இந்த வாரம் கலாரசிகன் - (01-05-2022)

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக ந. அருள் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை மட்டுமல்ல, மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.
இந்த வாரம் கலாரசிகன் - (01-05-2022)

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக ந. அருள் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை மட்டுமல்ல, மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. அவர் பதவி ஏற்றுக்கொண்ட உடனேயே தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வழங்கப்படும் சிறந்த நூல்களுக்கான விருதுகள், பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சராக தங்கம் தென்னரசும், இயக்குநராக ந. அருளும் இணையும்போது, தமிழ் புதிய பரிமாணத்தை நோக்கி விரையும் என்று எதிர்பார்க்கலாம்.

2017, 2018-ஆம் ஆண்டுகளில் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களுக்கான ஆசிரியர், அந்த நூலை வெளியிட்ட பதிப்பகத்தார் என 146 பேருக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. விருது பெற்றவர்களில் நண்பர்கள் ஜனனி ரமேஷும், கவிஞர் ராசி அழகப்பனும் இடம்பெற்றிருந்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

2017-ஆம் ஆண்டுக்கான விருதுகள், ஐந்து ஆண்டு காலதாமதமாக 2022-இல் வழங்கப்படுவது என்பதை நினைக்கும்போது, வருத்தமாக இருக்கிறது. அந்த ஆதங்கத்தைப் போக்கும் விதத்தில், வரும் ஆண்டுகளில் சிறந்த நூல்களுக்கான விருதுகள் அந்தந்த ஆண்டிலேயே வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ் வளர்ச்சித்துறை மேற்கொள்ளும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருக்கிறார்.

அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டதுபோல, தமிழ் வளர்ச்சித் துறையால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் 33 தலைப்புகளில் பல தலைப்புகளுக்கான சிறந்த நூல்கள் வெளிவரவில்லை. வாசகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாதது காரணமா, இல்லை அந்தத் தலைப்புகளில் புது நூல்கள் படைக்க எழுத்தாளர்கள் முன்வராதது காரணமா என்கிற கேள்வி எழுகிறது. அந்தக் குறையை அமைச்சர் தங்கம் தென்னரசின் கீழ் இயங்கும் ந. அருளின் தலைமையிலான தமிழ் வளர்ச்சித்துறை களையும் என்று நம்பலாம்.

2019, 2020, 2021-ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளை விரைந்து வழங்க வேண்டும். கொள்ளை நோய்த் தொற்று காலத்தில் மிக அதிக அளவில் படைப்புகள் உருவாகி, உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கும் விடிவுகாலம் வர வேண்டும்.


-----------------------------------------------



கடந்த மாதம் விஜயா பதிப்பகம் நிறுவனர் வேலாயுதம் அண்ணாச்சியின் முத்துவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவை சென்றபோது, எழுத்தாளர் நாஞ்சில் நாடனை சந்தித்தேன். நானும் டாக்டர் எல்.பி.தங்கவேலுவும் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் தனது "கைம்மண் அளவு' புத்தகத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். நான் சற்று நெளிந்தேன். ஏனென்றால், அந்தப் புத்தகத்தை நான் படிக்கவில்லை.

அந்தப் புத்தகத்தை நான் படிக்கவில்லை என்பது வேலாயுதம் அண்ணாச்சிக்கு எப்படித் தெரிந்தது? அடுத்த நாள் அவரை சந்திக்க விஜயா பதிப்பகம் சென்றபோது, "கைம்மண் அளவு' புத்தகத்தை எனக்குத் தருவதற்குத் தயாராக வைத்திருந்தார் அவர்.

கவிதை எழுதுபவர்களுக்குக் கட்டுரை எழுத வராது. கவிதையும் கட்டுரையும் எழுதுவார்கள், ஆனால் அவர்களது புனைவு கதைகள் மிகவும் சுமாராகத்தான் இருக்கும். இவை மூன்றிலுமே சமர்த்தர்கள் செவ்விலக்கியம் குறித்த புரிதல் இல்லாமல் இருப்பார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரால் மட்டும்தான் எல்லாத் துறைகளிலும் முத்திரை பதிக்க முடியும். அந்தப் பட்டியலில் நாஞ்சில் நாடனுக்கு முக்கியமான இடமுண்டு.

