இந்த வாரம் கலாரசிகன் - (10-04-2022)

அகவை 87 காண இருக்கிறார் ஐயா ஒüவை நடராசன் என்கிற தகவலுடன், ஏப்ரல் 23-ஆம் நாள் மாலை 6 மணிக்கு சென்னை கிருஷ்ணகான சபாவில் நடைபெற இருக்கும் பாரதியார் விழாவுக்கு அழைத்தார்,
இந்த வாரம் கலாரசிகன் - (10-04-2022)

அகவை 87 காண இருக்கிறார் ஐயா ஒளவை நடராசன் என்கிற தகவலுடன், ஏப்ரல் 23-ஆம் நாள் மாலை 6 மணிக்கு சென்னை கிருஷ்ணகான சபாவில் நடைபெற இருக்கும் பாரதியார் விழாவுக்கு அழைத்தார், அவரது தனிச் செயலர் நண்பர் பொன்னேரி பிரதாப். ஐயா ஒளவை நடராசன் ஏப்ரல் 24-ஆம் தேதி பிறந்தவர் என்பதில் எனக்கு ஒரு சிறிய மகிழ்ச்சி. நானும் 24-ஆம் தேதி பிறந்தவன்தான். ஆனால் மாதம்தான் வேறு.

மதுரை சேதுபதி பள்ளி நாளிலிருந்து நான் அண்ணாந்து பார்த்து வியந்த இலக்கிய ஆளுமைகள் குன்றக்குடி அடிகளார், ஒளவை நடராசன், சிலம்பொலி செல்லப்பனார், சத்தியசீலன், சாலமன் பாப்பையா உள்ளிட்டோர். பிற்காலத்தில் இவர்களை எல்லாம் அருகிலிருந்து பார்க்கவும், பேசவும், அவர்களது அன்பையும் ஆசியையும் பெறவும் எனக்கு வாய்த்தது என்பது முற்பிறவிப் பயன் என்பதல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

அருட்செல்வர் நா.மகாலிங்கத்தால் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அறிஞர் என்பது ஒன்று போதும் ஐயா நடராசனாரின் தகைசால் பெருமைக்கு அடையாளம். அதுமட்டுமல்ல, தமிழறிஞர் ஒருவர் கட்சி பேதங்கள் கடந்து, அனைத்து அரசியல் தலைவர்களின் மரியாதையையும் பெறுவது என்பது, தமிழகத்தில் இயலாத ஒன்று. ஆனால், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என மூன்று அரசியல் தலைமைக்குக் கீழும் அவரால் மட்டும்தான் பணியாற்ற முடிந்திருக்கிறது. தமிழைத் தவிர வேறு எந்தச் சாயமும் தன் மீது ஒட்டிக் கொள்ளாமல் அவரால் பார்த்துக்கொள்ள முடிந்தது என்பதுதான் அதற்குக் காரணம்.

அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத்தளப் பகுதியில் அமைந்திருக்கிறது சில ஆயிரம் புத்தகங்கள் கொண்ட ஒளவை நடராசனாரின் நூலகம். தமிழ், ஆங்கிலம் என்று உலகின் ஆகச்சிறந்த இலக்கியப் பொக்கிஷங்கள் அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. "உரைவேந்தர்' ஒளவை துரைசாமிப் பிள்ளையின் சேகரிப்பு ஒரு தனிப் பகுதியாக வைக்கப்பட்டிருக்கிறது. ஒளவை நடராசனாரின் சேகரிப்பும், மூன்றாவது தலைமுறை ஒளவை அருளின் சேகரிப்பும் தனித்தனியாக இடம்பெற்றிருக்கின்றன. சிறிய இடத்தில் பெரிய நூலகம் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அப்படி இருந்தது அந்த நூலகம்.

மேலே முதல் மாடியில் இருந்தார் ஐயா. கூடவே மகன் அருளும். விழிகளில் அதே உற்சாகம், ஆர்வம். புலமையை முதுமை வென்றுவிட முடியாது என்பதை நான் உணர்ந்தேன்.

நிறைய பேசினோம். பேசினோம் என்பதைவிட, நான் பேசினேன் என்பதுதான் உண்மை. மணிக்கணக்காக மேடையில் பேசும் நடராசனாரால், சுருங்கப் பேசியும் விளக்க முடியும் என்பது உலகறிந்த உண்மைதானே. அவரது மேடைப் பேச்சுகளை எல்லாம் தொகுக்காமலும், பதிவு செய்யாமலும் விட்டது தமிழகத்தின் இழப்பு என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு.

நீண்ட நாள்களாக அவரிடம் கேட்க எனக்கு ஒரு கேள்வி இருந்தது. ஒன்றிரண்டு விடுபாடுகள் தவிர, பெரும்பாலான உலகத் தமிழ் மாநாடுகளில் நேரில் கலந்து கொண்டவர் ஒளவை நடராசன். 1981-இல் மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாடு அவரது பொறுப்பில்தான் நடைபெற்றது. மொரீஷியஸில் நடந்த 7-ஆவது மாநாடும் அவரது மேற்பார்வையில்தான் நடைபெற்றது. 1995-இல் தஞ்சையில் 8-ஆவது உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது, அவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்.

