மகாகவி பாரதியும் அருந்தவப் பன்றியும்!

"நமக்குத் தொழில் கவிதை' என்று சொன்ன பாரதி, சுமார் ஆறு ஆண்டுகள் கவிதை எழுதாமல் இருக்குமளவில் அவர் வாழ்க்கைப் போக்கை மாற்றியுள்ளது அவரது வறுமை.
மகாகவி பாரதியும் அருந்தவப் பன்றியும்!

"நமக்குத் தொழில் கவிதை' என்று சொன்ன பாரதி, சுமார் ஆறு ஆண்டுகள் கவிதை எழுதாமல் இருக்குமளவில் அவர் வாழ்க்கைப் போக்கை மாற்றியுள்ளது அவரது வறுமை. இளமையில் வறுமையின் வயப்பட்ட ஒரு பதினான்கு வயது குழந்தையின் நிலையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டவர் எட்டையபுர மன்னர் என்று விளக்குகிறது பாரதியின் கவிதை ஒன்று. 

கல்விச் செலவுக்குப் பணம் கேட்டு "சீட்டுக் கவி' எழுதிய குழந்தையைப் பிஞ்சிலே பழுக்க வைத்தவர் எட்டையபுர மன்னர் என்கிறது பாரதி கிருஷ்ணகுமார் எழுதியுள்ள "அருந்தவப் பன்றி சுப்பிரமணிய பாரதி' என்னும் நூல். இதனைப் படிக்கும் பாரதியின் பற்றாளர் எவர்க்கும்  அடக்க முடியாமல் எழும் வெஞ்சினம். 

இளம் சிறார்களின் வாழ்க்கைப் போக்கை மாற்றும் பெரியவர்கள் காலம் காலமாக இருந்து வந்துள்ளனர் என்பதையும், எட்டையபுர மன்னரிடம் பணியாற்றிய காலத்தில் பாரதி கவிதை புனையவில்லை என்பதையும் "கவிதா தேவியின் அருள் வேண்டல்' என்னும் தலைப்பில் அமைந்த கதைக் கவிதையும், இதில் இடம்பெறும் "அருந்தவப் பன்றி' என்னும் தவ முனிவர் ஒருவரின் கதையும் இக்கவிதையின் பின்னணியில் கிடைக்கும் செய்திகளும் படம்பிடிக்கின்றன. 

கவிதைப் பணியை முழுவதுமாகக் கைவிட்டு, பிறகு மீண்டும் கைக்கொள்வதற்காகத் தன் கவிதைக் காதலியைச் சரணடைகின்றார் பாரதி. "கவிதா தேவியின் அருள் வேண்டல்' என்னும் தலைப்பில் ஒரு கவிதையைப் புனைகின்றார். இக்கவிதையில் இடம்பெற்ற அருந்தவப் பன்றி பற்றிய கதை வருமாறு:

தவமுனிவர் ஒருவருக்கு, "பன்றியாகக் கடவது' என்று சாபம் கிடைக்கிறது. "சாபம்' என்று ஒன்று இருந்தால் "விமோசனம்' என்று ஒன்று இருந்தே தீரும். அதுதான் புராணங்களின் சிறப்பம்சம். அந்த இலக்கணப்படி, அருந்தவ முனிவருக்கு அந்தச் சாபத்தில் இருந்து விமோசனம் பெற வேண்டுமானால், அவருடைய மகனே அவரை வாளால் வெட்டிக் கொல்ல வேண்டும். 

சாபம் பெற்ற முனிவரோ தன் மகனை அழைத்து, "சாபத்தால் நான் பன்றியாக மாற இருக்கிறேன். ஆகவே நீ வாள் கொண்டு என்னைக் கொலை செய்ய வேண்டும், அது உன் கடமை.  என்னைக் கொலை செய்வதால் எந்தப் பாவமும் உன்னை வந்தடையாது. அது என் சாபத்திற்கான விமோசனமேயன்றி கொலை அல்ல' என்று கூறிவிட்டு,  பன்றியாகிக் காட்டுக்குள் ஓடிவிடுகிறார்.

