இந்த வாரம் கலாரசிகன் - (08-05-2022)

மதுரை நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில் ஆந்திரத்திலிருந்து பலர் தமிழகத்தில் குடியேறினார்கள். குடியேறினார்கள் என்பதைவிட அழைத்துவரப்பட்டனர் என்று கூறவேண்டும்.
இந்த வாரம் கலாரசிகன் - (08-05-2022)

மதுரை நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில் ஆந்திரத்திலிருந்து பலர் தமிழகத்தில் குடியேறினார்கள். குடியேறினார்கள் என்பதைவிட அழைத்துவரப்பட்டனர் என்று கூறவேண்டும். அதிகாரபூர்வமாகத் தமிழகத்தில் தெலுங்கர்களின் எண்ணிக்கை சுமார் 5 விழுக்காடு மட்டுமே என்று கூறப்பட்டாலும், தெலுங்கு பேசுபவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 20 விழுக்காடு அளவில் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

கேரள மாநிலத்தில் மலையாளத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவில் தமிழ் பேசுபவர்கள் இருப்பது போல, தமிழகத்தில் தமிழுக்கு அடுத்தபடியாகத் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான் அதிகம். நாயுடு, ரெட்டியார், ராஜுக்கள் போல நாயக்கர்கள் காலத்தில் தமிழகத்துக்கு பிராமணர்களும் அழைத்துவரப்பட்டனர். அப்படித் தமிழகத்துக்குக் குடிபெயர்ந்த தெலுங்கு பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர்தான் கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள்.

தியாகபிரம்மம் என்றும், தியாகையர் என்றும் அழைக்கப்படும் தியாகராஜ சுவாமிகள் திருவாரூரில் பிறந்து, திருவையாற்றில் வாழ்ந்து மறைந்த ராமபக்தர். ராம பக்திக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படும் தியாகராஜ சுவாமிகளின் தாய்மொழி தெலுங்கு என்பதால், அவர் ராமபிரான் மீது தெலுங்கில் பல கீர்த்தனைகளை இயற்றினார். இன்றளவும் கர்நாடக சங்கீத நிகழ்ச்சிகளில் அவரது கீர்த்தனைகள் முதன்மை பெறுகின்றன என்றால் அதற்குக் காரணம், அதில் இருக்கும் பக்தி ரசம்தான் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தியாகராஜ கிருதிகள் அனைத்தையும் தேடிப் பிடித்து, பட்டியலிட்டுப் பதிப்பித்த பெருமை இசை விமர்சகர் டி.எஸ். பார்த்தசாரதியைச் சாரும். ஏறத்தாழ 675-க்கும் மேற்பட்ட கிருதிகளை அதன் ராகங்களுடனும், ஸ்வர பிரஸ்தாரங்களுடனும் பதிப்பித்திருக்கிறார் அவர். ஆனால் அவற்றில் சுமார் 350 கிருதிகள் மட்டும்தான் சங்கீதக் கலைஞர்களால் பரவலாக இசைக் கச்சேரிகளில் கையாளப்படுகின்றன. பல கிருதிகள் இன்றைய இசைக் கலைஞர்களுக்குப் பாடாந்தரம் இல்லை.

அந்தக் குறையை அகற்ற முற்பட்டிருக்கிறார் பிரபல கர்நாடக இசைப் பாடகர் ஓ.எஸ். தியாகராஜன். கடந்த ஐந்து ஆண்டுகளாக முனைந்து செயல்பட்டு, இசைக் கலைஞர்களால் கையாளப்படாமல் இருக்கும் கிருதிகளை, டி.எஸ். பார்த்தசாரதியின் புத்தக ராக, தாள அடிப்படையில் தானே பாடிப் பதிவு செய்து வெளியிட இருக்கிறார்.

மூத்த இசைக் கலைஞர், இசை ஆச்சாரியர் என்கிற நிலையில் அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு ஓ.எஸ். தியாகராஜன் விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்தாக அவை இருக்கும். இதுவரையில் கச்சேரிகளில் கையாளப்படாத பல கீர்த்தனைகளை அவர்கள் எடுத்தாளவும், பாடாந்தரம் செய்து கொள்ளவும் வசதியாக அவர் வெளியிட இருக்கும், தியாகராஜ சுவாமிகளின் 675 கீர்த்தனைகளும் அடங்கிய இசைத் தொகுப்பு இருக்கும். இதன் அடுத்தகட்ட நீட்சியாகத் தமிழிசை மும்மூர்த்திகள், பாரதியார், பாரதிதாசன், ஊத்துக்காடு வேங்கடகவி உள்ளிட்டோரின் பாடல்களையும், ஓ.எஸ். தியாகராஜன் தனது குரலில் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும். இன்று மாலை சென்னை வாணி மஹாலில் நடக்க இருக்கும் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. நேரம் ஒத்துழைக்குமா என்று தெரியவில்லை.


