உளவியல் உத்தி

அந்த வீட்டுத்தலைவி அழகும் இளமையும் உடையவள். அவள் கணவனோ  அறிவுக்கூர்மை உடையவன்.
உளவியல் உத்தி


அந்த வீட்டுத்தலைவி அழகும் இளமையும் உடையவள். அவள் கணவனோ அறிவுக்கூர்மை உடையவன். அவர்கள் வீட்டு மாட்டுக் கொட்டகையில் ஓர் எருமை மாடு கட்டப்பட்டிருந்தது. வலிமையும் திமிர்ந்த செருக்கும் உடைய அந்த மாட்டுக்குக் கூர்மையான கொம்புகளும்இருந்தன.

ஒரு நாள் நள்ளிரவில் அந்த எருமை மாட்டுக்கு தான் தங்கியிருக்கும் கொட்டில் பிடிக்கவில்லை. காரணம், கொட்டிலின் தரை முழுவதும் சேறாகிக் கிடந்தது. எருமையின் கண்கள் சிவந்தன. அது மெல்ல கனைத்துப் பார்த்தது. வீட்டில் உள்ளவர்கள் தூங்கிவிட்டனர். ஊரிலும் எவரும் விழித்திருப்பதாகத் தெரியவில்லை. இரவு நகர்ந்து விடியலை நெருங்கிக் கொண்டிருந்தது.

எருமை தன்னைக் கட்டியிருந்த கயிற்றை அறுத்துக்கொண்டு வெளியே வந்தது. வெளிப்பக்கத்தில் இருந்த வேலியைத் தன் கொம்பால் நீக்கி அப்பால் எறிந்தது. பக்கத்தில் தண்ணீர் தேங்கியிருந்த வயலில் இறங்கியது. அதைக் கண்டு அங்குள்ள மீன்களெல்லாம் சிதறி ஓடின. அங்கே வள்ளைக்கொடி படர்ந்து கிடந்திருந்தது. அதைக் காலால் மிதித்துச் சிதைத்தது. பின்பு அந்த வயலில் மலர்ந்திருந்த தாமரை மலரை நன்றாகத் தின்று நிறைவுற்றது.

விடியற்காலையில் தோழி கொட்டகைக்கு வந்து பார்த்தபோது, அந்த எருமை கட்டுத்தறியில் வந்து ஒன்றும் அறியாதது போல் நின்று கொண்டிருந்தது. நல்ல விவரமான எருமை மாடுதான் என்று மனத்தில் எண்ணிக்கொண்டே திரும்பிப் பார்க்கையில், பரத்தை இல்லத்திலிருந்து வந்த தலைவனும் "அது போலவே' நின்றுகொண்டிருந்தான்.

தோழி, இப்போது தலைவனை நோக்கிக் கூறத் தொடங்கினாள், ""கொட்டிலை விட்டு நீங்கிப்போய் வயலில் பல வண்டுகள் மொய்க்கும் தாமரைமலரைத் தின்று வந்த எருமை வாழ்கின்ற ஊர்க்குத் தலைவனே! உங்களைப் பற்றி இந்த ஊரார் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? நீங்கள் வேறு ஒரு பெண்ணோடு வாழ்வதாகச் சொல்கிறார்கள். நாங்கள் சொல்லவில்லை. அப்படிச் சொல்வதற்கு நாங்கள் யார்? எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. தலைவி எப்படிப் போனால் உங்களுக்கு என்ன? நீங்கள் உங்கள் விருப்பப்படியே செல்லுங்கள்'' என்கிறாள். சொற்களால் தலைவனைத் துளைக்கிறாள். அவன் விடை எதுவும் கூறவில்லை. அவனது குற்ற உணர்வு அவனைத் தலைகுனிய வைத்திருந்தது.

இப்படி அவள் சொல்வதற்கு மாறாக, ""எருமை மாடே! உனக்கு இங்கு என்ன குறைச்சல்? இரவில் இரைச்சல் போடாமல், யாருக்கும் தெரியாமல் எங்கோ போய்க் கிடந்துவிட்டு வருகிறாயே... உனக்கு அறிவிருக்கிறதா?'' என்று கேட்டிருப்பாளேயானால், அவனும் செருக்கோடு "நான் அப்படித்தான் இருப்பேன். உன் வேலையைப் பார்' என்று சொல்லியிருப்பான். குற்ற உணர்வு புலப்பட நின்றிருக்க மாட்டான்.

இப்படிச் சொல்லாமல், அப்படிச் சொல்வதுதான் சங்க அகப்பாடலின் கருத்துப் புலப்பாட்டு உளவியல் உத்தியாகும். இதோ, அள்ளூர் நன்முல்லையாரின் பாடல்:

சேற்றுநிலை முனைஇய செங்கண் காரான்
ஊர்மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
கூர்முள் வேலி கோட்டின் நீக்கி
நீர்முதிர் பழனத்து மீன்உடன் இரிய
அம்தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
வண்டுகளது பனிமலர் ஆகும் ஊர
............. ............. ............. ............. ............. ............. ............. .............
சென்றீ, பெரும நின் தகைக்குநர் யாரோ? (அகநா. 46)
-முதுமுனைவர் அரங்க. பாரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com