கால்டுவெல் மீது  ஏன் இந்தக் கசப்பு?

கிறித்தவ சமயப் பணியாளராகத் தமிழகம் வந்த கால்டுவெல் (1814}1891) தம் பணிகளுக்கிடையில் கிடைத்த ஓய்வு நேரத்தை வரலாறு, மொழியியல், அகழாய்வு முதலிய துறை ஆய்வில் செலவிட்டார்.
கால்டுவெல் மீது  ஏன் இந்தக் கசப்பு?

கிறித்தவ சமயப் பணியாளராகத் தமிழகம் வந்த கால்டுவெல் (1814-1891) தம் பணிகளுக்கிடையில் கிடைத்த ஓய்வு நேரத்தை வரலாறு, மொழியியல், அகழாய்வு முதலிய துறை ஆய்வில் செலவிட்டார். அவரது ஆய்வுகளின் விளைவாக திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலும், திருநெல்வேலி மாவட்ட வரலாறும், கொற்கை-காயல் அகழாய்வுகளும் நமக்குக் கிடைத்தன. அவர் இயற்றிய ஒப்பிலக்கண நூலின் காரணமாக 19-ஆம் நூற்றாண்டில் தமிழ் வளர்த்த பெரியோர்களுள் தலைசிறந்த ஒருவராக அவர் இன்றும் போற்றப்படுகிறார்.

அவர் இயற்றிய "திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்' 1856-ஆம் ஆண்டில் வெளிவந்தது. அவராலேயே திருத்தப்பட்டுச் செம்மையாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு 1875-ஆம் ஆண்டில் வெளிவந்தது. ஜே.எல்.வயட், டி.இராமகிருஷ்ண பிள்ளை ஆகிய இருவராலும் திருத்தப்பட்ட (160 பக்கங்களுக்கு மேல் நீக்கப்பட்ட பதிப்பு) 1913-இல் வெளிவந்தது. இது மறுபதிப்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. இவற்றுள் 1875-ஆம் ஆண்டுப் பதிப்பே கால்டுவெல்லின் ஆய்வை அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தும் நூலாக அறிஞர் பெருமக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இப் பதிப்பைப் பின்பற்றி 2008-ஆம் ஆண்டில் கவிதாசரண் வெளியிட்ட பதிப்பையே நாமும் ஆதாரமாகக் கொள்வோம்.

திராவிட மொழிக் குடும்பம் பற்றிய கருத்தும், அது வடமொழிக் குடும்பத்தோடு தொடர்பற்றது என்னும் கருத்தும் 1816-ஆம் ஆண்டிலேயே முன்வைக்கப்பட்டது. அன்றைய ஆங்கில அரசில் பணிபுரிந்த பிரான்சிஸ் வைட் எல்லீஸ் என்பவர் அவ்வாண்டில் தெலுங்கு இலக்கண நூல் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில் இதுபற்றி விளக்கியுள்ளார். 

இக்கருத்தை மிக விரிவாகவும், விளக்கமாகவும் வகுத்துத் தந்த பெருமை கால்டுவெல்லுக்கு உரியது.

கால்டுவெல்லின் மிக விரிவான ஒப்பிலக்கண நூலில் நாம் காணும் ஆராய்ச்சி முடிவுகள் அனைத்தையும் முழுமையாக எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணுவது தவறு. முரண்படும் அறிஞர்கள் தத்தம் வாதங்களை எடுத்து வைத்து, ஆதாரங்களின் அடிப்படையில் தங்கள் கருத்துகளை நிலைநாட்டலாம். ஆயினும் அவை அளவை (தருக்க) நூலின் அடிப்படையிலும், திறனாய்வு முறையிலும் அமைந்திருக்க வேண்டும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

""தமிழ் என்னும் பெயர் தவறு. அதன் சரியான பெயர் "தமிற்' என்றே இருக்க வேண்டும். "ற்' என்னும் எழுத்து காலப்போக்கில் மாறுதலை அடைந்து "ழ்' எழுத்து ஆகி தமிழாகிவிட்டது'' என்கிறார் கால்டுவெல். ஆனால் தமிழைத் "தமிற்' என்றதற்கு ஆதாரம் எதுவும் கூறவில்லை'' என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால், கால்டுவெல் அவ்வாறு எழுதவில்லை என்பதே உண்மை.