----------------------------------------------------------------------


அரை நூற்றாண்டுக்கு முன்னால் இலக்கிய ஆர்வமுள்ள அரசியல்வாதிகள் ஏராளம் இருந்தனர். திராவிட இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைவர்கள் பலரும், இப்போது போலல்லாமல், முறையாகத் தமிழ் கற்றுத் தேர்ந்து, இலக்கியத்தில் ஆழ்ந்து தோய்ந்து தமிழ் முழக்கம் செய்தனர். எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸின் சட்டப்பேரவைத் தலைவர் பி.ஜி.கருத்திருமன் கம்பனில் ஆழங்கண்ட புலமை பெற்றவர். சிலப்பதிகாரத்தின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த புலமையால், தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் "சிலம்புச் செல்வர்' என்று அழைக்கப்பட்டார்.

இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் இலக்கிய ஆர்வலர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலான தமிழக அரசியல்வாதிகளால் தவறில்லாமல் தமிழ் எழுத முடியுமா என்பதே சந்தேகம். அவர்களுக்கு இடையிலும் சில தமிழ்ப் பற்றாளர்கள் தமிழ்ப் பணியைத் தங்களது அரசியல் பணியுடன் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஆவடிக்குமாரும் ஒருவர்.

தில்லியில் "தினமணி' நடத்திய அனைத்து தமிழ் அமைப்புகளின் மாநாட்டில்தான் நான் அவரை சந்தித்தேன். அனைத்திந்திய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் என்கிற முறையில் அவர் அதில் கலந்து கொண்டார். இணையத்தில் உலகத் தமிழ்ச் சாதனையாளர்கள் ஆவணப் பதிவு ஒன்றை உருவாக்கி, தமிழ்ச் சாதனையாளர்கள் குறித்துத் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறது அவரது அமைப்பு.

அதெல்லாம் இருக்கட்டும். ஆவடிக்குமார் தலைவராக இருக்கும் அனைத்திந்திய தமிழ்ச் சங்கம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாடு அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. "தமிழிலக்கியங்களில் உணர்வெழுச்சி' என்கிற தலைப்பிலான அந்த மூன்று நாள் கருத்தரங்கில் பலர் கலந்து கொண்டு தங்களது பார்வையைப் பதிவு செய்தனர். அந்தக் கருத்தரங்க ஆய்வுகள் ஆவடிக்குமாரின் கழக முரசு பதிப்பகத்தால் தொகுக்கப்பட்டு, இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்களில் தொடங்கி, பக்தி இலக்கியம், பாரதியார், பாரதிதாசன் படைப்புகள் என்று நகர்ந்து திரைக் கவிஞர்களின் பார்வை வரை, நவீனத் தமிழ்ப் புதினங்கள் வரை காணப்படும் உணர்வெழுச்சிகள் பல்வேறு கட்டுரையாளர்களால் இந்தத் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

பல கட்டுரைகள், கருத்தரங்க விவாதப் பொருளான உணர்வெழுச்சி குறித்துப் பேசவில்லை. ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்றாலும் தலைப்புக்குப் பொருந்தாத கட்டுரைகள் என்பதால் அவற்றைத் தனியாகத் தொகுத்திருக்கலாம். அதேபோல, கட்டுரைகளை இலக்கியக் கால வரிசைப்படி தொகுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

தமிழ்ப் பேராசிரியர்களின் கட்டுரைகளைவிட, பல முனைவர் பட்ட ஆய்வாளர்களின் கட்டுரைகளில் புதிய வெளிச்சம் தேடும் முனைப்பு காணப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து கலந்து கொண்டவர்களின் பங்களிப்பு எண்ணிக்கை அளவில் குறைவுதான் என்றாலும், இந்த ஆய்வுக் கோவைக்குக் கனம் சேர்ப்பவை அவர்களது கட்டுரைகள்.


----------------------------------------------------------------------


பேராசிரியர் ஹாஜாகனி ஒரு கவிதையை அனுப்பித் தந்திருந்தார். "தொற்று' என்கிற தலைப்பில் கவிஞர் மு.ஜாபர் சாதிக் அலி, கவிக்கோ ஹைக்கூ போட்டிக்கு அனுப்பியிருந்த கவிதை அது. நன்றாக இருந்தது. அதுதான் இந்த வாரத் தேர்வு.

விலகி நடந்தவர்களைக் கண்டு
விலகி நடந்தது
நிழல்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com