தந்தை சொல்லை மிகுந்த வருத்தத்தோடு கேட்ட மகன், "இந்த இழிவான பன்றி உடலில் இருந்து தந்தையை எப்படியாவது மீட்டு மனிதராக மாற்றிவிட வேண்டும்' என்று நினைத்துக்கொண்டு காட்டுக்கு விரைகின்றான். வாளைக்கொண்டு அந்தப் பன்றியைக் கொல்லலாம் என்று அருகில் செல்கின்றான். 

அந்த அருந்தவப் பன்றியோ, ""நில்.. நில்.. நான் நினைத்தது போல இந்த வாழ்க்கை அவ்வளவு துன்பமானது அல்ல. காற்றும், நல்ல நீரும், புற்களும், கிழங்குகளும் இதுபோன்ற எண்ணற்ற இன்பங்கள் இங்கேயும் உள்ளன. ஆகவே, நீ சென்று ஆறு ஏழு திங்கள் கழிந்த பின்பு வந்து என்னைக் கொலை செய்'' என்று கூறியது. 

தந்தை சொல்லை மீற மனமின்றி பரிதாபத்தோடு "சரி' என்று சொல்லிச் செல்கிறான். ஆறேழு திங்கள் கழிந்த பின்பு மீண்டும் தந்தையைக் கொல்ல வருகின்றான். அப்போது அருந்தவப் பன்றியாகிய அவனுடைய தந்தை, தன் துணையாகிய பெண் பன்றியோடும், ஏழெட்டுப் பன்றிக் குட்டிகளோடும் மகிழ்ந்திருப்பதைக் காண்கின்றான். 

அவர் அருகில் சென்று ""தந்தையே! வேத நூல்களை எல்லாம் கற்றறிந்து, முனிவர்கள் எல்லோரும் போற்றும்படி வாழ்ந்த தவ முனிவராகிய தங்களுக்கு இது பொருந்துமா?'' என்று பேசியபடியே அந்தப் பன்றியை மாய்த்துவிடலாம் என்று உடைவாளை உருவுகின்றான். 

பதைபதைத்து, மகனைப் பார்த்து சினந்த பன்றி, ""போ.. போ.. தீய குணம் படைத்தவனே! எனக்கு இந்த வாழ்க்கை இன்பம் உடையதாக இருக்கிறது. உனக்கு என்னைப் பார்க்கப் பிடிக்கவில்லை என்றால், அந்த வாளால் உன்னை நீயே மாய்த்துக்கொள்'' என்று கூறிவிட்டு தன்னுடைய இனத்தோடு காட்டுக்குள் ஓடி மறைகிறது.

பாரதியார் சந்திரிகையின் கதை, நவதந்திரக் கதைகள், சின்ன சங்கரன் கதை, ஞானரதம் முதலான எண்ணற்ற கதைகளை எழுதியவர். ஆகவே இக்கதையை அவர் எழுதியதில் வியப்படைய எதுவும் இல்லை. ஆனால், பாரதியாரின் அந்தக் கதைகள்போல, கதைகளின் வரிசையில் இக்கதை இடம்பெறவில்லை. "கவிதை எழுதவில்லையே' என்று வருந்தி எழுதிய ஒரு நீண்ட கவிதையின் இடையில் இக்கதையைக் கவிதை வடிவில் எழுதியிருக்கிறார்.

இளமை முதல் கவிமகளைக் காதலித்து, அவள் கரம் பிடித்து அற்புதமான கவிதைகளை எழுதிக் கொண்டிருந்த மகாகவி பாரதி, இடையில் சுமார் ஆறு ஆண்டுகள் கவிதை எழுதுவதையே அடியோடு மறந்து இருந்திருக்கின்றார். அக்கதையில் இடம்பெற்ற, அரியத் தவங்களையெல்லாம் செய்து, உயர்ந்த நிலையில் வாழ்ந்த அத்தவ முனிவன் தாழ்ந்த நிலைக்குச் சென்றவுடன் அதாவது, பன்றியாக மாறியவுடன் அந்தத் தாழ்ந்த வாழ்வே சுவையானது, சுகமானது என்று வாழத் தொடங்குகிறான். "அந்த முனிவரைப் போல தானும் சிலகாலம் நிலை தாழ்ந்து, மிக இழிந்த நிலையில் வாழ்ந்தேன். உன் அருள் முகத்தைப் பார்த்து ஆண்டுகள் பல கழிந்துவிட்டன'  என்று வருந்தி கவிதா தேவியிடம் புலம்பக் கூடியதாக இக்கவிதை அமைந்துள்ளது.

