இந்த வாரம் கலாரசிகன் - (17-04-2022)

ஆழ்மன உணர்வுகள் உண்மையிலும் உண்மை என்பதையும்,  பாசப் பிணைப்பின் வலிமையையும் ஒரு வாரமாக நான் உணர்கிறேன்.
இந்த வாரம் கலாரசிகன் - (17-04-2022)

ஆழ்மன உணர்வுகள் உண்மையிலும் உண்மை என்பதையும், பாசப் பிணைப்பின் வலிமையையும் ஒரு வாரமாக நான் உணர்கிறேன். கடந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பன்று தனது 90 ஆண்டு பூவுலக வாழ்க்கையை முடித்துக் கொண்ட என் தாயின் நினைவு எனது ஆழ்மனத்தில் நங்கூரம் பாய்ச்சி யிருந்திருக்க வேண்டும். ஒரு வாரமாக நான் நானாக இல்லை.

எதிலும் பிடிப்பில்லாத போக்கு; உள்ளே இருக்கவும் பிடிக்கவில்லை, வெளியே போகவும் மனமில்லை. தூக்கம் பிடிக்கவில்லை, தூக்கம் வந்தால் கனவு, கனவு வந்தால் விழிப்பு, மீண்டும் தூக்கமின்மை. சாப்பிடவும் பிடிக்கவில்லை, யாருடனும் பேசவும் பிடிக்கவில்லை. இனம்புரியாத ஒருவித கவலை என்னை ஆட்கொண்டிருக்கிறது.

நல்ல வேளையாக இறைவன் என்னை ஒரு பத்திரிகையாளனாக்கினான். அதனால் பிழைத்தேன். உக்ரைன், பாகிஸ்தான், இலங்கை என்று சர்வதேச பிரச்னைகள் குறித்துப் படிப்பதும், சிந்திப்பதும், ஒருவித திசை திருப்பமாக அமைந்தன. மாலை வந்தால் பத்திரிகைப் பணியில் கூடுவிட்டுக் கூடு பாயும் ஆசுவாசம்.

இன்னும்கூட நான் அதிலிருந்து முழுமையாக வெளிவந்து விட்டேன் என்று சொல்லிவிட முடியவில்லை. அடுத்த மாதம் 3-ஆம் தேதிதான் தமிழ் மாதக் கணக்குப்படி முதலாண்டு திதி முடிவடைகிறது. அதுவரை இப்படித்தான் இருக்கும் போலத் தோன்றுகிறது. அதன் விளைவாக சற்று உடல்நலக் குறைவும் சேர்ந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் கண்ணில் பட்ட புத்தகங்களை எல்லாம் படித்து கவனத் திருப்பம் செய்து கொண்டேன். பி.ஆர்.ராஜமய்யரின் "கமலாம்பாள் சரித்திர'த்தில் தொடங்கி, பம்மல் சம்பந்த முதலியாரின் "ஹாஸ்ய வியாசங்கள்', முல்லை முத்தையாவின் "அண்ணா உதிர்த்த முத்துக்கள்', கண்ணதாசன் அணிந்துரைகள் என்று நான் படித்த புத்தகங்கள் சுமார் பத்துக்கும் மேலே.

கமலாம்பாள் சரித்திரம் தமிழின் தொடக்ககால புதினங்களில் ஒன்று. அன்றைய வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் ஆவணமாகக்கூடச் சொல்லலாம். 1898-இல் எழுதப்பட்டு 1932-இல் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட புத்தகம். அதெல்லாம் இருக்கட்டும், ஆசிரியர் பி.ஆர்.ராஜம் ஐயரின் வாழ்க்கை அதைவிட பிரமிப்பானது.

தனது 26-ஆவது வயதில் மறைந்துவிட்டார் ராஜம் ஐயர். அந்தச் சிறு வயதிலேயே "பிரம்மவாதின்'. "பிரபுத்த பாரதா' பத்திரிகையின் ஆசிரியரானார். சுவாமி விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமான ராஜம் ஐயருக்கு, சுவாமிஜியே பல யோசனைகளை அளித்திருக்கிறார்.

எங்கள் தலைமுறையில் "கமலாம்பாள் சரித்திரம்' படிக்காதவர்களே இருந்திருக்க மாட்டார்கள். இன்றைய தலைமுறையினரில் ஒரு சிலரே படித்திருப்பார்கள். பொதுவாக எல்லா புத்தகங்களிலும் முன்னுரை, அணிந்துரைகள் முக்கியம் என்றால், கமலாம்பாள் சரித்திரத்தில் ஆசிரியரின் "பிற்கூற்று' முக்கியம். "யாக்கை நிலையாமை' குறித்து 26 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்த ராஜம் ஐயர் சுட்டிக் காட்டி முடித்திருப்பது, என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் பகுதி.

----------------------------------------

நான்தான் சொன்னேனே கண்ணில்பட்ட புத்தகங்களை எல்லாம் கடந்த ஒருவாரமாகப் படித்துக் கொண்டிருந்தேன் என்று. அப்படி என் கண்ணில் பட்ட சிறிய புத்தகம் ராதாகிருஷ்ண பிள்ளை எழுதிய "இலங்கையின் கதை'. எழுதிய ஆண்டு 1956.

