சுவடிகளில் உண்டு காலச்சுவடு!

"தற்போது அச்சாகும் நூல்களில் எந்த ஆண்டு, எந்த மாதம் என்னும் குறிப்பு இடம்பெறுகிறது.  பழைய ஓலைச் சுவடிகளில் அவ்வாறான குறிப்பேதும் இல்லை'  என்று சிலர் குறை கூறுகின்றனர். 
சுவடிகளில் உண்டு காலச்சுவடு!

"தற்போது அச்சாகும் நூல்களில் எந்த ஆண்டு, எந்த மாதம் என்னும் குறிப்பு இடம்பெறுகிறது.  பழைய ஓலைச் சுவடிகளில் அவ்வாறான குறிப்பேதும் இல்லை'  என்று சிலர் குறை கூறுகின்றனர். 

இது பாதிக்கிணற்றைத் தாண்டிய செய்தியே!  "தமிழ்த் தாத்தா' உ.வே.
சாமிநாதையர் ஓலைச்சுவடிகளிலிருந்து பதிப்பித்த சில  நூல்களில் - சுவடிகளின் காலச்சுவடுகளைக் காணமுடிகிறது.

"தமிழ்விடு தூது' முதற்பதிப்பு (1930) முகவுரையின் இறுதியில் அந்நூலின் பதிப்பாசிரியரான உ.வே.சாமிநாதையர் பின்வருமாறு எழுதியுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது. 

""அந்த ஏட்டுச்சுவடியின் (தமிழ்விடுதூது) இறுதியில் ""பச்சைமுத்து உபாத்தியாயர் லிகிதம் சீரணமாயிருந்து கரவருஷம் மாசி மீ 6உ (மாசி மாதம் 6-ஆம் தேதி) புதவாரமும் சதுர்த்தசியும் கூடிய திருவோண நட்சத்திரத்தில் மேற்படியார் பேரன் சுந்தரேசன் லிகிதம் நிறைவேறிற்று'' என்று எழுதப்பட்டுள்ளது.

ஐயனாரிதனார் இயற்றிய "புறப்பொருள் வெண்பா மாலை'யைச் சாமுண்டி தேவநாயகர் எழுதிய உரையுடன் முதன்முறையாக உ.வே.சாமிநாதையர் முறையே 1895, 1915, 1924, 1934 ஆகிய ஆண்டுகளில் பதிப்பித்தார். அவர் இந்நூலின் நான்காவது பதிப்பின் (1934) முகவுரையின் இறுதியில் கீழ்க்காணுமாறு எழுதியுள்ளார்:

""எனக்குக் கிடைத்த ஏட்டுப் பிரதிகளுள் திருநெல்வேலி ஹிந்து காலேஜ் தமிழ்ப் பண்டிதராகவிருந்த ஸ்ரீ சுவர்ணம் பிள்ளையவர்கள் தந்த பிரதியிலிருந்து வேறு பிரதிகளில் உரையில்லாத சில பகுதிகட்குரிய உரை கிடைத்தது. ஆழ்வார் திருநகரி ஸ்ரீதே.லட்சுமண கவிராயரவர்கள் வீட்டுப்பிரதியொன்றின் இறுதியில் 803-ஆம் வருஷம் ஆவணி மீ (ஆவணி மாதம்) 11-ம் உ (11 - ஆம் தேதி) வெண்பாமாலை எழுதி முடிந்தது'' என்பதும், ஆழ்வார் திருநகரி பிரதிகளில் ஒவ்வொன்றன் முதலிலும்,

