கவியரசரும் தமிழரசரும்

"தமிழ்மொழியைப் புகழில் ஏற்றும் கவியரசர்' தான் என்பதைத் தானும் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்த்தியவர் மகாகவி பாரதியார்.
கவியரசரும் தமிழரசரும்

"தமிழ்மொழியைப் புகழில் ஏற்றும் கவியரசர்' தான் என்பதைத் தானும் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்த்தியவர் மகாகவி பாரதியார். அத்தகு பெருமைக்குரிய அவர், தான் வாழ்ந்த காலத்தில் ஒரு தமிழறிஞரைத் "தற்காலத்திலே தமிழரசராக விளங்குபவர்' எனக் கொண்டாடி மகிழ்ந்தார். அப்படிப் பாரதியால் தமிழரசராகக் கொண்டாடப்பட்டவர் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர்.

சி.வை. தாமோதரம் பிள்ளையிலிருந்து தொடங்கும் பழந்தமிழ் மீட்சி வரலாற்றின் முன்னோடியாக - முதன்மை முகமாக -  விளங்குபவர் உ.வே.சா. புதுத்தமிழ் வரலாற்றின் முன்னோடியாக, முகவரியாக, முகமாகத் திகழ்பவர் பாரதி.

இந்த இரண்டு பெருமக்களையும் ஒன்றுபடுத்திப் பார்ப்பவர்களும் வேறுபடுத்திப் பார்ப்பவர்களும் தமிழ்ச்சூழலில் உண்டு. இருவருக்குமான உறவை விவாதப் பொருளாக்கி வினாக்களை எழுப்பியவர்களும் உண்டு. இருவரையும் ஒப்பிட்டுப்பார்த்து உரைத்தவர்களுள் முன்னோடி மாபெரும் தமிழறிஞர் வையாபுரிப்பிள்ளை.

"ஐயரவர்கள் பண்டைத் தமிழிலக்கியத்தின் பிரதிநிதி. தற்காலத் தமிழிலக்கியத்தின் பிரதிநிதி பாரதியார்.  பாரதியார் சென்னை மாகாணத்தின் தென்கோடியிலுள்ள திருநெல்வேலியைச் சார்ந்தவர்கள்; ஐயரவர்கள் இந்த மாகாணத்தின் வடபகுதியிலுள்ளவர்கள். பாரதியார் நம் தமிழன்னையின் உக்ர மூர்த்தமாகவுள்ளவர்; ஐயரவர்கள் நம் அன்னையின் சாந்த மூர்த்தமாகவுள்ளவர். 

பாரதியாரின் சொற்கள், தேசபக்தியும் தமிழ்ப்பற்றும் கொழுந்து விட்டெரியுமாறு, கேட்போரின் மனத்திலே அளவற்ற பக்திக் கனலை அள்ளியெறிந்து, அம்மனத்தைப் பற்றியெரியச் செய்கின்றன; ஐயரவர்களின் சொற்கள் ஆழ்ந்த தமிழறிவினால் பரிபக்குவமெய்திக் குளிர்ந்த நிலவொளியை வீசுகின்றன. பாரதியார் வாழ்க்கைப் போராட்டத்தில் துன்புற்று நைந்து வருந்தியவர்; ஐயரவர்கள் இவ்வகைப் போராட்டத்தால் துன்புறாது வாழ்ந்தமை நமது பாக்கியமே. பாரதியார் பெருங்கவிஞர்; ஐயரவர்கள் பெரும்புலவர்' என்பது வையாபுரிப்பிள்ளையின் ஒப்பீட்டுச் சித்திரம்.

தமிழின் பழைமைக்கும் புதுமைக்கும் மாபெரும் பிரதிநிதிகளாகத் திகழ்ந்த இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். குறிப்பிட்ட காலம் சென்னையில் திருவல்லிக்கேணியிலேயே வசித்தவர்கள். ஒருவரோடொருவர் நன்கு பழகியவர்கள். இருந்தாலும் இருவருக்குமிடையே மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி அப்போது இருந்தது என்பது உண்மை. உ.வே.சா.வைப் பாரதி சந்தித்த காலத்தில் உ.வே.சா.விற்கு வயது 50. பாரதிக்கு வயது 23. சரிபாதி வயதுகூட இல்லை பாரதிக்கு. தந்தை மகன் போன்ற வயதுநிலை. 

