வலம் துடிக்கின்றில வருவது ஓர்கிலேன்

ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன் அச்செயல் நல்ல முறையில் நிறைவேற வேண்டி சகுனம் பார்க்கும் பழக்கம் நம் மரபில் இருந்து வந்திருக்கிறது.
வலம் துடிக்கின்றில வருவது ஓர்கிலேன்

ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன் அச்செயல் நல்ல முறையில் நிறைவேற வேண்டி சகுனம் பார்க்கும் பழக்கம் நம் மரபில் இருந்து வந்திருக்கிறது. பறவைகள், விலங்குகள் குறுக்கே செல்லுதல், உடல் உறுப்புகளின் இயக்கங்கள் போன்றவற்றை வைத்து தம் செயல் நிறைவேறுவதை முடிவு செய்வார்கள்.

கம்பராமாயணத்தில் கண் துடித்தலை ஒரு சகுன நிகழ்ச்சியாகச் சீதை கருதுகிறார். அசோகவனத்தில் சிறை இருக்கையில் சீதையின் வலக்கண் துடிக்கிறது. உடனே அவர், திரிசடையிடம், பொலந்துடி மருங்குலாய் புருவம் கண்முதல் வலம் துடிக்கின்றில வருவது ஓர்கிலேன் என்று கூறுகிறார். 

அதாவது திரிசடையே! என் புருவமும், கண்ணும், நெற்றியும், வலப்பக்கமாகத் துடிக்கவில்லை. இடப்பக்கமாகத் துடிக்கிறதே. இதனால் வரப் போகும் பயனை நான் அறியவில்லை என்னும் பொருள் பட இவ்வாறு கூறுகிறார்.

மேலும் சீதை கூறும் பாடல் அடிகள்:

முனியோடு மிதிலையில் முதல்வன் முந்துநாள்
துனிஅறு புருவமும் தோளும் நாட்டமும்
இனியன துடித்தன ஈண்டு ஆண்டு என
நனி துடிக்கின்றன ஆய்ந்து நல்குவாய்

முன்னர் இராமன் விசுவாமித்திர முனிவருடன் மிதிலை நகருக்கு வந்த போது, என் புருவமும், தோளும், கண்ணும் இனிமை விளைவிப்பனவாக இடப்பக்கம் துடித்தன. இதன் பயனை ஆராய்ந்து கூறுவாய் என்று சீதை திரிசடையிடம் கேட்கிறார்.

சீதை தம் கண் வலப்பக்கம் துடித்ததையும் கூறுகிறார். நாடு முழுவதும் பரதனுக்கே தந்துவிட்டு, அறம் தங்கிய மனத்தை உடைய என் கணவன் இராமன் காட்டுக்கு வந்த நாளில் என் கண் வலப்பக்கம் துடித்தது என்னும் பொருளில்.

அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன்
பிறந்த பார் முழுதும்தம்பியே பெறத்
துறந்து கான் புகுந்த நாள் வலம் துடித்ததே  எனக் கூறுகிறார்.
அதே போல, 
நஞ்சு அனையான் வனத்து இழைக்க நண்ணிய
வஞ்சனை நாள் வலம் துடித்ததே 
என்றும் சீதை கூறுவதாகப் பாடல் அடிகள் உள்ளன.

சீதைக்குக் கண் வலப்பக்கம் துடித்தபோது காடு செல்லலும், இராவணன் வந்து கவர்ந்ததும் ஆகிய துன்பச்செயல்கள் நடந்தன. ஆனால் இடப்பக்கம் துடித்தபோது அனுமன் வந்து நல்லசெய்தி சொன்னதும், இராமன் வில் வளைக்க வந்ததுமாகிய இன்பச்செயல்கள் நடந்தேறின. எனவே பெண்களுக்கு கண் வலப்பக்கம் துடித்தால் துன்பம் நேர்வதற்கும், அதுவே இடப்பக்கம் துடித்தால் இன்பம் வந்து சேர்வதற்கும் உரிய சகுனங்கள் என உணர முடிகிறது.
சிலப்பதிகாரத்திலும், 
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உண்ணிறை கரந்தகத் தொளித்துநீர் உகுத்தன
என்று காட்டப்படுகிறது. 