"வாராய் கவிதையாம் மணி பெயர் காதலி 
பன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தன 
நின்னருள் வதனம்நான் நேருறக் கண்டே 
அந்தநாள் நீயெனை அடிமையாக் கொள, யாம் 
மானிடர் குழாத்தின் மறைவுறத் தனியிருந்து 
எண்ணிலா இன்பத்து இருங்கடல் திளைத்தோம்' 

இக்கவிதையில் இருந்து "விலகி இருக்க வேண்டிய சூழலில் ஒரு சாதாரணக் கவிஞனே தான் கவிதை எழுதவில்லையே' என்று வருந்துவான். ஒரு யுகத்திற்கான கவிதையை வடித்துச் சென்ற அந்த மாக்கவிக்கு ஆறு ஆண்டு காலம் கவிதை எழுதவில்லை என்பது மனத்தை அறுக்கும் பெரும் துயரமாக இருந்திருக்கிறது. 

ஆகவேதான் மகாகவி பாரதியார் தன் கவிதைக் காதலியை அழைத்து அவரிடம் பேசத் தொடங்குகிறார். "கவிதை என்னும்  மணியான பெயரைக்கொண்ட காதலியே!  உன் அருள் மிகுந்த உன் கருணை மிகுந்த அந்த முகத்தை நான் நேரில் கண்டு பல்லாண்டுகள் ஆயின. அப்போதெல்லாம் நீ என்னை அடிமை கொண்டிருந்தாய். நாம் மனித குலத்திலிருந்து விலகி மறைவாக இருந்து, இருவரும் பெரும் இன்பக்கடலில் திளைத்தோம். உன்னைத் தவிர வேறு இன்பத்தை நான் அடைந்ததில்லை. நீயே உயிராக, நீயே தெய்வமாக, நின்னையே நான் பேணி நெடுநாள் வாழ்ந்தேன். கொடுமையில் மிகக் கொடுமையானது வறுமை. வறுமையில் வீழ்ந்து வேற்று ஊர் சென்று  திரும்ப வந்தபோது மறைந்துபோனது "தெய்வ மருந்துடை பொற்குடம்' என்று கூறி வருந்துகின்றார்.

கவிதைக் காதலி பாரதியாரை விட்டு நீங்கியதற்கு என்ன காரணம்?  "புன்தொழில் ஒன்று போற்றுதும் என்பான்' என்று தொடங்கும் கவிதை வரிகளின் மூலம் எட்டையபுர மன்னனிடம் பணிசெய இசைந்தபோது, கவிதைக் காதலி தன்னைவிட்டு நீங்கியதை ஆற்றொணா வருத்தத்தோடும் சினத்தோடும் பதிவு செய்கிறார் பாரதி. அதேபோல, "தென்திசை கண்ணொரு சிற்றூர் கிறைவனாம்' என்னும் அடிகளில் எட்டையபுர மன்னர் மீது பாரதிக்கு இருந்த கோபமும், அருவருப்பும் பளிச்செனத் தெரிகிறது.

"ஒரேழ் பெண்டிரும் உடையதோ ரலிமகன்' என்ற கவிதை வரிகளில்,  தாம் அந்த முனிவன்போல இழி வாழ்க்கை வாழ்ந்ததைப் பாடுகின்றார். கவிதை தேவி நின் காதலை மறந்தேன்; சில நாள்களில் பல நாடுகள் சென்று, பலரோடு தங்கி, பல செயல்கள் புரிந்து, பலவாறு வருந்தி வாழ்நாளைக் கழித்தேன்' என்று 173 அடிகளில் வடித்த இக்கவிதையை, "வாராய் கவிதை மணிப்பெயர்க் காதலி / வந்தெனக் கருளுதல் வாழிநின் கடனே' -  என்று முடிக்கின்றார் பாரதி.

இணையற்ற மகா கவிஞனை இவ்வளவு புலம்ப வைத்த வறுமை, இனி எந்தக் கவிஞனுக்கும் வாராதொழிக! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com