பாரதி, பாரதிதாசன் வம்சாவளி...

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைக் கழனியில் மறுமலர்ச்சி விதையைத் தூவியவர்கள் பாரதியாரும் பாரதிதாசனும்தான்.
பாரதி, பாரதிதாசன் வம்சாவளி...

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைக் கழனியில் மறுமலர்ச்சி விதையைத் தூவியவர்கள் பாரதியாரும் பாரதிதாசனும்தான். அதனால், இவர்களை "மறுமலர்ச்சிக் கவிதைகளின் தாய் - தந்தை' என்றும் சொல்லலாம் அல்லது "மறுமலர்ச்சிக் கவிதைகளுக்கு முன்னோடி - வழிகாட்டி' 
என்றும் சொல்லலாம்.

செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே! 

என்று கடைசி வரை பாடிக்கொண்டிருந்தவர் பாரதியார்.

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் 
மங்காத தமிழென்று சங்கேமுழங்கு' 

என்று இறுதி வரை முழங்கிக் கொண்டிருந்தவர் பாரதிதாசன். பாரதியார் புகழ் பரவக் காரணமாக இருந்தவர்கள் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். பாரதிதாசன் புகழ் பரவக் காரணமாக இருந்தவர்கள் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். 

பாரதியார் காலம் விடுதலைத் தீ கொழுந்துவிட்டு எரிந்த காலம். பாரதிதாசன் காலம் சீர்திருத்தக் கொள்கைகள் சிறந்தோங்கி இருந்த காலம். அதனால் பாரதி பாடாத பல புரட்சிக் கருத்துகளைப் பாரதிதாசன் பாடினார். அதனால் "புரட்சிக் கவிஞர்' என்ற அடைமொழிக்குப் பொருத்தமானவராக விளங்கினார். அவரைப் "பாவேந்தர்' என்று சொல்வதைவிட, "புரட்சிக் கவிஞர்' என்று சொல்வதுதான் அவருக்குச் சிறப்புச் சேர்க்கும்.

பாரதியும், பாரதிதாசனும் தமிழ்ப் பகைவர்களுக்கு இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருந்தவர்கள். பாரதியைச் சந்திக்கும் வரை பாரதிதாசன் பக்திப் பாடல்களும், கதர் ராட்டினப் பாடல்களுமே எழுதி வந்தார். இவரைப் புதிய சிந்தனையாளராக மாற்றி சமுதாயப் பாடல்களை எழுதத் திசை திருப்பியவர் பாரதியார்தான். இதைப் பாரதிதாசனே சொல்லியிருக்கிறார்.

முப்பதாண்டு முடியும் வரைக்கும் நான் 
எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்
கடவுள் இதோவென்று மக்கட்குக் காட்டி
சுடச்சுட அவனருள் துய்ப்பீர் என்னும்

என்று சொல்லிவிட்டு... 

பாடலிற் பழமுறை பழநடை என்பதோர்
காடு முழுவதும் கண்டபின் கடைசியாய்
சுப்பிர மணிய பாரதி தோன்றி என்
பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார்

என்று முத்தாய்ப்பாய்க் கூறுவார். ஆண் வர்க்கத்திடம் அடிமைப்பட்டுக் கிடந்த பெண் வர்க்கத்தின் விடுதலைக்குப் பெருங்குரல் கொடுத்தவர் பாரதியார் என்றாலும், விதவைப் பெண்களின் விவாக வாசற் கதவைத் திறக்கக் கவிதை 
பாடியவர் பாரதிதாசன்தான்.

பாரதியார் இல்லையென்றால் நமக்குப் பாரதிதாசன் கிடைத்திருக்க மாட்டார். சுப்புரத்தினம்தான் கிடைத்திருப்பார். ""ஐயர் இல்லையென்றால் இப்போது ஓய்வு பெற்ற தமிழாசிரியராகி கோயில்களில் பக்திச் சொற்பொழிவு செய்து கொண்டிருப்பேன்'' என்று பாரதிதாசன் குறிப்பிட்டிருக்கிறார்.

திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மீது   உ.வே.சாமிநாத ஐயர் எந்த அளவு பக்தி வைத்திருந்தாரோ, அந்த அளவு பாரதியார் மீது பாரதிதாசன் பக்தி வைத்திருந்தார். உ.வே.சா., தன் ஆசிரியர் பெயரை முழுவதும் சொல்லாமல் "பிள்ளையவர்கள்' என்றுதான் சொல்வாராம். அதைப் போல் பாரதியாரை "ஐயர்' என்றுதான் பாரதிதாசன் சொல்வார். முழுப் பெயரை சொல்ல மாட்டார்.

ஒரு கவிஞர் இன்னொரு கவிஞரைப் பாராட்டுவதற்கே யோசிக்கும் இந்தக் காலத்தில், பாரதியாருக்கு முதன்முதல் வாழ்த்துக் கவிதை பாடியவரும் பாரதிதாசன்தான்.

""சாதிக் கொள்கையை உண்மையாக எதிர்த்தவர் பாரதியார். அவருக்கு முன்னால் சாதிக் கொடுமைகளை இவ்வளவு கடுமையாக எதிர்த்தவரை நான் கண்டதில்லை. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கு முன்னே சாதியை எதிர்த்தவர் இவர். நான் இன்று எப்படி இருக்கிறேனோ, என்ன கொள்கையைக் கொண்டிருக்கிறேனோ அப்படித்தான் பாரதியார் அன்றைக்கிருந்தார். பார்ப்பனக் குலத்தில் பிறந்தாரேயன்றி பார்ப்பனரைப் போல ஒருநாளும் வாழ்ந்ததில்லை''  என்றும் பாரதிதாசன் சொல்லியிருக்கிறார்.
பாரதிதாசன் பாடிய ""எங்கெங்குகாணினும் சக்தியடா  தம்பி ஏழு கடல் அவள் வண்ணமடா'' என்ற கவிதையை ""சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது'' என்று பாரதியாரே குறிப்பெழுதி சுதேசமித்திரன் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தாராம். அதுதான் முதன்முதல் பத்திரிகையில் வெளிவந்த பாரதிதாசன் கவிதை. மேலும், அவரது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து  ஓர் ஆங்கிலப் பத்திரிகைக்கு அனுப்பி, அவை வெளிவரும்படி செய்தவரும் பாரதியார்தான்.