கண்ணகியிடம் கோவலன் வரப்போவதால் கண்ணகிக்கு இன்பம் வரப்போகிறது என்பதைக் காட்ட இடக்கண்ணும், மாதவியை விட்டுக் கோவலன் பிரிந்து சென்று மாதவிக்குத் துன்பம் வரப்போகிறது என்பதைக் குறிப்பிட வலக்கண்ணும் துடித்தனவாம்.

ஐங்குறுநூறு 218-ஆம் பாடலில் தோழி, தலைவியிடம் "இடக்கண் துடிக்கிறது; எனவே தலைவன் வந்துவிடுவான்' என்று கூறுவதாக நுண்ணோர் புருவத்த கண்ணும் ஆடும் எனும் பாடலடி காட்டுகிறது.

திணைமாலை நூற்றைம்பது 80-ஆம் பாடலில், சிறந்த பொருளை ஈட்டிக்கொண்டு வரச்சென்ற என் தலைவர் வந்துவிடுவார் என்பதன் அறிகுறியாக என் இடக்கண் துடிக்கிறது எனத் தலைவி கூறுவதாக இப்பாடல் அடிகள் காட்டுகின்றன.

சிறந்து பொருள்தருவான் சேட்சென்றார் இன்றே இறந்து கண் ஓடும் இடம் சகுனம் பார்ப்பதில் சங்ககாலத்தில் விரிச்சி கேட்டல் என்னும் வழக்கம் இருந்து வந்துள்ளது. அதாவது நாம் ஒரு செயல் நிறைவேற வேண்டுமே என்னும் எண்ணத்தில் இருக்கும்போது நமக்குத் தொடர்பில்லாத ஒருவர் ஏதேனும் ஓர் உடன்பாட்டு மொழி மொழிந்தால் அச்செயல் நிறைவேறும் என எண்ணுதலே விரிச்சி கேட்டல் ஆகும். இவ்வாறு நற்சொல் கேட்க முதுபெண்டிர் காத்திருப்பார்கள்.

முல்லைப்பாட்டு என்னும் சங்க இலக்கியம் விரிச்சி கேட்டலைக் காட்டுகிறது. தலைவன் போர் செய்யச் சென்றிருக்கிறான். இன்னும் அவன் வரவில்லையே எனத் தலைவி கவலையுடன் காத்திருக்கிறாள். அப்போது மூத்த பெண்டிர், அரும்புகள் மலர்ந்திருக்கும் முல்லை மலரைத் தூவி, இறைவனை வேண்டிக் கைதொழுது நற்சொல் கேட்டு நிற்கின்றனர். 

அப்பொழுது சிறிய கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் இளம்கன்று தன் தாயினைக் காணாது துயரம் கொண்டு அங்கும் இங்கும் சுழன்று கொண்டிருக்கிறது. அதனைப் பார்த்த ஆயர்குலப்பெண் கூறுகிறாள். "வளைந்த கோலினை கையிலே வைத்துள்ள கோவலர் பின் நின்று செலுத்த உன் தாய் இப்பொழுதே வருவர்'. இதைக் கேட்ட முதுபெண்டிர், "நாங்கள் நற்சொல் கேட்டோம். நல்லவர்களின் நல்ல வாய்ச்சொல் கேட்டதனால் பகைவர் இடத்தைக் கவர்ந்துப் போரை முடித்துத் தலைவர் வருவார்; இது உண்மை' என்று தலைவியிடம் கூறுகிறார்கள்.

முல்லைப்பாட்டின் 10 முதல் 19 முடிய உள்ள அடிகள் இவ்வாறு விரிச்சி கேட்டலை விளக்குகின்றன.

அரும்பு அவிழ்அலரி தூஉய் கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள், கைய
கொடுங்கோல் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே தருவர் தாயர் என்போள்
நன்னார் நன்மொழி கேட்டனம்; அதனால்
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்
முனைக்கவர்ந்து கொண்ட திறையர் 
வினைமுடித்து வருதல், தலைவர் வாய்வது..

இன்னும் பல்லி ஒலித்தலைக் கேட்டும் சகுனம் பார்த்ததைப் பாலைத் திணைப் பாடல்கள் காட்டுகின்றன. இவ்வாறு சகுனம் பார்த்தல் என்பது இலக்கியங்களில் பல பாடல்களில் இடம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com