"கைம்மண் அளவு' புத்தகம், பருவ இதழ் ஒன்றில் அவர் எழுதிய 49 கட்டுரைகளின் தொகுப்பு. அவர் எழுதிய "தீதும் நன்றும்', "பாடுக பாட்டே' வரிசையில் "கைம்மண் அளவு' இணைகிறது.

அவர் கலந்து கொண்ட நிகழ்வுகளில் அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்களும், அவரது வாழ்க்கையில் பார்த்த, எதிர்கொண்ட சம்பவங்கள் குறித்த பதிவும், சமூக பிரச்னைகள் பற்றிய அவரது பார்வையும் ஒவ்வொரு கட்டுரையிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு கட்டுரையின் கடைசிப் பத்தியும் சிறுகதை பாணியில் "நச்' சென்று முடிகிறது. ஆங்காங்கே விரவிக்கிடக்கும் பாடல்கள் கட்டுரைகளின் இலக்கியத் தரத்தை உயர்த்துகின்றன.

நான் ரசித்த சில கடைசி வரிகள் இவை - "தமிழர் என்றொரு இனமுண்டு' என்றும், "தனியே அவருக்கொரு குணமுண்டு' என்றும் முழங்கினார்கள் போன தலைமுறைப் புலவர்கள். அந்தத் தனிக் குணம் என்ன என்று அறியும் ஆர்வம் மீதுருகிறது!''

""கல்லூரி தமிழ் விரிவுரையாளர் புலம்பினார்... மாணவர்கள் தம் ஆசிரியர்களை "ஃபிசிக்ஸ் போகுது, கெமிஸ்ட்ரி போகுது' என்று சொல்ல மாட்டார்கள். ஆனால், காதுபடவே "தமிழ் போகுது' எனக் கிண்டல் செய்கிறார்கள்''

""உலகினுள் இல்லதற்கு இல்லை பெயர் என்கிறது பழமொழி நானூறு, உலகத்தில் இல்லாத பொருளுக்குப் பெயர் இருக்க இயலாது என்ற பொருளில். ஆனால், இல்லாத பொருளுக்கு நம்மிடம் ஒரு பெயர் இருக்கிறது, சமூக நீதி!''
""இரவல் புத்தகங்கள் வளர்க்கக் கொடுத்த பிள்ளைபோல, கொடுக்க மனமில்லாவிட்டாலும் திருப்பிக் கொடுக்காமல் தீருமா?''


-----------------------------------------------

வீட்டில் புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தேன். பாலகுமாரனின் "அகல்யா' கண்ணில் பட்டது. அதற்குப் பிறகும் அதை எடுத்துப் படிக்காமல் இருக்க முடியவில்லை.

நான் "சாவி' வார இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது வெளியான பாலகுமாரனின் தொடர்கதைகள் "மெர்க்குரிப் பூக்கள்', "அகல்யா' இரண்டும்.

ஒவ்வொரு வாரமும் "அகல்யா' தொடர்கதையைப் படித்து, பிழை திருத்தி, வடிவமைத்து, அச்சுக்கு அனுப்பிய அந்த நாள்கள் நினைவுக்கு வந்தன. பிழை திருத்தும்போது இருந்த அதே சுவாரசியம் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் படிக்கும்போதும் இருக்கிறது. அதுதான் பாலகுமாரனின் "மேஜிக் டச்'.

எல்லோருக்கும் அவர் "எழுத்துச் சித்தர்', "எழுத்தாளர் பாலகுமாரன்'. ஆனால் எங்களுக்கெல்லாம் அன்றும் இன்றும் "பாலா'தான்.

-----------------------------------------------

கோதை ஜோதிலட்சுமியின் "தோட்டத்து ஊஞ்சல்' கவிதைத் தொகுப்பில் இருக்கும் கவிதை இது.
கவிதையின் தலைப்பு "மழை'.
உப்பரிகையில் நின்று
மழை ரசித்தல் வரம்
வானுக்கும் பூமிக்குமான
நீர்ச்சரங்கள்அழகு
மின்னலும் இடியும்
கொண்டாட்டத்தின் உச்சம்
தலைக்கு மேல்
வலுவான கூரை இருப்பின்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com