இந்த எம்.ராதாகிருஷ்ண பிள்ளை யார் தெரியுமோ? அவர் ஒரு தேசியவாதி, சுதந்திரப் போராட்ட வீரர், பொதுவாழ்க்கையில் தூய்மைக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர், சென்னை மேயராக இருந்தவர். 1944-இல் அவர் மேயராக இருந்தபோதுதான் மாதவரம் பால் பண்ணையை நிறுவினார். அதனால் "மில்க் மேயர்' என்று அழைக்கப்பட்டவர். அவர் குறித்து ஒரு புத்தகமல்ல, பல புத்தகங்கள் எழுதலாம். கூடுதல் தகவல் - இந்தியன் வங்கியின் மேனாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் அவருடைய மகன்.

விவேகானந்தர், காந்திஜியில் தொடங்கி, கல்கி, தோழர் ஜீவா, கிருபானந்த வாரியார் என்று பலரும் அன்றைய இலங்கை குறித்து எழுதியிருக்கிறார்கள்; வியந்து புகழ்ந்திருக்கிறார்கள். இன்று இலங்கை மிகப்பெரிய பொருளாதாரத் தடுமாற்றத்தில் இருக்கும் வேளையில், இலங்கையின் கதையைப் படித்தேன். வளமான சொர்க்க புரி சீர்குலைந்து கிடக்கிறதே, யார் கண் பட்டதோ... யார் விட்ட சாபமோ..?

----------------------------------------

மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கக் களமிறங்கி இருக்கிறார்கள், திருவையாறு பாரதி அன்பர்கள். 1978-ஆம் ஆண்டு முதல் பாதை மாறாமல், தடுமாற்றம் எதுவும் இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கும் திருவையாறு பாரதி இயக்கத்தினர் பல சாதனைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பெருநகரங்களில் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத அற்புதங்களை அவர்கள் நிகழ்த்துகிறார்கள். பாரதி இலக்கியப் பயிலகம், நேசக்கரம், இலக்கியத் தடம், காந்தி- பாரதி இளைஞர் மன்றம், செல்லம்மாள் பாரதி மகளிர் மன்றம், பாரதி சிறுவர் மன்றம் என்று அவர்களது பணிகள் தொடர்கின்றன. ஆண்டுதோறும் பாரதியார் பிறந்த நாளில் நாங்கள் எட்டையபுரத்தில் சந்தித்துக் கொள்வதுண்டு. அவர்களது செயல்பாடுகள் குறித்துப் பலரும் சிலாகித்துச் சொல்வதுண்டு. அதைக் கேட்டு நான் மனம் பூரிப்பதுண்டு.

இப்போது அவர்கள் புதியதொரு முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். பாரதி பற்றாளர்களை ஒருங்கிணைத்து "காணி நிலம்' என்கிற பாரதியின் கனவை நனவாக்க முற்பட்டிருக்கிறார்கள். திருவையாறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 3,000 சதுரடியில் "காணி நில' வளாகம் அமைப்பதுதான் அந்த முயற்சி. மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டில், தமிழக அரசின் "நமக்கு நாமே' திட்டத்தின்கீழ் பாரதி இயக்கத்தின் அங்கமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் "பாரதி ஃபெளண்டேஷன்' இந்தத் திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறது.

பாரதி இலக்கியம் பேசிட ஒரு வளாகம்; பாரதியின் கவிதைகளைப் பாடி மகிழ்ந்திட ஒரு தோட்டம்; பாரதிக்குப் புகழ் சேர்க்கும் ஆய்வு நூலகம்; பாரதிக்கு ஓர் நினைவாலயமாக திருவையாறில் "காணி நிலம்'. திருவையாறு பாரதி ஃபெளண்டேஷன் - பாரதி இயக்கம் என்று அவர்களை, பாரதி அன்பர்களைத் தொடர்புகொள்ளக் கோருகிறார்கள் அதன் நிர்வாக அறங்காவலர் பிரேமசாயியும், செயலாளர் இரா. மோகனும். அவர்களை மற்றவர்கள் தொடர்பு கொள்வது இருக்கட்டும். அவர்களுக்கு உதவக் காத்திருக்கும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசை, அவர்களைத் தொடர்பு கொள்ளச் சொல்கிறேன் நான். பாரதியின் கனவை நனவாக்கத் துடிக்கும் உங்கள் கனவை நொடிப்பொழுதில் நனவாக்க அவரால் முடியும்.

----------------------------------------

"உடல்நிலை சரியில்லை, கவிதை அனுப்பித் தாருங்கள்' என்று வேண்டுகோள் விடுத்த சில நிமிடங்களில் பலரிடமிருந்தும் வந்து குவிந்தன நல்ல பல கவிதைகள். கவிஞர் ரவி சுப்பிரமணியம் அனுப்பித் தந்திருந்த கவிஞர் பாலாவின் கவிதை இது -

கடவுள் வணக்கம்
தமிழ் வணக்கம் சொல்லிக்
கூட்டம் போட்டது போதும்
செடி வணக்கம்
பூ வணக்கம் சொல்லி
கூட்டம் போடச் சொல்கின்றன
வாரா மழையும் வறளும் ஆறும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com