
ம.ரா.போ. என்று அன்போடு அழைக்கப்பட்ட தமிழறிஞர் ம.ரா.போ. குருசாமி(மம்சாபுரம் ராக்கப்பிள்ளை போத்தலிங்கம் குருசாமி) ராஜபாளையம் அருகேயுள்ள மகமது சாகிப்புரம் என்னும் மம்சாபுரத்தில் 1922 ஜூன் 15-ஆம் தேதி பிறந்தவர்.
சில அறிஞர்களின் ஆய்வுக் கருத்துகளோடு மாறுபடும்போது, " அவர்கள் கருத்துக்கு மாறாகப் போகும் குருசாமி என்பதால்தான் நான் ம.ரா.போ. குருசாமி' என்று சிரித்துக் கொண்டே சொல்வார் அவர்.
தொடக்கத்தில் தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலும் பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் தமிழ் பயின்ற ம.ரா.போ, டாக்டர் மு. வரதராசனாரின் மாணவர். அதுபற்றி அவருக்குப் பெருமிதம் உண்டு. மு.வ. பற்றிய தமது நினைவுகளை "மூவா நினைவுகள்' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார்.
தன் குருநாதர் மு.வ.வைப் போலவே நவீன இலக்கியத்திலும் நாட்டம் கொண்டவர் அவர். "இட மதிப்பு' என்ற தலைப்பில் ம.ரா.போ. குருசாமியின் சிறுகதைத் தொகுதி ஒன்று வெளிவந்துள்ளது.
மு.வ.வைத் தவிர அ.ச. ஞானசம்பந்தன், அ.மு. பரமசிவானந்தம், துரை அரங்கனார் போன்ற பேரறிஞர்களிடமும் தமிழ் பயின்றவர் ம.ரா.போ. தமது தமிழறிவைப் பட்டை தீட்டியவர்கள் என்று இவர்கள் பெயரையெல்லாம் அடிக்கடிச் சொல்லி நன்றியோடு நினைவு கூர்வார். இளைஞராயிருந்தபோது திரு.வி.க.விடம் நெருங்கிப் பழகிய பெருமையும்இவருக்கு உண்டு.
சிலப்பதிகாரத்தின் மேல் அதிக நாட்டம் கொண்டவர் ம.ரா.போ. அந்த நாட்டம் ம.பொ.சி. மூலம் அவருக்கு வந்திருக்கலாம். ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகக் கொள்கைகளோடு உடன்பாடு உடையவர். அவரைத் தம் அரசியல் சிந்தனைகளுக்கான வழிகாட்டியாகக் கொண்டிருந்தார்.
ம.ரா.போ. குருசாமி, "ஆழமும் அகலமும்' என்ற தலைப்பில் ம.பொ.சி. பற்றி நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலாக வெளிவந்துள்ளது. அவருடைய களம் பழைய இலக்கியம் - குறிப்பாக சிலப்பதிகாரம். "சிலப்பதிகாரம்' குறித்து ம.ரா.போ. எழுதிய "சிலப்பதிகாரச் செய்தி', "சிலம்புவழிச் சிந்தனை' போன்ற நூல்கள் முக்கியமானவை.
அவர், ம.பொ.சி.யின் "செங்கோல்' இதழில் சிறிதுகாலம் துணையாசிரியராகப் பணியாற்றினார். கோவையிலிருந்து வெளிவந்த "கலைக்
கதிர்' என்ற அறிவியல் இதழில் பணிபுரிந்திருக்கிறார். புகழ்பெற்ற பதிப்பாளரான சக்தி வை.கோவிந்தனின் சக்தி அலுவலகத்தில் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர்.
கதரே அணிந்த காந்தியவாதியான ம.ரா.போ., காந்தியச் சிந்தனைகளைத் தாங்கிவந்த "சர்வோதயம்' என்ற மாத இதழிலும் பணிபுரிந்திருக்கிறார். அண்மைக்கால நூல்களில் ஜெயமோகன் எழுதிய "இன்றைய காந்தி' நூல் அவரைப் பெரிதும் கவர்ந்த நூல்.
அவர் பல சான்றிதழ்களுக்கு ஒப்புதல் கையொப்பமிடும்போது, "ம.ரா.போ. குருசாமி' எனக் கையொப்பமிட்டு அடைப்புக் குறிக்குள் "பேராசிரியன்' என்று எழுதுவார். "பேராசிரியர் என எழுதக் கூடாதா' என்று எவராவது கேட்டால், "எனக்கு நானே எப்படி மரியாதை கொடுத்துக்கொள்ள முடியும்? மற்றவர்கள் என்னைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் அப்படி எழுதலாம்' என விளக்கமளிப்பார். அவரிடம் புலமை உண்டே தவிர புலமைச் செருக்கு கிடையாது.