பாரதியின் எந்த இலக்கியமும் தோன்றாத காலம் அது. எண்ணிக்கையில் குறைவான பாடல்களே எழுதியிருந்த நிலை. "சுதேசமித்திர'னில்  உதவி ஆசிரியர், "சக்ரவர்த்தினி'யில் ஆசிரியர் என்னும் இதழியற் செயற்பாடுகளும் சுதேசிய முயற்சிகள், விடுதலைப் போராட்ட முயற்சிகள் என்று ஈடுபட்ட தேசியச் செயல்பாடுகளும்தாம் அப்போதைய பாரதியின் ஆளுமை. 

ஆனால் உ.வே.சா.விற்கோ ஆங்கிலேய அரசாங்கத்தின் "மஹாமஹோபாத்தியாய' பட்டமே பெற்றுவிட்ட உச்சநிலை. "சிந்தாமணி', "சிலப்பதிகாரம்', "பத்துப்பாட்டு', "புறநானூறு', "ஐங்குறுநூறு', "பதிற்றுப்பத்து' ஆகியவற்றையெல்லாம் பதிப்பித்து வெளியிட்டுத் தமிழுலகம் முழுதும் அங்கீகரிக்கப்பட்டிருந்த பெருநிலை. 

இந்த இடைவெளிகளையும் தாண்டி அரும்பும் பருவத்திலேயே பாரதியை அடையாளம் கண்டுகொண்டுவிட்டார் உ.வே.சா. இதனைப் பலரும் உணர்வதில்லை. உ.வே.சா. வீற்றிருந்த சென்னை இராசதானிக் கல்லூரியின் (இன்றைய மாநிலக் கல்லூரி) மாணவர் தமிழ்ச்சங்கத்திலே மீண்டும் மீண்டும் பாரதியைச் சொற்பொழிவாற்றவும் மாணவர் ஒருவரின் உரைக்குத் தலைமைதாங்கவும் செய்திருக்கின்றார். 

1905-இல் "கருணை' என்னும் தலைப்பில் சொற்பொழிவு, பட்டினத்தார் குறித்த சொற்பொழிவு, திருவள்ளுவர் குறித்த மாணவரின் உரைக்குத் தலைமைதாங்கல் என்றெல்லாம் பாரதியைத் தான் வீற்றிருந்த கல்லூரியிலே பேசவைத்திருக்கின்றார் உ.வே.சா. புலமையால் ஏற்பட்ட மதிப்பும் பழக்கத்தால் ஏற்பட்ட அன்பும்தான் பாரதியை "மஹாமஹோபாத்தியாய' பட்டம் பெற்ற உ.வே.சா.வை இராசதானிக் கல்லூரி விழாவில் "பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய்' என்று வாழ்த்திக் கவிதைபாடச் செய்கின்றன. இந்த நிகழ்வைக் குறித்துச் சிலர் "பாரதியை நிகழ்ச்சியில் பாட அனுமதிக்கவில்லை' என ஒரு சர்ச்சையை ஏற்படுத்திவிட்டனர்.

"பட்டம் அளித்ததைக் குறித்து அரசாங்கக் கல்லூரியில் நிகழ்ந்த பாராட்டுக் கூட்டத்திற்குப் பாரதியாரும் சென்றிருந்தார். ஆனால் இவர் இயற்றிய பாடல்களை இவர் படிப்பதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இவர் அரசாங்க விரோதி; வர்ணாச்சிரம ஒழுக்கத்தைத் தூவென்று தள்ளியவர். 

எனவே சாமிநாத ஐயர் பாரதியாரைச் சந்தித்துப் பழகுவதற்குத் துணிவு கொள்ளவில்லையென்றே தோன்றுகிறது. இவரையும், இவருடைய கொள்கைகளையும், இவரது தமிழையும்கூட, ஐயர் மதித்திருந்தனர் என்பதற்குச் சான்று யாதும் இல்லை' என வையாபுரிப்பிள்ளை எழுதியதை உண்மை அறியாமல் சிலர் வழிமொழிந்து இக்கருத்தைத் தமிழுலகில் பரவலாக்கியும்விட்டனர்.  

