சிலப்பதிகாரத்தில் சமயப் பொறை

இந்து சமயம் தோன்றிய காலம் குறித்து முடிவான முடிவுகள் எதுவும் இல்லை எனலாம்.
சிலப்பதிகாரத்தில் சமயப் பொறை
Published on
Updated on
2 min read

இந்து சமயம் தோன்றிய காலம் குறித்து முடிவான முடிவுகள் எதுவும் இல்லை எனலாம். இந்த வைதீக மரபு முன்னர் சைவம், வைணவம் என்று பிரிந்து கிடந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள மாங்காட்டு மறையோன் குறித்த செய்திகளைப் பார்க்கும்போது, இவ்வைதீக மரபு ஒன்றிணைந்து ஒரே சமய நெறிக்கு உட்பட்டதாக இருந்துள்ளது என்பது தெரிய வருகிறது.

சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் முதல் காதையாக அமைந்துள்ள காடுகாண் காதையில் மாங்காட்டு மறையோன் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. மாங்காட்டு மறையோன் என்ற பெயரின் மூலம் இவர் மாங்காடு என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்பதையும், மறையவர் குலத்திûனைச் சேர்ந்தவர் என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளுடன் உறையூரிலிருந்து மதுரைக்குச் செல்லும்போது, நடந்து செல்லும் களைப்பு நீங்குவதற்காக வழியில் இருந்த இளஞ்சோலையில் அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் தங்கினர். அப்போது வழிப்போக்கனாக அங்கு தங்கியிருந்த மாங்காட்டு மறையோன் பாண்டிய மன்னனின் புகழைப் பாடிக்கொண்டிருந்தார்.

வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை 
ஊழி தொறு ஊழி தொறு உலகங் காக்க
அடியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி

என்று மாங்காட்டு மறையோன் பாடுவதைக் கேட்ட கோவலன், அவர் அறிவின் திறத்தையும், அவர் பாண்டியர் வரலாற்றினை நன்கு அறிந்தவர் என்பதையும் அறிந்துகொண்டான். எனவே, அவரிடம் வழி கேட்டுத் தெளிவது எளிது என்று கருதியதால் அவர் அருகில் சென்று, யாது நும் ஊர், ஈங்கு என் வரவு?  எனக் கேட்கிறான். 

அதற்கு மாங்காட்டு மறையோன் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மாங்காடு தன் ஊர் என்றும் திருவரங்கத்தில் கிடந்த கோலத்தில் கிடக்கும் திருமாலையும் திருப்பதியில் நின்ற கோலத்தில் நிற்கும் திருமாலையும் காண, தன் கண்கள் ஆசை கொண்டதால் அங்கு வந்ததாகவும் கூறுகிறார்.

திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்...
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற
வந்தேன் குடமலை மாங்காட்டு உள்ளேன்

மாங்காட்டு மறையவனைப் பற்றி அறிந்துகொண்ட கோவலன், அவரிடம்மதுரைக்குப் போகும் வழியினைக் கேட்கிறான், அதற்கு மாங்காட்டு மறையோன், மதுரைக்குச் செல்வதற்கு வலப்பக்க வழி, இடப்பக்க வழி, நடு வழி என்னும் மூன்று வழிகள் இருப்பதாகக் கூறுகிறார். மேலும் அவ்வழிகளின் இயல்புகளையும் தெரிவிக்கிறார். அந்த மூன்று வழிகளும் கடினமான வழிகளாக அமைந்துள்ளன.

வலப்பக்க வழியானது கொடிய பாலை நிலம் போல் காட்சி அளிக்கின்றது. வழி நெடுகிலும் பட்டுப்போன மரங்களும் தண்டு காய்ந்து போன மூங்கிலும் நீரில்லாது கருகிக் கிடக்கும் மரங்களுக்கு இடையே நீர் வேட்கையால் கதறுகின்ற மான்களும் பாலைநிலைக் குடியிருப்புகளும் நிறைந்தது. 

