இப்படி ஒரு தாழி செய்ய இயலுமோ?

ஐயூரில் ஒரு கால் முடமாக வாழ்ந்த அந்தப் புலவரை "ஐயூர் முடவனார்' என்றே அழைத்தனர்.
இப்படி ஒரு தாழி செய்ய இயலுமோ?


ஐயூரில் ஒரு கால் முடமாக வாழ்ந்த அந்தப் புலவரை "ஐயூர் முடவனார்' என்றே அழைத்தனர். அவருடைய அன்புக்கும் மதிப்புக்கும் உரிய  சோழ மன்னனாகிய பெருவீரன் கிள்ளிவளவன் குளமுற்றத்தில் இறந்துவிட்டான் என்ற துயரச் செய்தி ஐயூராருக்கு வந்தது. அவர் உடனே உறையூருக்குப் புறப்பட்டார்.
உறையூர் அரண்மனையில் கோடி மாலைகளின் நடுவினில் வாடாத புன்னகை மலர் விரிந்த இதழோடு  ஒரு மாலையென அவன் கிடந்தான். அக்காட்சியைக் கண்டவுடன் அவர் நெஞ்சு வெடித்து விடுவது போல் இருந்தது. தன் உணர்ச்சி வெள்ளத்தை யாரிடம் கொட்டுவார்?
எல்லோரும் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கின்றனர். மக்கள் வெள்ளம் பெருகப் பெருக அவரால் அங்கு நிற்க முடியவில்லை. அவர் அடங்காத துயரத்தோடு நடந்தார். உறையூரில் அவருக்குப் பழக்கமான குயவன் சாத்தன் என்பவன் பரபரப்பாக ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தான். 
""கலம் செய்யும் குயவனே! அருமைச் சாத்தனே! நீ சூளையிலே மட்கலங்களை வைத்துச் சுடுகின்றபோது இருளைப் போன்ற கரிய புகை வானத்தையே மூடுமே! இந்த உறையூரின் தலைமைக் குயவனல்லவா நீ! இன்றைய சூழலில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார்.
அதற்குக் குயவன்,  ""புலவர் பெருமானே! இன்று எனக்கு ஒரு புதிய வேலை வந்திருக்கிறது. இதுவரை மண்ணைக் குழைத்துப் பலவகையான கலங்கள் செய்திருக்கிறேன். இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அவரவருடைய தகுதி, பதவி, செல்வம், புகழ், பெருமைக்குத் தகுந்தாற்போல பெரிய பெரிய ஈமத்தாழிகளைச் செய்திருக்கிறேன். 
இன்று நம் மாமன்னர், சோழ நாட்டைப் புகழ் பெற ஆண்ட கிள்ளிவளவர் இயற்கை எய்தியுள்ளார். அவருடைய உடலை அடக்கம் செய்ய அவருடைய புகழுக்கும் பெருமைக்கும் தக்க தாழியைச் செய்ய வேண்டும். அதற்காக நூறு ஆட்கள் மண்ணை வெட்டி, ஆயிரம் குடம் நீரை ஊற்றிக் குழைத்து, இந்தப் பெரிய சக்கரத்தில் வைத்துச் சுற்றி ஒரு பெரிய தாழியைச் செய்யப் போகிறேன்'' என்றான்.
அதற்கு ஐயூர் முடவனார்,  ""சாத்தக் கலைஞனே! உன்னை நினைத்து, உன் நிலையை நினைத்து நான் மிகவும் இரங்குகின்றேன். ஏன் தெரியுமா? நம் மாமன்னரின் புகழ் இந்த உலகமெல்லாம் பரந்தது. வானத்தில் உதிக்கும் கதிரவனைப்போல அவன் ஆட்சி இந்த மண்ணின் பெரும் பரப்பில் எங்கும் விளங்கிற்று. அத்தகைய புகழ்மிக்க வேந்தன் கொடிகள் மடங்காத களிற்றின் மீதேறி கோட்டைக்குள் வெற்றியோடு வருகின்றவன். இன்று விண்ணுலகம் போய்விட்டான். அவனுடைய புகழுக்கும் பெருமைக்கும் பொருந்திய ஒரு தாழியைச் செய்ய உன்னால் முடியுமா?''
என்றார்.
சாத்தன் அவரிடம் கேட்டான், ""அப்படியானால் அவர் புகழுக்குத்தக்க வகையில் தாழி செய்வதென்றால் எப்படிச் செய்வது?''
""சாத்தா! நீ உன் திறமைக்கும் வலிமைக்கும் பொருந்திய அளவில் பெரிதாகத்தான் செய்ய நினைத்திருக்கின்றாய். ஆனால், நம் மன்னர் புகழ் இந்த உலகத்தையே சிறியதாகக் காட்டுவது. அவருடைய பெருமைக்கும் புகழுக்கும் நீ தாழி ஒன்றைச் செய்வதானால், இந்தப் பூவுலகத்தையே சக்கரமாக்கு; இமயமலையை அடித்து நொறுக்கி மண்ணாக்கிக் குழைத்துத் திரட்டி, இப்படி ஒரு தாழி செய்ய இயலுமோ?'' என்றார். இதுதான் ஐயூர் முடவனாரின் அப்பாடல் வரிகள்:  
கொடி நுடங்கு யானை நெடுமாவளவன்
தேவர் உலகம் எய்தினன் ஆதலின்,
அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி 
வனைதல் வேட்டனை ஆயின், எனையதூஉம்
இரு நிலம் திகிரியா, பெரு மலை
மண்ணா, வனைதல் ஒல்லுமோ நினக்கே? 
(புறம் - 228)

இதைக் கேட்ட குயவன் "அம்மவோ...' என்று அதிர்ந்து பெருமூச்சு விட்டான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com