தமது நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ள கால்டுவெல் தமிழைப் பெரும்பாலும்"பஹம்ண்ப்' என்றே எழுதுகின்றார். ""பஹம்ண்ப்' என்னும் பெயரைத் பஹம்ண்ŗ (தமிழ்) என எழுதுவதே சரி. ஆனால் ழகரத்தை (ŗ) ļ (ள) என மாற்றி ஒலித்தால் அது தமிள் எனப் பெரும்பாலும் ஒலிக்கப்படுகிறது. ஐரோப்பியர்கள் அதைத் தமுல் எனத் தவறாக ஒலிக்கின்றனர்'' என்று கால்டுவெல் எழுதியதைப் பார்க்கும்போது எந்தப் பதிப்பைப் பார்த்து அந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது என்று தெரியவில்லை.

தமிழ் எழுத்துகளை ஆங்கிலத்தில் குறிப்பதற்குத் தாம் பயன்படுத்திய எழுத்துப்பெயர்ப்பு (பழ்ஹய்ள்ப்ண்ற்ங்ழ்ஹற்ண்ர்ய்) முறை பற்றிக் கால்டுவெல் விளக்கியுள்ளதைக் கவிதாசரண் பதிப்பின் 161-162 பக்கங்களில் காணலாம். அதன்படியே தமிழ் எழுத்துகளைத் தமது ஆங்கில நூலில் கால்டுவெல் பயன்படுத்தும் போது ல-ஐ, ள-ļ , ழ-ŗ என்பதுபோல சில குறிகளோடு பயன்படுத்துகின்றார். ஆகவே தமிழ் என்பதை பஹம்ண்ŗ என்றே பல இடங்களில் எழுதுகின்றார். தமிற் என்று அவர் வழங்கவில்லை என்பதுதான் உண்மை. 

கால்டுவெல் தமது ஒப்பிலக்கண விரிவுரைகளில் "உத்தேசமாக,  போன்ற, பார்வைக்கு' எனும் உறுதியற்ற சொற்களை ஆங்கிலத்தில் உபயோகித்து, கற்பனையாக எழுதியுள்ளார் எனப் பொதுவான ஒரு குற்றச்சாட்டு  சிலரால் முன்வைக்கப்படுகிறது. எந்த இடத்தில் கால்டுவெல் இவ்வாறு எழுதியுள்ளார் என்பதை அறிந்தால்தான் அவர் சரியாக எழுதியுள்ளாரா, தவறாக எழுதியுள்ளாரா எனக் கண்டுபிடிக்க இயலும்.  நூற்றுக்கு நூறு மடங்கு உறுதியில்லாத கருத்தினை எழுதும்போது "உத்தேசமாக', "போன்ற' - போன்ற சொற்களைப் பயன்படுத்துவதே அறிவுடைமைக்கு அழகாகும் என்பதை யாருமே மறுக்க இயலாது.

தமிழின் ஐவகை இலக்கணத்தில் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமுமே கால்டுவெல்லால் ஒப்பாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன என்பது மற்றொரு குற்றச்சாட்டு. எழுத்திலக்கணத்தையும் சொல்லிலக்கணத்தையும் அடிப்படையாகக்கொண்டே மொழியியல் இயங்குவது என்பதையும், பொருள், யாப்பு ஆகிய இலக்கணங்கள் மொழியியல் எல்லைக்குள் மிகுதியும்  இடம் பெறுவதில்லை என்பதையும் விளக்கத் தேவையில்லை.

"பண்டைய தமிழர்களுக்குச் சமய நூல்கள் கிடையாது'  எனக் கால்டுவெல் எழுதியுள்ளதாகக் கூறப்படுவதும் தவறு.   தமது நூலின் 142-143 -ஆம் பக்கங்களில் தேவாரம், திருவாசகம், திருவிளையாடல் புராணம், திருத்தொண்டர் புராணம், பிரபுலிங்க லீலை முதலிய சைவ சமய நூல்களையும் அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர் முதலிய சைவ சமயக் குரவர்களையும் பற்றிக் கால்டுவெல் எழுதியிருப்பது அவர்கள்  கண்ணில் படவில்லை போலும்!

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஐரோப்பாவில் மொழிநூல் (டட்ண்ப்ர்ப்ர்ஞ்ஹ்) ஆய்வுகள் தொடங்கின. 20-ஆம் நூற்றாண்டிலேயே இது மொழியியல் (கண்ய்ஞ்ன்ண்ள்ற்ண்ஸ்ரீள்) எனப் பெயர் பெற்றது. 1814-ஆம் ஆண்டில் பிறந்த கால்டுவெல் தமது இளமையில் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலம் மொழிநூலின் தொடக்கக் காலம் ஆகும். ஆகவே, 20-21-ஆம் நூற்றாண்டுகளில் பெருவளர்ச்சி கண்ட மொழியியலோடு கால்டுவெல் காலத்து மொழிநூலை ஒப்பிடுதல் பொருத்தமல்ல. (எ-டு: கால்டுவெல் மறைந்த 1891-ஆம் ஆண்டில் பிறந்த வையாபுரிப் பிள்ளையின் மொழியியல் கருத்துகளைக் கால்டுவெல்லின் கருத்துகளோடு பொருத்திக் காண முயல்வது பொருந்தாச் செயல் எனச் சொல்ல வேண்டுவதில்லை). 