இடப்பக்க வழியானது சிக்கல்கள் பல நிறைந்ததாக அமைந்துள்ளது. குளங்கள், தாழ்ந்த வயல்கள் போன்றவற்றைத் தாண்டிச் சென்றால் மலை ஒன்றுத் தோன்றும், அம்மலையில் உள்ள குகை வழியாகச் சென்றால் புண்ணிய சரவணம், பவகாரணி, இட்ட சித்தி என்னும் மூன்று பொய்கைகள் உள்ளன. அந்தப் பொய்கைகளை எல்லாம் தாண்டி, குகை வழியாகச் செல்லும்போது சிலம்பாற்றின் கரை தென்படும். அங்கே வரோத்தமை என்ற பெயருடைய தெய்வப்பெண் ஒருத்தி நிற்பாள். அவள் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கூறினால் குகை வாயிலைத் திறந்து விடுவாள். அவ்வழியாகச் சென்றால் இரட்டைக் கதவு வாயில் ஒன்று உள்ளது. அங்கே அழகிய பெண் ஒருத்தி தோன்றுவாள். அவள் கேட்கும் கேள்விகளுக்கு விடை அளித்தால் புண்ணிய பொய்கைகள் மூன்றின் கரைகளைக் காட்டி, மறுபக்கம் செல்வதற்கு வழி காட்டுவாள்.

நடுப்பக்க வழியும் மந்திர தந்திரங்கள் நிறைந்ததாகவே அமைந்துள்ளது. நடுப்பக்கப் பாதை வழியாகப் பல ஊர்களையும் காடுகளையும் கடந்து சென்றால் அவ்வரிய வழியிடத்துத் துன்பந்தரும் தெய்வம் ஒன்று உள்ளது. அத்தெய்வமானது வழிப்போக்கர்களுக்கு அச்சம் தோன்றாதபடி அவர்கள் முன் தோன்றி அவர்களை மயக்கி அவர்களின் போக்கினைத் தடுக்கும். அதற்கு மயங்காமல் கடந்து சென்றால் மதுரைக்குச் செல்லும் பெருவழியினை அடையலாம் என்கிறார்.

பாண்டிய நாட்டோடு சேரர்களும் சோழர்களும் நெருங்கிய வணிகத் தொடர்பு வைத்திருந்ததையும் அரசியல் தொடர்பும் மதத் தொடர்பு கொண்டிருந்ததையும் அறிகிறோம். எனவே விரைவாகப் பாண்டிய நாட்டிற்குச் சென்று வருவதற்கு ஏற்ற வகையில் அமைந்த எளிய வழியானது இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

மாங்காட்டு மறையோன் வைணவம் சார்ந்தவர் போல் தோன்றினாலும் சைவத்தைப் புறக்கணித்து வாழும் துறவி என்று கூற இயலாது. சைவம், வைணவம் இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் இயல்பு கொண்டவர் என்றே எண்ணத் தோன்றுகிறது. அவர் மதுரை செல்வதற்கான வழியினை மூன்றாகப் பிரித்து சொல்லும்போது சிவனின்  தோற்றத்தினையும் அவன் தனது கையில் ஏந்தியிருக்கும் திரிசூலத்தினையும் குறிப்பிடுகிறார். மேலும் இடப்பக்க வழியின் தன்மையினைக் குறிப்பிடும் இடத்தில் ஐந்தெழுத்து மந்திரத்தினையும் எட்டெழுத்து மந்திரத்தினையும் குறிப்பிடுகிறார்.

அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திரம்..  

என்ற வரிகளில் ஐந்து எழுத்து மந்திரம் என்று குறிப்பிடப்படுவது, "நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து சைவ மந்திரம் ஆகும். எட்டெழுத்து மந்திரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது நமோ நாராயணாய நம: என்னும் எட்டெழுத்து வைணவ மந்திரம் ஆகும். 

இந்த இரு மந்திரங்களையும் தெரிவித்திருப்பதிலிருந்து சைவம், வைணவம் என்னும் பேதம் இல்லாதவர் இந்த மாங்காட்டு மறையோன் என அறிய முடிகிறது. மேலும் இவரைச் சைவமும் வைணவமும் கலந்த ஒரு வைதீகத் துறவி என்று குறிப்பிடும் அளவிற்கு இவரது இந்தக் கூற்று அமைந்துள்ளது. இதனடிப்படையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமுதாயக் கட்டமைப்பில் வைதீகச் சமய நிலையினை ஆய்வுக்குட்படுத்துதல் அவசியம் எனலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com