இந்த வாரம் கலாரசிகன் - (22-04-2022)

ஸ்ரீராம் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஏ.வி.எஸ். ராஜாவின் மறைவு குறித்து கடந்த வாரமே நான் பதிவு செய்திருக்க வேண்டும், விடுபட்டுவிட்டது.
இந்த வாரம் கலாரசிகன் - (22-04-2022)

ஸ்ரீராம் குழுமத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஏ.வி.எஸ். ராஜாவின் மறைவு குறித்து கடந்த வாரமே நான் பதிவு செய்திருக்க வேண்டும், விடுபட்டுவிட்டது. தமிழ்ப் புத்தாண்டு அன்று தனது 83-ஆவது வயதில் சென்னையில் காலமான ஏ.வி.எஸ். ராஜாவின் சமூக பங்களிப்பு குறித்து ஒரு புத்தகமேஎழுதலாம்.

இப்போது நடுத்தர வர்க்கத்தினர் பங்குச் சந்தை சூதாட்டத்தில் தங்களது சேமிப்புகளைக் கொட்டி வைப்பது போன்ற நிலைமை அரை நூற்றாண்டுக்கு முன் இருக்கவில்லை. அப்போது நடுத்தர வர்க்கத்துக்கு சமய சஞ்சீவியாகவும், ஆபத்பாந்தவனாகவும் இருந்தவை சீட்டு கம்பெனிகள்தான்.

சேமிப்பதற்கும், கடன் வாங்குவதற்கும் அதைவிடச் சுலபமான வழி இருக்கவில்லை. அப்போது தமிழகமெங்கும் ஆலமரம்போல கிளைகளைப் பரப்பி தனது சேவையைச் செய்த நிறுவனம் ஸ்ரீராம் சிட் ஃபண்ட்ஸ். அதை நிறுவியதிலும், அதற்கு ஆதரவைப் பெருக்கியதிலும் ஏ.வி.எஸ். ராஜாவின் பங்கு மிகவும் அதிகம்.

சென்னையிலுள்ள பல சங்கீத சபாக்களுக்கு ஸ்ரீராம் நிறுவனம் ஆதரவு தந்தது. ஆன்மிக நிகழ்ச்சிகளும், இலக்கியச் சொற்பொழிவுகளும், இசைக் கச்சேரிகளும் ஸ்ரீராம் நிறுவனத்தின் விளம்பரங்களையும், நன்கொடையையும் எதிர்பார்த்த காலம் அது. தமிழ் பருவ இதழ்களும், தினசரிகளும் அந்த நிறுவனத்தின் விளம்பரங்களால் பயனடைந்தன.

எத்தனையோ நடுத்தரக் குடும்பங்கள் மட்டுமல்ல, பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் ஏ.வி.எஸ்.ராஜாவுக்கும், அவர் சார்ந்த ஸ்ரீராம் சிட் ஃபண்ட்ஸ் நிறுவனத்துக்கும் கடமைப்பட்டிருக்கிறார்கள். மிகவும் இக்கட்டான மருத்துவத் தேவை ஏற்படும்போதும், பிள்ளைகளின் மேற்படிப்பைத் தொடரவும், பெண்களின் திருமணத்துக்கும், பத்திரிகையாளர்களைத் தேடிவந்து உதவிய பெரிய மனது ஏ.வி.எஸ்.ராஜாவுக்கு இருந்ததைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.

ஸ்ரீராம் நிறுவனம் தமிழுக்குச் செய்திருக்கும், செய்துவரும் மிகப்பெரிய பங்களிப்பு "அமுதசுரபி' மாத இதழ். தங்களது தவணை சீட்டு நிறுவனத்தின் மூலம் சந்தா சேர்த்து, வீடுதோறும் "அமுதசுரபி' மூலம் வாசிப்புப் பழக்கத்தைப் பரப்பிய அவர்களது தொண்டை யார்தான் மறந்துவிட முடியும்? எத்தனை எத்தனையோ எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் உருவாக்கியதிலும், முகம் தெரியாமல் இருந்த சாதனையாளர் பலரை சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தியதிலும் "அமுதசுரபி' ஆற்றியிருக்கும் பங்களிப்பு அபரிமிதமானது. அதன் பின்னால் மறைந்திருந்தவர் ஏ.வி.எஸ்.ராஜா.

ஏ.வி.எஸ். ராஜாவுடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இருந்தது என்று சொல்ல முடியாது. அண்ணாநகரிலிருந்த "சாவி' வார இதழ் அலுவலகத்துக்கு ஆசிரியரை சந்திக்க அவர் வரும்போது பார்த்திருக்கிறேன், பேசியதில்லை. வணக்கம் சொல்லும்போது புன்னகைப்பார். அந்த அளவுக்குத்தான் பரிச்சயம்.

நான் "நியூஸ் கிரைப்' செய்தி நிறுவனம் தொடங்கிய பிறகு, அண்ணாநகர் "டவர்' பூங்காவில் நடைப்பயிற்சிக்கு சிறிது காலம் சென்று கொண்டிருந்தேன். அப்போதுதான் அவருடன் பேசவும், பழகவும் வாய்ப்பு கிடைத்தது. நடைப்பயிற்சி முடிந்து சற்று நேரம் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து பத்திரிகை, சங்கீதம் தொடர்பான விஷயங்களைப் பேசிவிட்டுப் பிரிவோம். அதற்குப் பிறகு தொடர்பு முற்றிலுமாக அறுந்துவிட்டது. கடந்த 20 ஆண்டுகளாக அவரை நான் சந்திக்கவில்லை.

