தலைவனை வெறுத்த பாணன்

தலைவன் போர் காரணமாக, தலைவியை விடுத்துப் பாசறையில் தங்கியிருந்தான். நீண்ட காலம் கடந்தும் தலைவன் வரவில்லை. தலைவியால் தலைவன் பிரிவைத் தாங்க இயலவில்லை.
தலைவனை வெறுத்த பாணன்
Updated on
1 min read

தலைவன் போர் காரணமாக, தலைவியை விடுத்துப் பாசறையில் தங்கியிருந்தான். நீண்ட காலம் கடந்தும் தலைவன் வரவில்லை. தலைவியால் தலைவன் பிரிவைத் தாங்க இயலவில்லை. ஆற்றொணாத் துயரத்தால் வருந்துகிறாள்.

தலைவனுக்கு நெருங்கியவனாக  இருந்த  பாணன், தலைவியின் துன்பத்தை அறிந்து கொள்கிறான். பிரிவெனும் துயரைப் போக்க தலைவனால் மட்டுமே முடியும் என்பதை அறிந்து,  பாசறைக்குச் சென்று தலைவனைச் சந்திக்கிறான். தலைவி பிரிவால் வருந்தித் தவிப்பதை எடுத்துரைக்கிறான். ஆனால், தன்னுடைய நிலை எப்படிப்பட்டது என்பதை விளக்குகிறான் தலைவன். அக்கருத்தில் உடன்பட மறுத்த பாணன், கோபம் கொண்டு தலைவனிடம் வெறுத்துரைப்பதாக அமைந்த முல்லைத் திணைப் பாடல் இது. இயற்றியவர் புலவர் பேயனார். 

நினக்குயாம் பாணரும் அல்லேம் எமக்கு 
நீயுங் குருசிலை யல்லை மாதோ! 
நின் வெங்காதலி தனிமனைப் புலம்பி, 
ஈரிதழ் உண்கண் உகுத்த 
பூசல் கேட்டும் அருளாதோயே!   
( ஐங். பா. 480 ) 

"தலைவனே! உனக்குப் பாடல் பாடும் பாணனாக இனிமேல் நான் இருக்கப் போவதில்லை. எனக்குத் தலைவனாகவும் உன்னை ஏற்க விரும்பவில்லை.  உன் தலைவி இல்லத்தில் பிரிவுத்துயரால் புலம்பிக் கொண்டிருக்கிறாள். இரண்டு இதழ்களைப் போன்று விளங்கும் கண்களையுடைய, அவளின் கண்ணீரைப் பற்றிக் கூறியும் மனம் இரங்காமல் இருக்கிறாயே!' எனக் கடிந்து கொள்கிறான் பாணன்.

மேற்கண்ட பாடலில் தலைவனிடம் கோபித்துக் கொள்வதன் வழி, எத்தகைய துன்பத்தில் தலைவி  உழன்று கொண்டிருக்கிறாள் என்பதைத் தலைவனுக்குப் புரிய வைக்கிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com