பாரதியைப் பாட அனுமதிக்கவில்லை, பொதுவாகவும்  அங்கீகரிக்கவில்லை என உ.வே.சா.மீது குற்றச்சாட்டைப் பரப்பிவிட்டனர். இந்த  நிலைப்பாட்டில் கா. சிவத்தம்பி தொடங்கிப் பலரும் தமது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.  ஆனால் இவை எதுவும் உண்மையில்லை. இந்த நிகழ்ச்சி நடந்த மறுநாளுக்கு மறுநாள் "சுதேசமித்திர'னில் பாரதி பாடல் வெளிவந்துள்ளமை அண்மையில் என்னால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அப்பாடலின் தொடக்கத்தில், "சென்னை பிரஸிடென்ஸி காலேஜில், மிஸ்டர் ஸி. சுப்பிரமணிய பாரதி, மஹாமஹோபாத்தியாய சாமிநாதையரைப்பற்றிச் சொல்லியன' என்னும் குறிப்பு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் தன் பல எழுத்துகளில் உ.வே.சா.வைப் பாரதி உச்சமாகவே கொண்டாடியிருக்கின்றார். பாட அனுமதிக்காமல் இருந்திருந்தால், பாடியதாக உள்ள பதிவும், தொடர்ந்த பாராட்டு மொழிகளும் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை. 

இதையெல்லாம்விடப் பாரதியின் கையெழுத்தில் சாதாரணக் காகிதத்தில் அமைந்த கவிதையை வாழ்நாளெல்லாம் பொக்கிஷம் போலப் போற்றிப் பாதுகாத்து வைத்திருந்திருக்கின்றார் உ.வே.சா. தவறான கருத்துகள் தமிழுலகில் உலவுவது புதிதல்லவே!

இந்த நிகழ்ச்சிக்குப்பின்பு ஒருமுறை பாரதி பழந்தமிழ் இலக்கியங்களை நாம் கற்றுக் களிப்பது உ.வே.சா.வின் கருணையினால் என்பதை எழுதியுள்ளார். "உ.வே. சாமிநாத ஐயர் மேற்கூறப்பட்ட பெருந்தருமத்தை நன்கு புரிந்தவர். "சிந்தாமணி', "சிலப்பதிகாரம்', "மணிமேகலை' முதலிய பழந்தமிழ் நூல்களை இன்று நம்மவர் கற்றுக் களிப்பது சாமிநாத ஐயருடைய கருணை மிகுதியாலல்லவோ' என்று அறிவினா எழுப்பிப் போற்றியிருந்தார். உ.வே.சா.வின் சொற்பொழிவைக் கேட்டதனால் எழுந்த உணர்வையெல்லாம் பலபடப் பாரதி எழுதியிருக்கின்றார். 

பாரதி புதுவையில் வாழ்ந்தபோதுகூட ஒருமுறை இருவரும் சந்தித்திருக்கின்றனர். சங்கர ஜயந்தி விழாவுக்குத் தலைமைதாங்கப் புதுச்சேரி வந்திருந்த உ.வே.சா. "சிலப்பதிகார'த்தைப் பற்றி அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கின்றார். அங்கே உ.வே.சா.வைச் சந்தித்த பாரதி "நான் புதுமைப் புலவன். நீங்கள் பழம்புலவர்களை எல்லாம் வாழச்செய்கிறீர்கள். புலவர் பரம்பரை அழியாமல் காப்பவன் நான். நீங்கள் பழம்புலவர்களைத் தமிழ்மக்கள் மறவாமலிருக்கச் செய்கிறீர்கள்' என்று சொல்லி வாழ்த்தியிருக்கின்றார். 

இப்படியெல்லாம் வாழ்ந்த காலத்தில் இருவருக்குமான அன்பும் நெருக்கமும் மதிப்பும் செழுமைகொண்டு திகழ்ந்திருக்கின்றன.

பாரதியின் மறைவுக்குப்பின் மெல்ல மெல்ல அவரது  படைப்புகளெல்லாம் வெளிவருகின்றன. பாரதியின் முழு ஆளுமை வெளிப்படத் தொடங்குகின்றது. வாழ்ந்த காலத்தில் படைப்புகளின் வாயிலாக ஓரளவே வெளிப்பட்டிருந்த அவரது முழுமையைத் தமிழுலகம் அறியத் தலைப்படுகின்றது. முன்பே அடையாளம் கண்டுகொண்டிருந்த உ.வே.சா.வும் முழுமை அறிந்து பாரதியின் தனிப்பெரும் இடத்தை மீண்டும் மீண்டும் போற்றியிருக்கின்றார். தன்னுடைய பல்வேறு எழுத்துகளில், சொற்பொழிவுகளில் பாரதியின் உயர்நிலையை எடுத்துரைத்திருக்கின்றார். இவையெல்லாம் இன்னும் முழுமையாக ஒருசேரத் தொகுத்து நோக்கப்பெறவில்லை. 