ஏ.வி.எஸ். ராஜாவின் மறைவுச் செய்தி கேட்டபோது நான் விசனப்பட்டதற்குக் காரணமுண்டு. இலக்கிய ஆர்வமுள்ள தொழிலதிபர் என்பதல்ல அதற்குக் காரணம். எழுத்தாளர்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் அக்கறையுள்ள புரவலராக அவர் இருந்தார் என்பதுதான் உண்மையான காரணம்.

அவரால் பயன் பெற்ற பலர் மறைந்து விட்டார்கள். அவர்களது வாரிசுகளுக்கு ஏ.வி.எஸ். ராஜா யார் என்பதுகூடத் தெரிந்திருக்காது. அதனால் என்ன? எதையும் எதிர்பார்த்து மழை பொழிவதில்லை!

--------------------------------------------

கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு மிக அதிகமான மன உளைச்சலுக்கும், அழுத்தத்திற்கும் ஆளாகி இருப்பது குழந்தைகள்தான். அதிலும் குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள குழந்தைகள். அவர்களை சரியான முறையில் கண்காணித்து, அரவணைத்து, புரிதலுடன் அணுகாமல் போனால், மிகப்பெரிய சமூக பிரச்னைகளை வருங்காலம் எதிர்கொள்ள நேரும்.

சில நாள்களுக்கு முன்னால் சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையின் மனநலப் பிரிவின் துறைத் தலைவராக இருக்கும் டாக்டர் பி.பி.கண்ணனை சந்தித்தபோது அவர் சொன்ன பல தகவல்கள் என்னை ஆச்சரியப்படுத்தின. தமிழ் மொழிக்கும் மூளைக்கும் இடையே இருக்கும் புரிதல் குறித்து அவர் ஆராய்ச்சியே செய்திருக்கிறார். குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தாய்மொழிக் கல்வியின் இன்றியமையாமை குறித்து அவர் மருத்துவ அறிவியல் ரீதியாகப் பல தகவல்களைத் தெரிவித்தார்.

குழந்தைகள் மனநலம் சார்ந்து தமிழில் வெளிவந்திருக்கும் ஒரு சில நூல்களில் டாக்டர் பி.பி.கண்ணன் எழுதிய "மருத்துவர் பார்வையில் குழந்தைகள் மனநலம்' குறிப்பிடத்தக்கது. அந்தப் புத்தகத்தை எனக்கு அவர் தந்தபோது, இத்துணை விஷயங்கள் அதில் அடங்கியிருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

மனநலம் என்பது உடல் நலம் போல பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. மூளையில் ஏற்படும் பலவிதமான சமூகத் தாக்கங்கள் மற்றும் மரபணு வெளிப்படுத்தும் வேதியியல் மாற்றங்கள், அதனால் உண்டாகின்ற மனநல ஆரோக்கியம், கற்றுக் கொள்ளும் திறமை, செயல், கோளாறுகள் குறித்து சாமானியர்களுக்கும் புரியும் விதத்தில் எழுதியிருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு. ஆசிரியர்களும், பெற்றோரும் பயன்பெறும் வகையில் எழுதப்பட்டிருப்பது அதைவிடச் சிறப்பு.

குழந்தைகளை நெறிப்படுத்துவதில் பெற்றோரின் அணுகுமுறை, குழந்தைகளின் அறிவுத்திறன் குறைபாடு, நமது தேர்வு முறை, மதிப்பெண்ணும் அறிவுத் திறனும், நினைவுத் திறனை மேம்படுத்தும் வழிமுறைகள், பதின்பருவத்தின் இரு துருவ மனநிலை, முரண்பட்ட பாலியல் ஈர்ப்பு என்று குழந்தைகள் சார்ந்த அனைத்து பிரச்னைகளையும் இந்தப் புத்தகத்தில் அலசியிருக்கிறார் என்பது மட்டுமல்ல, அதற்கான தீர்வையும் வழங்குகிறார். பருவ இதழ் ஒன்றில் தொடராக வெளிவந்த கட்டுரைகள் என்பதால், சாமானியர்களுக்கும் புரியும் விதத்திலும், எளிய நடையிலும் எழுதப்பட்டிருக்கும் புத்தகம் இது.

பள்ளிக் கல்விக்கு ஏற்ற மொழி எந்த மொழி, மொழி வளர்ச்சி என்பது எப்படி நடக்கிறது என்பன குறித்த கட்டுரை குறிப்பிடத்தக்கது. அனைத்துக் குழந்தைகளுக்கும் "ஒரே மொழி, ஒரே விதமான கல்வி' என்பது ஏற்புடையதல்ல என்பது மனித மூளையை "ஹார்ட்வேர்' ஆகவும், மொழியை "சாஃப்ட்வேர்' ஆகவும் கருதும் டாக்டர் பி.பி.கண்ணனின் தேர்ந்த முடிவு.

கவிஞர் கூடல் தாரிகின் நான்காவது கவிதைத் தொகுப்பு "ஆகாயத் திணை' புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது. அதிலிருந்த கவிதை இது.
பெருத்த அழுகைச்
சத்தங்களுக்கிடையில்
குடும்பத் தலைவனொருவன்
நிரந்தர விடை பெறுகிறான்
இரைதேடும் பொருட்டு
மரத்திடமிருந்து
விடைபெறும் பறவை
தன்னையும் அறியாமல்
உதிர்த்துச் செல்கிறது
இறகினை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com