ஆயினும், தொடக்கக் காலத்தில் தாம் பயின்ற மொழிநூல் அறிவைத் தம் முயற்சியாலேயே பெருக்கிக்கொண்டு ஆறு திருந்திய திராவிட மொழிகள், ஆறு திருந்தா மொழிகள் எனப் பன்னிரண்டு மொழிகளை ஆராய்ந்து, அத்துடன் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், சித்தியம் ஆகிய மொழிகளை உறழ்ந்து பல மொழியியல் உண்மைகளைக் கால்டுவெல் கண்டறிந்து உணர்த்திய முறைமை இன்றும் பெருவியப்பைத் தருவதாகும். கால்டுவெலின் நூல் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் அது தன்னிகரற்ற நூலாகவே மொழியியல் துறையில் இடம்பெற்றுள்ளது என்பதை மறுக்க இயலாது.

பிற்காலத்தவராகிய பேராசிரியர்களான தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், சா.சுப்பிரமணியன், வி.அய்.சுப்பிரமணியம், ச.அகத்தியலிங்கம், செ.வை.சண்
முகம், ந.குமாரசாமிராஜா, தாமஸ்பரோ, எம்.பி.எமனோ, எஸ்.ஆரோக்கிய நாதன் முதலிய மொழியியல் வல்லுநர்களால் கால்டுவெல்லின் ஆய்வு முடிவுகளுள் பெரும்பாலானவை இன்றும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதையும் யாரும் மறுக்க இயலாது.

கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஆதாரம் காட்டாமல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தல், இருப்பதை இல்லாததாகக் கூறுதல், இல்லாததை இருப்பதாகக் கூறுதல் போன்ற முரண்களை அளவை நூலுக்கு ஒவ்வாத வகையில் எழுதுதல், மனம்போன போக்கில் சொற்களைக் கையாளுதல், (எ-டு:  "மேற்கத்திய அறிஞர்களும் காலனி மதப் பரப்பாளர்களும் ஆதாரமின்றிப் புனைவதில் கைதேர்ந்தவர்கள்' போன்றவற்றை ஆன்றோரின் கட்டுரையில் காணுதல் அரிது.

திறனாய்வு முறைப்படி "காய்தல் உவத்தல் அகற்றி' ஆராய்வதைவிட, கால்டுவெல்லைக் கசப்போடு கண்ணோக்கி அவருக்குத் தமிழறிஞர் உலகில் இருக்கும் மதிப்பையும் மரியாதையையும் எப்பாடு பட்டாவது கெடுத்துவிட வேண்டும் என்பதில் சிலர் உறுதியாக உள்ளனர் என்பதைத்தவிர வேறென்ன சொல்வது?

பன்னிரண்டு திராவிட மொழிகளையும் மொழியியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்த கால்டுவெல், அவை ஒரு தனி மொழிக் குடும்பம் என்பதை நிறுவியதோடு, அவை வடமொழியுடன் உறவுடையவை அல்ல என உறுதிபட மெய்ப்பித்தார். அவ்வகையில் வடமொழியுடன் நீங்காத உறவு கொண்ட பிராமணர்களைத் திராவிடர்களோடு ஒப்பிட்டும் ஆராய்ந்தார். இன வகையில் பிராமணர்கள்(ஆரியர்கள்) வேறு, திராவிடர்கள் வேறு எனவும் மெய்ப்பித்தார். இன்றுவரை அவரது கருத்தைத் தவறு என அறிஞர்கள் யாரும் மெய்ப்பிக்கவில்லை. 

மொழியியல், இனவரைவியல் அடிப்படையில் கால்டுவெல்லின் கருத்தைத் தவறென மெய்ப்பிப்பதை விட்டுவிட்டு, கால்டுவெல் பிராமணர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையில் பகைமையைத் தோற்றுவித்த துரோகி என்பதுபோல எழுதுவது நகைப்பைத் தருகிறது. அறிவை அறிவால்தான் வெல்ல வேண்டுமே தவிர, பொய்யான (ஆதாரமில்லாத) குற்றச்சாட்டுகளால் அல்ல என்பதனை கால்டுவெல்லை விமர்சிக்க முற்படுவோர் தெளிவாகப் புரிந்து கொள்வதே அறிவாண்மைக்குப் பொருத்தமானதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com