1936-இல் சென்னையில்  நிகழ்ந்த அகில இந்திய காங்கிரசின் பொன்விழாவில் பாரதியின் படம் திறக்கப்பட்டபோது ஆற்றிய சொற்பொழிவில் உ.வே.சா. பாரதியின் வரலாற்றை எடுத்துரைத்திருக்கின்றார். அவரது கவிதைகளின் இயல்பையும் ஏற்றத்தையும் விதந்து பேசியிருக்கின்றார். 

சங்கப் புலவர்களின் கவிதைகளின் தன்மையை ஒத்ததாகப் பாரதியின் கவிதைகள் உள்ளன என்பதை "இவருடைய கவிதைகள் ஸ்வபாவோக்தியென்னும் தன்மை நவிற்சி அணியை உடையவை. பழைய காலத்தில் இருந்த சங்கப் புலவர்கள் பாடல்களில் தன்மை நவிற்சிதான் காணப்படும்' என்று குறிப்பிட்டிருக்கின்றார். 

மேலும் பாரதி கவிதைகளின் பாடுபொருளைக் குறித்து, "பாரதியாருடைய பாட்டுக்களில் தெய்வ பக்தியும் தேச பக்தியும் ததும்புகின்றன. தனித்தனியாக உள்ள பாட்டுக்கள் இயற்கைப் பொருள்களின் அழகை விரித்தும் நீதிகளைப் புகட்டியும், உயர்ந்த கருத்துக்களைப் புலப்படுத்தியும் விளங்குகின்றன' என எடுத்துரைத்திருக்கின்றார்.

பாரதியின் கவிதைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இன்றும்கூடப் பலர் அவரது உரைநடைகளுக்கு அளிப்பதில்லை. அவரது  உரைநடையின் சிறப்பை உணர்வதில்லை. ஆனால் உ.வே.சா. பாரதியின் உரைநடையைக் குறித்துக் குறிப்பிடும்போது, "இவருடைய வசனத்தைப் பற்றிச் சில சொல்ல விரும்புகிறேன். பாட்டைக் காட்டிலும் வசனத்திற்குப் பெருமை உண்டாயிருப்
பதன் காரணம் அது பாட்டை விட எளிதில் விளங்குவதனால்தான். பாரதியாருடைய பாட்டும் எளிய நடையுடையது; வசனமும் எளிய நடையுடையது. 

வருத்தமின்றிப் பொருளைப் புலப்படுத்தும் நடைதான் சிறந்தது. பாரதியாருடைய வசனம் சிறு வாக்கியங்களால் அமைந்தது; அர்த்த புஷ்டியுடையது' என்று பாரதியின் உரைநடைப் படைப்புகள் பெரிய அளவில் வெளிவந்திராத காலத்திலேயே எழுதிப் போற்றியிருக்கின்றார்.

பாரதி தமிழகம் முழுதும் பல கூட்டங்களில் பேசியிருக்கின்றார் என்பதை நாம் அறிவோம். அவருடைய சொற்பொழிவுகளின் எழுத்து வடிவத்தையும் ஓரளவு அறிவோம். ஆனால்   ஒலிப்பதிவுகள் எதற்கும் வாய்ப்பில்லாத சூழலில் அவருடைய பேச்சை நாம் கேட்டதில்லை. 

பாரதியின் பேச்சுத்திறம் எப்படி இருந்திருக்கும்? நேரடியாகப் பல பேச்சுக்களைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்ற உ.வே.சா. "பாரதியார் அழகாகப்  பேசும் ஆற்றல் வாய்ந்தவர்' என்று எடுத்துச் சொல்லியிருக்கின்றார். பாரதியின் பாடல்கள் பாடும் திறத்தையும் "இவர் சங்கீதத்திலும் பழக்கம் உடையவர்' என்று எடுத்துரைத்திருக்கின்றார். 

பாரதியின் பன்மொழிப் பயிற்சி பற்றியும் அதன் விளைவாக அவரது கவிதைகள் பெற்ற புதுமைகளையும்கூடச் சுட்டிக்காட்டியிருக்கின்றார். தமிழகம் முழுதும் அவரது பாடல்களை எல்லோரும் பாடி மகிழ்வதனையும் அயல் நாடுகளாகிய இலங்கை, பர்மா முதலியவற்றிலும் அவரது பாடல்கள் பாடப்படுவதனையும் குறிப்பிட்டிருக்கின்றார். வெளிநாடுகளில் உள்ள சிலர் பாரதியைப் பற்றித் தான் எழுத வேண்டுமெனக் கடிதங்கள் எழுதிய நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்கின்றார். 

தனக்கும் அவருக்குமான நெருக்கமான பழக்கத்தையும் பகிர்ந்துகொண்டிருக்கின்றார்.