கோவை சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் துணை முதல்வராகப் பணிபுரிந்தார். கோவை கம்பன் கழகம், நன்னெறிக் கழகம் போன்ற அமைப்புகளிலும் அவர் பங்களிப்பு உண்டு. கோவை பூ.சா.கோ. கலை - அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் தம்மை வந்து சந்தித்து எந்த சந்தேகத்தையும் கேட்கலாம் என்பதாகவே அவர் நடைமுறை வாழ்வு இருந்தது. எந்த நேரத்தில் எந்த மாணவர் வந்து சந்தேகம் கேட்டாலும், அந்த மாணவருக்கு எழுந்த ஐயத்தை நீக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். தமிழ் கற்பிப்பதை ஒரு வேள்விபோல் நிகழ்த்தியவர் ம.ரா.போ.
வகுப்புக்குச் சரியான நேரத்தில் செல்வது, அன்று என்ன பாடம் நடத்தவேண்டுமோ அதை முன்கூட்டியே இல்லத்தில் தயார் செய்து
கொண்டு சென்று வகுப்பெடுப்பது, தான் எடுத்த வகுப்பு தொடர்பாக நூலகத்தில் என்னென்ன நூல்களைப் படிக்க வேண்டும் என வகுப்பு முடியும்போது பரிந்துரை செய்வது என்றெல்லாம் அவர் இயங்குவதைப் பார்த்தால் ஓர் ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அவர் இலக்கணம் வகுப்பதுபோல் தோன்றும். மாணவர்களுடன் நேசத்தோடு பழகினாலும், கண்டிப்பான ஆசிரியர் அவர்.
ம.ரா.போ.வின் பதிப்பாசிரியப் பணி குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியத்தில் உள்ள கபிலர் பாடல்களையெல்லாம் தொகுத்து "கபிலம்' என்ற தலைப்பில் உரையுடன் வெளியிட்டார். கோவை கம்பன் கழகம் வெளியிட்ட கம்பராமாயணப் பதிப்பிலும் அவரது பங்களிப்பு அதிகம். சுந்தரம் பிள்ளை எழுதிய "மனோன்மணீயம்' கவிதை நாடக நூலையும் பதிப்பித்துள்ளார்.
ம.ரா.போ. குருசாமி, "பாரதியார் ஒரு பாலம்', "கம்பர் முப்பால்', "குலோத்துங்கன் கவிதைகள் ஒரு திறனாய்வுப் பார்வை' போன்ற இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர் ஆவார். சாகித்திய அகாதெமியின் "இந்திய இலக்கியச் சிற்பிகள்' நூல் வரிசையில் திரு.வி.க., மா. இராசமாணிக்கனார் ஆகியோரைப் பற்றி நூல்கள் எழுதியுள்ளார். பாரதி கவிதைகளைத் தொகுத்து ஆய்வுப் பதிப்பு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் இளையராஜா அறக்கட்டளை வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது, சேக்கிழார் விருது, கலைஞர் விருது, பேராசிரியர்
இராதாகிருஷ்ணன் விருது, குலபதி முன்ஷி விருது, ஸ்ரீராம் குழுமத்தின் பாரதி விருது உள்பட பல முக்கியமான விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன. விருதுகள் அவரைத் தேடி வந்தனவே தவிர, விருதுகளைத் தேடி அவர் நடந்ததில்லை. இன்னும் மேலான பல விருதுகளுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர்.
தீவிர முருக பக்தரான ம.ரா.போ. குருசாமி, முருகனைப் பற்றி மரபுக் கவிதை நூல் ஒன்றை எழுதிய மரபுக் கவிஞரும் கூட. முருகன் சிந்தனையில் தோய்ந்தே தம் இறுதிக் காலத்தைக் கழித்தார்.
தொண்ணூறு வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்த ம.ரா.போ. குருசாமி 2012 அக்டோபர் 6 அன்று மறைந்தார்.இந்த ஆண்டு அவர் பிறந்த நூற்றாண்டு ஆகும்.
பழந்தமிழ் இலக்கியத்தில் ஆழங்கால்பட்டு எழுத்திலும் பேச்சிலும் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட செம்மாந்த தமிழறிஞர் வரிசையில் மா.ரா.போ. குருசாமிக்கு ஒரு தனித்த இடம் உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.