அதுபோல் பாரதி கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து "யங் இந்தியா' ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவரச் செய்தவர் மூதறிஞர் ராஜாஜி ஆவார். 

இலக்கணம் ஒரு மொழிக்கு எவ்வளவு முக்கியம் என்று சொல்லி, இலக்கணப் பிழை வராமல் எழுத வேண்டும் என்ற உணர்வைப் பாரதியாருக்கு ஏற்படுத்தியவரே பாரதிதாசன்தான். பதினேழு வயதிலேயே முறைப்படி தமிழைப் படித்துப் புலவர் வகுப்பில் முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றவர் பாரதிதாசன்.

பாரதிதாசனுக்குள்ள இலக்கணப் புலமை பாரதியாருக்கில்லையென்று அவர் கவிதைகளைப் படிக்காமல் ஒதுக்கியவர்கள் பங்காரு பத்தர், திருப்புளிசாமி போன்ற புலவர் பெருமக்கள். இவ்விருவரும்தான் பாரதிதாசனுக்குத் தமிழ் கற்பித்த தமிழாசிரியர்கள். அவர்களிடம் பாரதியாரின் கவிதைச் சிறப்பைச் சொல்லி, அவர்களையும் பாரதி கவிதைகளைப் படிக்க வைத்தவர் பாரதிதாசன்.

ஒருமுறை அரவிந்தர் ஆசிரமத்தில் வ.வே.சு.ஐயர், பாரதியார், சீனிவாசாச்சாரி போன்றவர்கள் இருந்தபோது, பிரெஞ்சு மொழிப் புலமையுடைய சிலர் பிரெஞ்சுக் கவிதைகளில் உள்ள நயங்களைப் போல் தமிழில் என்ன இருக்கிறது என்று பிரெஞ்சு இலக்கியத்தில் சான்று காட்டிப் பேசியபோது, மறுத்துச் சொல்ல எதுவும் பாரதியாருக்கு அந்த நேரத்தில் தோன்றவில்லையாம். சோர்வோடு திரும்பி பாரதிதாசனைப் பார்த்து நடந்த நிகழ்ச்சியைச் சொல்லியிருக்கிறார்.

உடனே பாரதிதாசன், அதைவிட அற்புதமான நயங்கள் தமிழில் இருக்கின்றன என்று கூறி சங்க இலக்கியங்களிலிருந்தும் இடைக்கால இலக்கியங்களிருந்தும் சில சான்றுகளை எழுதிக் கொடுத்து, மறுநாள் பாரதியாரையும் அழைத்துக்கொண்டு அரவிந்தர் ஆசிரமம் சென்று பிரெஞ்சுதான் சிறந்ததென்று சொன்ன பெரியவர்களிடம் தமிழ்தான் இலக்கிய நயங்களில் சிறந்ததென்று பாரதியார் வாய் மூலம் வாதிட வைத்து, அவர்களையும் ஒப்புக் கொள்ளும்படி செய்தாராம். இதிலிருந்து பாரதியாரைவிடத் தமிழ் இலக்கியப் பயிற்சிமிக்கவர் பாரதிதாசன் என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

நான் சிவகங்கை அரசர் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த காலத்தில் பாரதியாரைப் பற்றிப் பேச பாரதிதாசனை அழைத்திருந்தோம். அந்த நேரத்தில் நான் எழுதிய சில கவிதைகளை எங்கள் தமிழாசிரியர் புலவர் தட்சிணாமூர்த்தி, பாரதிதாசனிடம் கொடுத்து ""இவன் எங்கள் மாணவன். பெயர் முத்துலிங்கம். யாப்பிலக்கணத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவன். எல்லா வகையான பாக்களையும், சிந்து, கண்ணிகள் போன்றவற்றையும் எழுதுவான். இதைப் புத்தகமாக வெளியிட நினைக்கிறான். அதற்கு உங்கள் வாழ்த்துகளை வேண்டுகிறான். நன்றாக இருந்தால் நாலுவரி  பாராட்டி எழுதிக் கொடுங்கள்'' என்றார். 

பாரதிதாசனும் 20 நிமிடம் வரை என் கவிதைகள் சிலவற்றைப் படித்துவிட்டு வாழ்த்துரை எழுதிக் கொடுத்தார். அதில் ஒரு கவிதையை மிகவும் பாராட்டினார். அவர் வாழ்த்துரையுடன் என் முதல் கவிதைத் தொகுதி "வெண்ணிலா' 1961-இல் வெளிவந்தது.

பாரதிதாசனை நினைக்கும் போதெல்லாம்  பாரதியாரும், பாரதியாரை நினைக்கும் போதெல்லாம் பாரதிதாசனும், ஒருவர் விடுத்து மற்றவரை பிரித்துப் பார்க்க முடியாத அளவு பிணைந்திருக்கிறார்கள். பாரதியாருக்குப் பிறகு கவிதை எழுத முற்படும் யாராக இருந்தாலும் அவர் சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவராகத்தான் இருக்க முடியும்... பாரதி, பாரதிதாசனின் வரிசையில் தோன்றிய அவர்களின் வம்சாவளியினராகத்தான் இருக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com