்களே, வேம்பின் நிழலில் அரங்கு இன்றி வட்டாடுகின்றனர் என்று இளங்கீரனார் கூறுகிறார். என்னே ஒரு பொருத்தப்பாடு! "கல்லாதவர்கள், கட்டம் இல்லாமல் வட்டாடுபவர்களை ஒத்தவர்கள்' என்று சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com