"தேன்றா மகிழ்த்தொடையலு மவுலியுந்திருக்கிளர் குழைக்காதும் 
கானறாமலர்த் திருமுகச் சோதியும் கயிரவத் துவர்யாவும்
மோன மாகிய வடிவமு மார்வமு முத்திரைத் திருக்கையும்
ஞான தேசிகள் சரணதா மரையுமென் னயனமவிட்ட கலாவே'
என்னும் அருமைச் செய்யுளும், வேறொரு பிரதியில், 
சீயர் திருவடிகளே சரணம்; வைத்தியநாத குருவே நம: 
பெரிய திருவடி குருவே நம: 877-ஆம் ஆண்டு மார்கழி
சதுர்த்தசியும் புதன்கிழமையும் உரோகிணியும் பெற்ற
சுபதினத்தில் இரத்தின கவிராசர் வெண்பாமாலையுரை
எழுதி முற்றும் என்பதும் வரையப் பெற்றிருந்தன'

என்கிறார். உ.வே.சாமிநாதையர் கம்பராமாயணச் சுவடிகள் 18-ஐ தேடித் தொகுத்து வைத்திருந்தார். இந்த 18 சுவடிகளும் சென்னை பெசன்ட் நகரிலுள்ள டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையத்தில் உள்ளன. இந்தச் சுவடிகளைப் பயன்படுத்தி டாக்டர்.உ.வே.சாமிநாதையர் நூல் நிலையப் பதிப்பாக ஸ்ரீ கம்பராமாயணம் சுந்தரகாண்டம் பல பிரதிகளை (சுவடிகளை) ஆராய்ந்தும், ஸ்ரீ ஐயரவர்களின் குறிப்புகளின் உதவி கொண்டும் திருத்திய மூலபாடம், பதவுரை, விளக்கவுரை முதலியவற்றுடன் 1957-இல் மிகவும் செம்மையாகப் பதிப்பிக்கப்பட்டது.  இந்த சுந்தரகாண்டப் பதிப்பு கூட்டு முயற்சியாதலின் பதிப்புரை எழுதியவர், இந்தப் பதிப்புக்குத் தமக்கு உறுதுணை செய்தோர் திருப்பெயர்களையே குறிப்பிட்டுள்ளார். தமது திருப்பெயரைத் தனியே குறிப்பிடவில்லை.  ஸ்ரீ கம்பராமாயணம் சுந்தர காண்டம் இரண்டாம் பதிப்பு டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலைய வெளியீடாக (மறுபதிப்பு) 1999-இல் வெளியிடப்பட்டது. இந்த சுந்தரகாண்டம் பதிப்புரையின் 19-ஆம் பக்கத்தில் உள்ள பின்வரும் செய்தியையும்  பார்ப்போம்.

""இச்சுவடிகளுள் சிறந்தனவாகக் கொண்டவை பற்றிச் சில கூறுவோம். எண் 366 ஸ்ரீ இரத்தினக் கவிராயர் வீட்டுப்பிரதி;  அது கொல்லம் 806 (கி.பி.1630)-ல் எழுதப்பெற்றது; எண் 358, கொல்லம் 918 (கி.பி.1743)-ல் தொடங்கி, கொல்லம் 363, (கி.பி.1777)-ல் முடிவு பெற்றது. இதன் முடிவில், நாலு தேசங்களிலுமுள்ள இராமாயணச் சுவடிகள்; 49-ஐ பாடம் வைத்துக்கொண்டு சோதித்துக் கொல்லம் 918-ஆம் ஆண்டு முதல் 953-ஆம் ஆண்டு ஏவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 9-ந் தேதி வரை பிழை திருத்தி இராமாயணம் திருவேங்கடம் எழுதி வைத்த ஏடு 977-ஆம் ஆண்டு கோட்டாற்றில் வைத்தியநாதன் செட்டியார் இராமாயணம் வாசிக்க வைத்த போதும் இராமஸ்வாமியும் ஒரு தரம் பிழை பார்த்தான்'' என்ற குறிப்பு காணப்படுகிறது. அன்றியும், ஒவ்வொரு காண்டத்தின் இறுதியிலும் அது எழுதி முடிந்த காலமும் குறிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, "பழைய ஓலைச் சுவடிகளில் எந்த ஆண்டு, எந்த மாதம் என்னும்  குறிப்பேதும் இல்லை' என்று கூறுவோரின் கருத்து பிழையானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com