"சென்னையில் இவர் இருந்த காலத்தில், நான் இவரோடு பலமுறை பழகியிருக்கிறேன். பிரசிடென்ஸி காலேஜில் வாரந்தோறும் நடைபெறும் தமிழ்ச்சங்கக் கூட்டத்துக்கு வருவார்; பேசுவார்; புதிய பாட்டுக்களைப் பாடுவார். வருஷ பூர்த்திக் கொண்டாட்டங்களில் புதிய செய்யுட்கள் செய்து வாசிப்பார்' என்று ஒருமுறை எழுதியவர், இன்னொருமுறை "எனக்கு மிக்க பழக்கமுள்ளவர்' என்று மீண்டும் எழுதியுமிருக்கின்றார்.

பாரதிக்கு ஏற்பட்டிருக்கும் அழியாத பெருமைக்குக் காரணம் அவர் உண்மையான தேசபக்தியுடன் பாடல்கள் பாடியதுதான் என்பது உ.வே.சா.வின் மதிப்பீடு. பாரதியின் கவிதைகள் எத்தகையன என்பதற்கு அழகான ஓர் எடுத்துக்காட்டுவாயிலாக உ.வே.சா. விளக்கம் தந்திருக்கின்றார். 

""கவிதைகளின் தன்மை ஐந்து வகைப்படும். "நாளிகேர பாகம்' என்னும் தேங்காயைப் போன்ற கவிதைகள் பயன்கொள்ளக் கடினமானவை. "இக்ஷý பாகம்' என்னும் கரும்பைப் போன்ற கவிதைகள் அடுத்த வகையின. "கதலீ பாகம்' என்னும் வாழைப்பழத்தைப் போலவும் "திராட்சா பாகம்' என்னும் திராட்சைப்பழத்தைப் போலவும் தன்மைகொண்ட கவிதைகள் பயன்கொள்ள ஏற்றவை. இருந்தாலும் முறையே தோலையும் விதையையும் நீக்க வேண்டும். 

எல்லாவற்றையும்விட உயர்ந்த கவிதைவகை "க்ஷீர பாகம்' என்று சொல்லப்படும் பாலைப் போன்றது. பாரதியின் கவிதைகள் திராட்சா பாகமாகவும் க்ஷீர பாகமாகவும் விளங்குவன. குழந்தை முதல் யாவரும் உண்பதற்குரியதாகவும், இனிமை தருவதாகவும் உடலுக்கும் அறிவுக்கும் பயன்தருவதாகவும் இருக்கும் பாலைப் போல் இருப்பது பாரதியாருடைய கவிதைகள்'' என்று அவரது கவிதைகளின் உயர்வை உணர்த்தும் உ.வே.சா., "இவருடைய புகழ் தமிழ்நாட்டின் புகழாகும்' என்று முரசறைகிறார்.

இதற்குமேல் பாரதியின் கவிதைகளைப் பற்றி எவர் என்ன சொல்லிவிட முடியும்?

1936-ஆம் ஆண்டு விடுதலைப் போராட்ட வீரர் ஆக்கூர் அனந்தாச்சாரி "கவிச்சக்கரவர்த்தி சுப்ரமண்ய பாரதி சரிதம்' என்று பாரதி வாழ்க்கை வரலாற்று நூலை எழுதி வெளியிட்டார். "கவிச்சக்கரவர்த்தி' என்னும் பாரதியின் ஸ்தானத்தை அங்கீகரிப்பது போல உ.வே.சா. அதற்கொரு முகவுரை வரைந்திருந்தார். "எட்டயபுரம் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியாரை உலகம் நன்கறியும். பாரதி என்றால் அவரே என்று குறிப்பிடும் பெருமை வாய்ந்தவர் அவர்' என்று அதில் அவர் எழுதியிருந்தார். 

உ.வே.சா.வுக்கும் பாரதிக்குமான தொடர்பு வரலாறு என்பது இரு  தமிழாளுமைகளின் தொடர்பு வரலாறு மட்டுமில்லை; பழந்தமிழ் புதுத்தமிழை அங்கீகரித்த வரலாறு; பெருமைப்படுத்திய வரலாறு. இரண்டுக்கும் இடைவெளிகளில்லை என்பதைக் காட்டிய வரலாறு. "கவியரசர்' என்று தன்னை உணர்ந்தவரைக் "கவிச்சக்கரவர்த்தி' என்று தரணி உணர அங்கீகரித்த வரலாறு. 

கட்டுரையாளர்:

தலைவர், தமிழ்மொழித் துறை,சென்னைப் பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com