""நீங்கள் பல தமிழ் மாநாடுகளில் நேரடி பங்களிப்புச் செய்திருக்கிறீர்கள். பல மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். இதுவரை நீங்கள் கலந்துகொண்ட தமிழ் மாநாடுகளில், எல்லாவிதத்திலும் சிறப்பான மாநாடு என்று எதைக் கருதுகிறீர்கள்?''

அவர் யோசிப்பார், ஒப்புநோக்கிப் பார்ப்பார் என்றுதான் நான் நினைத்தேன். எனது கேள்வி முடிவதற்குள் அவரிடமிருந்து, தெளிவாகவும், சுருக்கமாகவும் பதில் வந்தது - ""கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!''

-------------------------------------------------

கோவையில் 2010-இல் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, என்னில் பழைய நினைவுகளை எழுப்பியது. கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த வேண்டும் என்று "தினமணி' குரலெழுப்பியதும், கட்டுரை வெளியான அதே நாளில், சில மணி நேரங்களில் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அறிவிப்பை வெளியிட்டதும் மறக்கக்கூடிய நிகழ்வுகளா? கம்பனுக்கு செம்மொழி மாநாட்டில் இடம் வேண்டும் என்று இந்திரா பார்த்தசாரதி கோரிக்கை வைத்ததும், அதை இதே பத்தியில் ("இந்த வாரம்' பகுதி) நான் வழிமொழிந்ததும் இப்போதும் பசுமை நினைவாகத் தொடர்கிறது.

ஒரு வரலாற்று ஆவணத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள் பூம்புகார் பதிப்பகத்தார். செம்மொழி மாநாட்டிலும், அது தொடர்பாகவும், அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி ஆற்றிய உரைகள், அந்த மாநாடு தொடர்பாக எழுதிய கடிதங்கள், அளித்த பேட்டிகள், இயற்றிய கவிதைகள் அனைத்தையும் தொகுத்து, "செம்மொழியே; எம் செந்தமிழே!' என்கிற பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு முன்னேற்பாடுகளின்போது எனக்கும், அன்றைய முதல்வர் கருணாநிதிக்கும் நடந்த கடிதப் பரிவர்த்தனை உள்ளிட்ட எந்தவொரு விஷயமும் விடுபட்டுவிடாமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

""தினமணி பத்திரிகை ஆசிரியர் திரு. கே.வைத்தியநாதனிடம் எனக்கு ஒரு தனி அன்பு உண்டு. அரசியல் கொள்கையிலே வேறுபட்ட கருத்துக்கள் அவருக்கு இருந்தாலும், தமிழ், தமிழர், இலங்கைத் தமிழர் போன்றவற்றில் அவர் மிகுந்த ஈடுபாடு உடையவர் என்பதை நான் அறிந்தவன். வாரந்தோறும் "கலாரசிகன்' என்ற புனைப் பெயரில் தினமணியில் அவர் எழுதும் இலக்கிய விமர்சனங்களை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். உலகத் தமிழ் மாநாட்டினை நடத்த வேண்டும் என்று என்போல் எண்ணம் கொண்டவர்களில் வைத்தியநாதனும் ஒருவர் என்பதை நான் நன்றாகவே அறிவேன்...'' என்று தொடங்கி அவர் "முரசொலி'யில் எழுதிய கடிதம் பதிவாகி இருக்கிறது. படித்ததும் நான் நெகிழ்ந்தேன்.

மு. கருணாநிதி என்கிற ஆளுமை மறைந்ததால் ஏற்பட்டிருக்கும் நிரப்பவே முடியாத வெற்றிடம் எத்தகையது என்பதை "செம்மொழியே; எம் செந்தமிழே!' தொகுப்பைப் படித்தபோது உணர்ந்தேன். "முரசொலி' பவளவிழா நிகழ்ச்சியில் நான் ஆற்றிய உரை நினைவுக்கு வருகிறது.

நான் சொன்னேன் - ""முதல்வராகத் தமிழகத்தில் பலர் இருந்திருக்கிறார்கள், இருக்கப் போகிறார்கள். ஆனால், தமிழை நேசிப்பவர்களில் முதல்வராக இருந்த ஒரே முதல்வர் திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியாக மட்டும்தான் இருக்க முடியும்!''.

அவர் எந்த அளவுக்குத் தமிழை நேசித்தார்? "செம்மொழியே; எம் செந்தமிழே!' படித்தால் தெரியும்.

 -------------------------------------------------

"கணையாழிக் கவிதைகள்' தொகுப்பைப் புரட்டிக் கொண்டிருந்தேன். சுகுமாரன் எழுதிய "நீரின்றி அமையாது' கவிதையிலிருந்து சில வரிகள். நீங்கள் ரசிப்பீர்கள் -

ஒவ்வொரு உறவுக்கும்
ஒவ்வொரு திரவம்
தாய்மைக்கு முலைப்பால்
சகோதரத்துக்கு இரத்தம்
காதலுக்கு உமிழ்நீர்
தோழமைக்கு வியர்வை
துரோகத்துக்குக் கண்ணீர்
ஏனெனில்
நீரின்றி அமையாது உறவு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com