தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்!

உபயோகத்திற்குப் பிறகு வீசியெறியப்படும் நடைமுறை தற்போதய நவீன கால நடைமுறை.
தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்!

உபயோகத்திற்குப் பிறகு வீசியெறியப்படும் நடைமுறை தற்போதய நவீன கால நடைமுறை. ஆனால்,  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு  நமது சங்ககால இலக்கியமான கலித்தொகையில் இந்தப் "பயன்படுத்து-வீசியெறி' (யூஸ் அண்டு த்ரோ) முறை தெள்ளத்தெளிவாகக் கூறப்பட்டுள்ளது வியப்பளிக்கிறது!

இருட்டுப் பாதையில் மாட்டிக்கொண்டவள் குருடனின் கருப்புக் கைப்பிடியைப் பற்றிக் கொள்வதைப் போல விதி சிலரை வீசிப் போட்டுவிடுகிறது. கேள்விகளின் வேள்வித் தீயில் கேட்பாரற்றதாய் சிலரது வாழ்க்கை மாள்வதிலும் வாழ்வது கொடுமை, வாழ்வதிலும் மாள்வது கொடுமையாய் வாழ்க்கை சிலரை அந்தகாரத்தில் தனிக்கிறது.

யாருக்கோ, யாரோ, எங்கோ, என்னவோ செய்வது, யாரையோ, ஏதோ ஒருவித தாக்குதலை நடத்திவிடுகிறது; ஏன் என்ற கேள்வியை நிதர்சனமானது விதியென்று மழுப்புகிறது. குற்றத்தை மறைக்க மேலும் குற்றமே பாபத்தின் சின்னமாக சம்பிரதாயங்களின் கேள்வி-பதில் வழக்குகளில் சிக்கியதாய்  பெண்கள் சிலரின் வாழ்க்கையானது கூண்டிலேயே நின்றுகொண்டிருக்கிறது. 

மன்றத்தில் நிற்பதே சிறைச்சாலையாகவும், நீதி விசாரணைகளே தண்டனைகளாகவும், தீர்ப்பு வழங்கப்படாத விசாரணைகளில் கூண்டுகளிலேயே நிற்பவர்களாகக் காலங்களாக பெண்கள் சிலரின் வாழ்க்கை மெளனத்தைப் பிணை கொடுத்து தன்னை மீட்காமல் விடுகின்றது. 

வெற்றுத் தாள்களின் கையொப்பமாகி மற்றவரால் நிரப்பப்பட்டவராய் சற்றேனும் இளைப்பாராமல் கண்ணீரின் கானல் நீரால் மெளனத்தில் எழுதி, அந்தப் பெண்களின் உணர்ச்சிகள் முற்றுப்புள்ளிகளாய் வெளியேற முயல்கின்றன.

ஆனந்தமயமாய் வாழ்ந்திருந்தது எல்லாமே, அரிதாரம் பூசிவந்த விதியின் மாயக் காட்சிகளாய், நானந்தமாய் தாழ்வுபட்டேன் என்பதாக, அவதாரம் பேசிவந்த அனுதாபங்களின் பார்வைகளாய், அந்தப் பெண்கள் தம்மைக் கடந்துபோகும் மெளனமான கேள்விகளில் காயமான பதில்களாகின்றன. கேள்விமயமான மெளனங்கள் தம்மைக் கடக்கும் போதெல்லாம், இழந்துவிட்ட கடந்தகாலத்தின் நிகழ்கால வெறுமைகளில் அந்தப் பெண்களின் தவிப்புகளுக்கு ஏகாந்த வெறுமைகளே துணையாகின்றன.

சுகிக்கும்வரை இன்பத்தின் ஊற்றாகவே குடிக்கப்பட்ட பெண்கள் சுகிக்க இனி ஏதுமில்லை என்றானதாய் வீசியெறியப்படும்போது, அந்தப் பெண்களின் கர்ப்பவாசலும், கர்ப்பவாசமும் கடவுளின் சாபமாகின்றன. அருந்தும் பானத்திற்கு இருக்கும் இன்பமதிப்பு, அந்தப் பானம் இருந்த கிண்ணத்திற்கு இல்லை. குப்பையாய் வீசியெறியப்படுவதில் அந்தப் பெண்களின் நிராதரவிற்கு மூடிய கதவுகளே சாட்சிகளாகின்றன. இதை "தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர், வேள் நீர் உண்ட குடை ஓரன்னர்' என்ற பாடல் வரிகள் எடுத்துரைக்கின்றன.

உள்ளத்தில் குடியேறியதாய் கொண்டாடப்பட்டவன் கள்ளத்தில் உடல் மட்டும் கட்டுண்டு சென்றவன் என்றால், அந்தப் பெண்களின் வீட்டின் நிசப்தங்கள் அநாதை ஓலங்களாகின்றன. குடியேறிக் கொண்டாட்டமாகி, குதூகலமாயிருந்த வீட்டினை வாழ்ந்த வீடு அவன் வெளியேறி வெறும் சுடுகாடு ஆனதுபோல, அந்தப் பெண்களின் சுகங்களின் ஞாபகங்கள் மூச்சுகளின் முட்களாக்குகின்றன.

 (பா.வரி- நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்).

இச்சை மட்டும் இழுத்துவந்த உறவில் இன்பக் காரணியே துன்பக் காரணியாய், பச்சைமலை வெங்கதிரில் எரியும் கருகி, பார்ப்பவர்முன் தனிமைக் காரணமாய், அந்தப் பெண்களின் உணர்வுகள் மற்றவர்களின் பார்வைகளால் கொத்தப்படுகின்றன. சூடிய பூவின் ஆட்டமும் வாசமும் சந்தோஷ வண்ணங்களெல்லாம் வாடியபின்னே அறுத்து வீசியே வீதியில் குப்பையாய் போடுவதாய் அந்தப் பெண்களின் கடந்தகாலங்கள் நிகழ்காலக் குப்பைகளாகின்றன. (பா. வரி- கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர்  சூடினர் இட்ட பூ ஓரன்னர்).

வேட்டை நாய்கள் துரத்திய விதியின் ஓட்டத்தில், வேங்கை மான், காட்டுப் புலியிடம் கசங்கலாய் கதறிமுடியாத முடிவதாய் அந்தப் பெண்களின் வேதனைகள் தமது துயர்தீரத் துன்பத்திடமே மன்றாடுகின்றன. கண்ணீர் நதியின் கைவிடப்பட்ட சுழலில், கரை ஏற, கானல் நீரைக் கையில் பிடித்துக்கொண்டு, ஏங்குகிறார்கள் அந்தப் பெண்கள்.  தொடுவானத்தைக் கரையென்று கண்டு, கரையேற நீந்துகிறார்கள்.

கைபிடித்த கைகள், கைவிட்ட கைகள் என்று புரிவதற்குள், இழந்தவளுக்கு இழப்பே துணையென்று புரிவதற்குள் அந்தப் பெண்களின் கடந்த, நிகழ் காலமும், எதிர்காலத்தின் முற்றுப்புள்ளிகளாகிவிட்டன. 

இப்படிப் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியப்படும் பெண்களை, கலித்தொகையில் இடம்பெறும் (பாலைத்திணை) "இலங்குஒளி மருப்பின்' எனத் தொடங்கும் 22ஆவது பாடல் காட்சிப்படுத்துகிறது. "தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்' போன்ற வரிகள்... சிந்தனைக் குளத்தில் விழுந்த நிதர்சனக் கல்லினால் வட்டவட்டமாய் அலைவிரியும் நினைவுகள்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com