சீவக சிந்தாமணியில் ஒளிரும் சமத்துவம்!
By கே.ஏ.ராஜபாண்டியன் | Published On : 10th April 2022 06:19 PM | Last Updated : 10th April 2022 06:19 PM | அ+அ அ- |

"சீவகசிந்தாமணி' காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன் சீவகன். இவன் தந்தை மன்னன் சச்சந்தன். இராசமாபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஏமாங்கதம் நாட்டை அறக்கடவுள் போல சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். தன் மனைவி விசயை மீது கொண்ட அளவற்ற அன்பினால் ஆட்சியில் கவனம் செலுத்த இயலாத சூழ்நிலை உருவாக, அவன் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான அமைச்சர் கட்டியங்காரனிடம் ஆட்சிப் பொறுப்பைக் கவனிக்கப் பணித்தான்.
ஆனால், வஞ்சக நெஞ்சம் கொண்ட கட்டியங்காரனோ நாட்டை நிரந்தரமாகத் தானே ஆளவேண்டும் என்னும் தீய எண்ணம் கொண்டு மன்னன் சச்சந்தனைக் கொன்றுவிட்டு ஆட்சிப் பீடத்தில் அமர்ந்துவிடுகிறான். இந்நிலையில், சுடுகாட்டில் பிறந்து, கந்துக்கடன்என்னும் வணிகனால் வளர்க்கப்பட்டு கல்வியிலும், வீரத்திலும், கலைகளிலும் வித்தகனாக மிளிர்ந்து, வாலிபப் பருவம் எய்திய சச்சந்தனின் மகன் சீவகன் தன் ஆசான் அச்சணந்தி அடிகளார் வாயிலாகத் தன் பிறப்பு முதலான உண்மைகளை அறிந்தான்.
காலம் கனிய, சீவகன் கட்டியங்காரன் மீது உரிமைப் போர் தொடுத்து அவனை வீழ்த்தி தந்தை இழந்த நாட்டை மீட்டெடுத்தான்.
"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்தும்'
என்னும் குறள் நெறிக்கிணங்க சச்சந்தன் ஆட்சியில் பொலிவுடன் விளங்கிய ஏமாங்கத நாடு, கட்டியங்காரன் நடத்திய கொடுங்கோல் ஆட்சியால் சீர்த்தியிழந்தும், மக்கள் பிணியிலும், வறுமையிலும் உழலும் அவலம் ஏற்பட்டது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்ட மன்னன் சீவகன், நாட்டில் அமைதியும், மக்களிடையே சமத்துவமும் உருவாக வேண்டும் என்ற நன்நோக்கோடு அரியணையில் அமர்ந்ததும் முதல் அறிவிப்பாக அவன் வெளியிட்ட மக்கள் நலத் திட்டங்களை "பூமகள் இலம்பகத்தில்' இடம்பெற்றுள்ள பாடல்களின் வாயிலாக ஈண்டு காண்போம்.
ஒன்றுடைப் பதினை யாண்டைக்
குறுகடன் இறைவன் விட்டான்
இன்றுளீர் உலகத் தென்றும்
உடனுளீ ராகி வாழ்மின்
பொன்றுக பசியும் நோயும்
பொருந்தலில் பகையும் என்ன
மன்றல மறுகு தோறும்
மணிமுர சார்ந்த தன்றே!
நோக்கொழிந் தொடுங்கி னீர்க்கும்
நோய் கொளச் சாம்பினீர்க்கும்
பூக்குழல் மகளிர்க் கொண்டான்
புறக்கணித் திடப்பட் டீர்க்கும்
கோத்தரு நிதியம் வாழக்
கொற்றவன் நகரோ டென்ன
வீக்குவார் முரசம் கொட்டி
விழுநகர் அறைவித்தானே
(பா. 2375, 2376)
மன்னனின் இவ்வறிவிப்பு வெளியாகும் இந்நாள் முதல் பதினாறு ஆண்டுகளுக்கு உரிய வரிகள் அனைத்துக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களைத் துன்புறுத்தும் பசியும் பிணியும், ஏற்கத்தகாத பகையும் விலகத்தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்னும் செய்தி தலைநகர் இராசமாபுரமெங்கும் முரசு முழங்க அறிவிக்கப்பட்டது.
மேலும், கண்பார்வை இழந்து வாழ வழியின்றி ஒடுங்கித் துன்புறுவோர்க்கும், நோயால் பீடிக்கப்பட்டு துன்ப-துயரங்களை மனத்தில் சுமந்து வாழ்வோர்க்கும், கணவனால் புறக்கணிக்கப்பட்டு கையறு நிலையில் வாடும் மகளிர்க்கும் வாழ்வதற்கு வீடும், வாழ்வாதாரம் சிறக்கத் தொடர்ந்து நிதியுதவியும் மன்னர் வழங்குவார் என்ற அறிவிப்பும் ஏமாங்கத நாடெங்கிலும் ஒலித்தது என்று மேற்கண்ட பாடல்கள் விரிந்துரைக்கின்றன.
இவ்வாறான முற்போக்கு சிந்தனை கொண்ட சமூகநலத் திட்டங்களை மன்னன் சீவகன் அறிவித்து, நடைமுறைப்படுத்தினான் என்ற அரிய தகவலை ஆழ்ந்து நோக்கும்போது, இன்றைய காலகட்டங்களில் சமூகத்தில் சமத்துவம் மலரஆட்சியாளர்கள் வகுத்தளிக்கும் நலத் திட்டங்களுக்கெல்லாம் முன்னீடு போன்றும், வழிகாட்டியாகவும் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான திருத்தக்கதேவர் இயற்றிய "சீவகசிந்தாமணி பாடல்' திகழ்கிறது என்ற கருத்து நம் உள்ளங்களில் பெருமையுடன் படர்கிறது என்பது மட்டுமின்றி, வியப்பும் மேலோங்குகிறது!

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...