வாரியார் சுவாமியின் நகைச்சுவை!
By -எஸ். சாய்ராமன் | Published On : 27th February 2022 04:59 PM | Last Updated : 27th February 2022 04:59 PM | அ+அ அ- |

திருமுருக கிருபானந்த வாரியார், தாம் எழுதிய "கம்பன் கவிநயம்' என்னும் நூலை எல்லோரும் எளிதில் படித்து இன்புறும் பொருட்டு உரைநடையாகவும், முக்கியமான பாடல்களைக் கவிநயங்களுடன் எழுதியுள்ளதாக தமது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஒரு பாடலுக்கு அவர் நகைச்சுவையாகத் தரும் விளக்கம் வருமாறு:
அயோத்தியா காண்டம் மந்திரப் படலத்தில் உள்ள பின்வரும் பாடலுக்கு அவர் எழுதிய முன்னுரை (பூர்வ பீடிகை) முதன்முறை படிக்கும்போது தெளிவாகவில்லை. இரண்டாவது முறை கருத்தூன்றிப் படித்தபோதுதான் விளங்கியது.
தசரதச் சக்கரவர்த்தி இராமனுக்குத் திருமுடி சூட்டுவதற்காகத் தமது குலகுருவாகிய வசிட்ட முனிவரிடம் அமைச்சர்களையும் கூட்டி ஆலோசிக்கின்றார். தசரதர் சொற்படி சுமந்திரர் இராமனை அரசவைக்கு அழைத்து வந்தார்; தசரதர் மகிழ்ச்சி மீதூர இராமனைத் தழுவியதைக் கம்பர் தமக்கே உரிய கவி நயத்துடன் வர்ணிக்கின்றார்.
"நலங்கொள் மைந்தனைத் தழுவினன் என்பதென் நளிநீர்
நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்
விலங்கல் அன்னதிண் தோளையும், மெய்த்திரு இருக்கும்
அலங்கல் மார்பையும் தனதுதோள் மார்பு கொண்டு அளந்தான்' (266)
"நிலையிடல்' - அளவிடல். இந்தப் பாடலின் நயம் என்று வாரியார் சுவாமிகள் குறிப்பிடும் செய்தி: தான் பிறந்த குடும்பத்தைக் காப்பவன் மகன். இராமர் பல குடும்பங்களைக் காக்கும் திறன் உடையவர். ஆதலின் மைந்தன் என்று இராமனைச் சிறப்பித்துக் கூறினர். மகனைத் தந்தையார் தழுவினால் மகனுடைய சட்டைப் பையில் இருக்கின்ற அக்கினி காரியம் செய்கின்ற பெட்டிகள் தந்தையின் மார்பில் உறுத்தும். அதனால், "நலங்கொள் மைந்தனை' என்று கம்ப நாடர் நயமாகக் கூறினார். தமது தோளில் உள்ள பூமி பாரத்தை மகனுடைய தோளில் இறக்கி வைக்க எண்ணியதால் மகனுடைய தோளையும் மார்பையும் தமது தோளினால் அளந்தார் என்று கவிச்சக்கரவர்த்தி மிக்க அழகாகக் கூறினார். இவ்வாறு நயம் கூறுகின்ற ஆற்றல் புவிச்சக்கரவர்த்திகள் போற்றும் கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பருக்கே உரியது'' என்கிறார் வாரியார் சுவாமிகள்.
மேலே உள்ளதை இரண்டாவது முறை படித்த பின்பு நன்கு விளங்கிய செய்தி: "அக்கினி காரியம் செய்கின்ற பெட்டிகள்' - சிகரெட் பெட்டிகள்.